Published : 20 Aug 2014 12:00 AM
Last Updated : 20 Aug 2014 12:00 AM
கவினும், ரஞ்சனியும் அன்று மிகவும் உற்சாகத்தில் இருந்தார்கள். அன்று விடுமுறை நாள் என்பதால் மட்டுமல்ல, பக்கத்து கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்ததுதான் அவர்களுடைய உற்சாகத்துக்குக் காரணம்.
பேரப் பிள்ளைகளுக்காக நிறைய பலகாரங்களைப் பாட்டி செய்து வைத்திருந்தார். ஆனால் பாட்டி வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்தவுடனேயே வீட்டின் பின்புறத்தில் இருந்த மாமரத்தை நோக்கி ஓடினான் கவின்.
“ஏய்… ரஞ்சனி! இங்கே ஓடி வா. எவ்ளோ மாம்பழம் இருக்குன்னு பாரு” என உற்சாகமாகக் கூப்பிட்டான் கவின்.
ரஞ்சனி மட்டுமல்ல, பாட்டி, அப்பா, நிலா டீச்சர் என எல்லோருமே மா மரத்துக்கு அடியில் கூடினார்கள். ஆனால், கவினை அங்கே காணவில்லை. அதற்குள் குரங்கு போல் தாவி மரத்தின் கிளையில் உட்கார்ந்திருந்தான் அவன்.
பாட்டி வீட்டு மா மாமரத்தில பழுக்குற மாம்பழத்தோட ருசியே தனிதான். கிளையில் உட்கார்ந்து கொண்டே மாம்பழங்களை மிகவும் ஆசையோடு ருசித்தான் கவின்.
மரத்தின் கிளையை அவன் ஆட்டி விடவே நன்றாகப் பழுத்திருந்த பழங்கள் கீழே விழுந்தன. ரஞ்சனி, அப்பா, அம்மா என எல்லோருமே பாட்டி வீட்டு மாம்பழங்களை ருசித்துச் சாப்பிட்டனர்.
திடீரென மரத்திலிருந்த கவின் “தூ… தூ… ”ன்னு வேகமாகத் துப்பினான்.
“டேய் என்னடா ஆச்சு?” என்று கேட்டாள் ரஞ்சனி.
“ஐயோ, தெரியாம பழம்னு நினச்சு ரொம்ப புளிக்கிற ஒரு மாங்காய கடிச்சுட்டேன். அய்யோ, புளிப்பு தாங்கல” என்று கூறிய கவின், மீண்டும் “தூ.. தூ..” எனத் துப்பினான்.
கீழேயிருந்த ரஞ்சனி உள்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
அதன் பிறகு நிறைய பழங்களைத் தின்று, ஆசை தீர்ந்த பிறகே கவின் மரத்திலிருந்து இறங்கி வந்தான்.
“அம்மா! குரங்கு இறங்கி வந்துடுச்சுமா” என்றாள் ரஞ்சனி.
“அம்மா! பாட்டி வீட்டு மாம்பழம் சூப்பர் டேஸ்ட்” என்றான் கவின்.
“அப்புறம் ஏண்டா துப்புன?” என்று கேட்டு, அவனை வம்புக்கு இழுத்தாள் ரஞ்சனி.
“அம்மா! பாட்டி வீட்டு மாம்பழம் இவ்வளவு இனிப்பா இருக்கு. ஆனா, காய் மட்டும் ஏம்மா பயங்கரமா புளிக்குது?” என்று கேட்டான் கவின்.
“அவ்வளவு பயங்கர புளிப்பா?” என்று கேட்டு சிரித்தாள் ரஞ்சனி.
“நீ ஒரு காய எடுத்து கடிச்சு பாரு. அப்புறம் உனக்கு தெரியும்” என்றான் கவின்.
நிலா டீச்சர் உள்பட எல்லோருமே சிரித்தனர்.
“அம்மா! மாங்கா ஏம்மா புளிக்குது?” என்று மீண்டும் தன் கேள்விக்கே வந்தான் கவின்.
நிலா டீச்சர் மாங்காய் புளிப்புக்கான காரணத்தை விளக்கத் தொடங்கினார்.
“மாங்காயில நிறைய கரிம அமிலங்கள் இருக்கு. குறிப்பா சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம் நிறைய இருக்கு. இதுதான் மாங்காய் புளிக்கிறதுக்கு காரணம்.
மாங்காய் நல்லா முத்தின பிறகு பழுக்க ஆரம்பிக்கும். அப்படிப் பழுக்கும்போது கரிம அமிலங்களோட அளவு கொஞ்ச கொஞ்சமா குறையும். அப்போ புளிப்புச் சுவையும் குறைஞ்சுகிட்டே போகும். அதே நேரத்துல குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரை வகைகளோட அளவு அதிகரிச்சுகிட்டே போகும். இப்படிச் சர்க்கரை அளவு அதிகரிப்பதாலதான் பழம் இனிக்குது.
ஆக, மாங்காய்க்கு புளிப்பு சுவைய தரும் கரிம அமிலங்களின் அளவு பழுக்கும்போது குறையுது. இனிப்பு சுவைய தரும் சர்க்கரை அளவு கூடுது. இதுதான் மாங்காயின் புளிப்புக்கும், மாம்பழத்தின் இனிப்புக்கும் காரணம்” என்று கூறி முடித்தார் நிலா டீச்சர்.
அம்மா சொல்வதை ஆர்வத்துடன் கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருந்த கவின், அம்மா விளக்கம் கூறி முடித்ததும் மீண்டும் மரத்துக்குத் தாவினான்.
“டேய் உனக்கு என்னாச்சு?” என கத்தினார் அப்பா.
“குரங்கு மீண்டும் மரத்துக்கே போயிடுச்சு” என்றாள் ரஞ்சனி.
“அப்பா! இந்த டேஸ்ட்டுல இனி எப்போ மாம்பழம் கிடைக்கும்னு தெரியல. நீங்கள்லாம் வீட்டுக்குள்ள போங்க. நான் இன்னும் நாலு பழத்த தின்னுட்டு வந்துடறேன்” எனக் கூறிக் கொண்டே மரத்தின் கிளையிலிருந்த பழங்களைத் தாவிப் பறித்தான் கவின்.
“நீ வீட்டுக்குள்ள வர வேண்டாம். மரத்து மேலேயே உட்காந்துக்க. ஊருக்குப் புறப்படறப்போ கூப்பிடறோம். அப்ப நீ வந்தா போதும்” என்றாள் ரஞ்சனி.
அனைவரும் சிரித்தபடியே பாட்டியின் வீட்டுக்குள் சென்றனர். கவின் மட்டும் மரத்தில் மாம்பழங்களை ருசித்துக்கொண்டிருந்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT