Published : 31 Oct 2018 10:31 AM
Last Updated : 31 Oct 2018 10:31 AM

டிங்குவிடம் கேளுங்கள்: சுற்றுலாவுக்குப் பணம் சேர்ப்பது எப்படி?

நிறங்களுக்கும் நல்லது கெட்டதுக்கும் தொடர்பு உண்டா, டிங்கு?

– ம. அஜய்குமார், 7-ம் வகுப்பு, தூய இருதய மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி.

நிறங்களுக்கும் நல்லது கெட்டதுக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்ல முடியாது. சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளில் இறந்தவர் வீடுகளுக்குச் செல்லும்போது வெள்ளை உடை அணிந்து செல்கிறார்கள். மேற்குலக நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் திருமணத்தின்போது வெள்ளை உடையை அணிகிறார்கள். இந்தியாவில் தீய சக்தி, எதிர்ப்பு, எதிர்மறை விஷயங்களுக்குக் கறுப்பு நிறத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

சீனாவில் நம்பிக்கைக்கும் உயர் தரத்துக்கும் கறுப்பு நிறத்தை  அடையாளமாகக் காட்டுகிறார்கள். மேற்குலக நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் துக்கம், தீய சக்தி, இறுதிச் சடங்கு போன்றவற்றுக்குக் கறுப்பைப் பயன்படுத்துகிறார்கள். மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் நல்லதுக்கும் பயன்படும் ஒரு நிறம், உலகின் வேறு பகுதிகளில் துக்கத்துக்கும் கெட்டதுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அப்படியென்றால் நிறத்தால் நல்லது, கெட்டது ஏற்படுவதில்லை என்று தெரிகிறதல்லவா, அஜய்குமார்.

எங்கள் குடும்பம் ஏழ்மையானது. ஒவ்வோர் ஆண்டும் பள்ளி சுற்றுலா செல்ல ஆசைப்படுவேன். ஆனால் பணம் கொடுக்க முடியாது. அடுத்த ஆண்டாவது நான் சுற்றுலா செல்வதற்கு எனக்கு ஒரு யோசனை சொல்ல முடியுமா, டிங்கு?           

– வே. கரிகாலன், செந்துறை.

என்னுடன் படித்த தோழி ஒருவர், மிகவும் ஏழ்மையானவர். ஆனால் எந்த ஆண்டும் பள்ளிச் சுற்றுலாவை அவர் தவற விட்டதே இல்லை. தினமும் வீட்டில் கொடுக்கும் ஒன்று, இரண்டு ரூபாய்களைக் கொண்டுவந்து, பள்ளிச் சிறுசேமிப்பில் கட்டிவிடுவார். எந்தக் காரணம் கொண்டும் அந்தச் சேமிப்பில் இருந்து பணத்தை எடுக்க மாட்டார். ஆண்டு இறுதியில் பள்ளிச் சுற்றுலா செல்லும் நேரத்தில் அவரிடம் கணிசமான பணம் சேர்ந்திருக்கும். அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாகச் சுற்றுலா சென்றுவிடுவார்.

சுற்றுலாவால் அவர் வீட்டுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு வராது. மகிழ்ச்சியோடு அனுப்பி வைப்பார்கள். தோழிக்கு இந்த யோசனையைக் கொடுத்தது, அவரது அப்பாதான். தங்களால் சுற்றுலா அழைத்துச் செல்ல முடியாது, அதே நேரத்தில் கல்விச் சுற்றுலா மிகவும் அவசியம் என்று அவர் நினைத்ததால், இப்படித் தினமும் சிறுகச் சிறுகச் சேமிக்கக் கற்றுக் கொடுத்தார்.

பள்ளியிலேயே அதிக முறை சுற்றுலா சென்றது அந்தத் தோழிதான். நீங்களும் இப்போதிருந்தே உங்களுக்குக் கிடைக்கும் பணத்தை ஓர் உண்டியல், அல்லது பள்ளி சேமிப்பில் சேர்க்க ஆரம்பித்துவிடுங்கள். அடுத்த ஆண்டு சுற்றுலா செல்வதற்குத் தேவையான பணம் கிடைத்துவிடும். வீட்டில் உள்ளவர்களுக்குக் கஷ்டம் கொடுக்காமல், மகிழ்ச்சியாகச் சுற்றுலா சென்று வந்துவிடலாம், கரிகாலன்.

சிப்பிக்குள் முத்து உருவாவது எப்படி, டிங்கு?

– வெ. மதுப்ரீதா, 6-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

சிப்பி மெல்லுடலி வகையைச் சேர்ந்த உயிரினம். மென்மையான உடலைப் பாதுகாக்கும் விதத்தில் கடினமான ஓடு மூடப்பட்டிருக்கும். இந்த ஓட்டுக்குள் சிறிய துளை இருக்கும். அதன் வழியே ஏதாவது கல், மண், தூசி போன்ற அந்நியப் பொருட்கள் உள்ளே நுழைந்தால், சிப்பிக்கு உறுத்திக்கொண்டிருக்கும். அந்த உறுத்தலைக் குறைப்பதற்காக ஒருவிதத் திரவத்தைச் சுரக்கும். இந்தத் திரவம் கெட்டியாகும்.

மீண்டும் உறுத்தல் ஏற்படும்போது மீண்டும் திரவம் சுரக்கும். இப்படிச் சுரக்கும் திரவமே முத்தாக மாறுகிறது, மதுப்ரீதா. கடலில் இயற்கையாக இப்படி முத்து கிடைக்கிறது. சிப்பிகளை வளர்த்து, செயற்கையாக உறுத்தலை உண்டாக்கி, முத்துகளை உற்பத்தி செய்கிறார்கள். இதைச் செயற்கை முத்து என்று அழைக்கிறார்கள்.

கொசுவை விடச் சிறிய பூச்சி இருக்கிறதா, டிங்கு?

– பா. ரக்‌ஷனி, 11-ம் வகுப்பு, புனித மரியன்னை மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கடலூர்.

இதுவரை அறியப்பட்ட பூச்சியினங்களில் மிகவும் சிறியது என்ற பெயரைப் பெற்றது Fairyfly. இது பழுப்பு குளவியைப்போலிருக்கும். 0.5 முதல் 1.0 மி.மி. நீளம்வரையே இருக்கிறது, ரக்‌ஷனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x