Published : 03 Oct 2018 12:33 PM
Last Updated : 03 Oct 2018 12:33 PM

டிங்குவிடம் கேளுங்கள்: வங்கி சேமிப்பால் நாடு எப்படி முன்னேறும்?

மக்கள் வங்கிகளில் சேமிப்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு எப்படி உதவும், டிங்கு? -அ. சுபிக்ஷா, 9-ம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், ஓசூர்.

 

நாம் சம்பாதிக்கும் பணத்தை பெட்டிக்குள் பூட்டி வைத்துவிட்டால், அந்தப் பணத்தால் பலன் ஒன்றும் ஏற்படாது. அதேபோலதான் வங்கிகளில் நாம் சேமிக்கும் பணமும் பெட்டகத்தில் பாதுகாப்பாக இருந்தால் பலன் இல்லாமல் போய்விடும். வங்கிகளில் சேமிக்கும் பணத்தை எடுத்து, அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்களுக்கும் அரசாங்கம் மற்றும் தனியார், தொழிற்சாலைகளுக்கும் வங்கி கடனாகக் கொடுத்துவிடுகிறது.

இப்படிக் கொடுக்கும் பணத்துக்கு வட்டியும் வசூலிக்கிறது. அந்த வட்டியின் மூலம் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியை நாம் போட்டு வைத்திருக்கும் பணத்துக்கு வட்டியாகக் கொடுக்கிறது. இப்படிப் பண சுழற்சி நடைபெறும்போது அது அரசாங்கம், தனியார், தனி நபர் என்று பலருக்கும் பயன்படுகிறது. இதன்மூலம் அரசாங்கம் நல்ல சாலைகளைப் போடுகிறது, மக்களுக்கு மானிய விலையில் பொருட்களை வழங்குகிறது. தனியார் நிறுவனங்களால் உற்பத்தி பெருகுகிறது, வேலை வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

இப்படி ஒருவரின் பணம் பல்வேறு விதங்களில் சுழற்சி முறையில் பல்வேறு நபர்களுக்குப் பயன்படும்போது நாட்டின் பொருளாதாரமும் முன்னேறுகிறது, சுபிக்ஷா.

கேன்களிலும் பாட்டில்களிலும் நாம் குடிக்கும் நீரில் என்னென்ன தாது உப்புகள் இருக்கின்றன? ஒரு கிரிக்கெட் வீரர் குடித்த மினரல் வாட்டரின் விலை 650 ரூபாய் என்று படித்தேன். அதில் அப்படி என்ன இருக்கிறது, டிங்கு? -சு. சுதா, 11-ம் வகுப்பு, எஸ்.ஆர்.கே. மெட்ரிக் பள்ளி, சமயபுரம்.

நாம் அன்றாடம் குடிக்கும் கேன், பாட்டில் தண்ணீரில் தாது உப்புகள் (மினரல்ஸ்) எதுவும் சேர்க்கப் படவில்லை, சுதா. இவை எல்லாம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மட்டுமே. குடிநீரில் தாது உப்புகளைச் சேர்த்தால், அதிக விலைக்கு விற்க வேண்டியிருக்கும். நீங்கள் சொன்னதுபோல, கிரிக்கெட் வீரர் குடித்த மினரல் வாட்டரில் தாது உப்புகள் சேர்க்கப்பட்டிருக்கும். அதனால்தான் விலை அதிகமாக இருக்கிறது. அந்த விலைக்கு நம்மால் தண்ணீரை வாங்கிக் குடிக்க முடியாது.

காரில் செல்லும்போது எனக்கு வாந்தி வருகிறது. என்ன செய்யலாம், டிங்கு?–எஸ். விஷால், 5-ம் வகுப்பு, வித்யா சாகர் குளோபல் பள்ளி, செங்கல்பட்டு.

சிலருக்குப் பேருந்து, கார் போன்றவற்றில் பயணம் செய்யும்போது, பயண நோய் ஏற்படும். காரின் ஜன்னல்களை மூடி, ஏசி போட்டுக்கொண்டு பயணம் செய்தால் வாந்தி வரும். அதனால் ஜன்னல்களைத் திறந்து விட்டு, இயற்கை காற்றை சுவாசித்தபடி பயணம் செய்யலாம். வயிறு நிறைய உணவு சாப்பிடாமல் பயணிக்கலாம். அதற்காக எதையும் சாப்பிடாமலும் பயணிக்கக் கூடாது. எலுமிச்சம் பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு, அடிக்கடி முகர்ந்துகொள்ளலாம். புளிப்பு மிட்டாய்களை வாயில் போட்டுக்கொள்ளலாம். வாந்தி வருமோ என்று நினைத்து பயந்துகொண்டே இருக்காமல், காரில் ஏறியவுடன் தூங்கவும் செய்யலாம். இவை எல்லாம் வாந்தி வருவதையோ வாந்தி வருவது போன்ற உணர்வையோ குறைக்கும், விஷால். முயன்று பாருங்கள்.

நாங்கள் கேட்கும் கேள்விகள் உன்னை சுவாரசியப் படுத்துகின்றனவா, அலுப்பூட்டுகின்றனவா, டிங்கு?–மு. அசுபதி, 7-ம் வகுப்பு, காவல்கிணறு, திரு இருதய மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி.

பதில் சொல்வதைவிட, கேள்வி கேட்பதைத்தான் நான் பெரிய விஷயமாக நினைக்கிறேன். நல்ல கேள்விகளுக்குதான் சுவாரசியமான பதில்களைக் கொடுக்க முடியும். எனக்கு வரும் பெரும்பாலான கேள்விகள் சுவாரசியமாகவே இருக்கின்றன. பதில் சொல்வதற்கு நிறைய படிக்கிறேன், நிபுணர்களிடம் ஆலோசிக்கிறேன். இதன்மூலம் நிறைய கற்றுக்கொள்கிறேன், கற்றுக்கொண்டதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். செம்பருத்தியின் படம் வரைந்து பாகங்களைக் குறி, துறவிக்கும் சாமியாருக்கும் என்ன வித்தியாசம்? என்பது போன்ற கேள்விகள் அலுப்பூட்டுகின்றன. உங்கள் கேள்வியும் அதற்கான பதிலும் எல்லோரையும் சுவாரசியப்படுத்துவதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கேள்விகளுக்கே நான் முன்னுரிமை கொடுக்கிறேன், அசுபதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x