Last Updated : 09 Aug, 2018 10:22 AM

1  

Published : 09 Aug 2018 10:22 AM
Last Updated : 09 Aug 2018 10:22 AM

உடல் எனும் இயந்திரம் 35: தகவல் தடங்கள்

அலைபேசிக் கண்டுபிடிப்புக்கு முன்னால், உலக அளவில் தகவல் தொடர்புக்குப் பிரதான மார்க்கமாகத் தொலைபேசித் தடங்களே இருந்தன. கம்பி மூலம் மக்களைத் தொடர்புகொள்ள வைக்கும் இந்தத் தடங்கள் இப்போதும் இருக்கின்றன. இவற்றைத் ‘தொலைதொடர்புத் தகவல்துறை’ நிர்வகிக்கிறது. இதுபோலவே நம் உடலிலும் தகவல்களைக் கடத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் ‘நரம்பு மண்டலம்’ இருக்கிறது. அதில் நரம்புகள் எனும் தடங்கள் நிறைய இருக்கின்றன. இவை அனைத்தும் உடலின் தலைமைச் செயலகமாகத் திகழும் மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.

உடலில் எந்த ஒரு செயலும் மூளையின் கட்டளைப்படியே நிகழ்கிறது. ஒரு செயலைச் செய்வதற்கு, மூளையிலிருந்து ஓர் உறுப்புக்கு அல்லது அதனோடு இணைந்த திசுக்களுக்குத் தகவல் வருவதால் அந்தச் செயல் நடைமுறைக்கு வருகிறது.

தொலைபேசி முனைகளைத் தொலைபேசிக் கம்பிகள் இணைக்கும்போது, பரஸ்பரம் இருவர் தொலைபேசியில் பேசிக்கொள்ள முடிகிறது. அதேபோல் மூளையையும் உடல் உறுப்புகளையும் நரம்புகள் இணைப்பதால்தான் தகவல்கள் பரிமாறப்பட்டுச் செயல்கள் சாத்தியமாகின்றன.

நரம்பு மண்டலம் எது?

மூளையும் அதைச் சார்ந்த நரம்புகளும் இணைந்தது நரம்பு மண்டலம். மனிதருக்கு மத்திய நரம்பு மண்டலம் (Central nervous system), புறநரம்பு மண்டலம் (Peripheral nervous system) என இருவகை உண்டு. மூளையிலும் தண்டுவடத்திலும் (Spinal cord) இருக்கும் நரம்புகள் மத்திய நரம்பு மண்டலத்தைச் சேர்ந்தவை. இந்த இரண்டு உறுப்புகளிலிருந்து உடலை நோக்கி வெளியில் வரும் நரம்புகள் புறநரம்பு மண்டலத்தைச் சேர்ந்தவை.

மூளைத் தண்டிலிருந்து (Brain stem) வெளியேறும் புறநரம்புகள் கபால நரம்புகள் (Cranial nerves). இவை 12 ஜோடி. தண்டுவடத்திலிருந்து வெளிவரும் புறநரம்புகள் தண்டுவட நரம்புகள் (Spinal nerves). இவை 31 ஜோடி. இந்த இருவகை நரம்புகளும் தொலைபேசிக் கம்பிகளைப்போல இரு வழிப்பாதை கொண்டவை. உடலில் உண்டாகும் தூண்டல்கள் இவற்றின் வழியாக மூளைக்குச் செல்கின்றன. மூளையில் ஏற்படும் எதிர்வினைகள் கட்டளைகளாக மறுபடியும் இந்த நரம்புகளுக்கு வந்து சேர்கின்றன. அவற்றுக்கு ஏற்றபடி உடலில் திசுக்கள், தசைகள், உறுப்புகள், சுரப்பிகள் ஆகியவை வினைபுரிகின்றன.

புறநரம்பு மண்டலத்தில் தனிச்சிறப்பு கொண்ட நரம்பு மண்டலம் ஒன்று இருக்கிறது. அது ‘தானியங்கி நரம்பு மண்டலம்’ (Autonomous nervous system). இதில் உள்ள நரம்புகள் உடலுக்குள் நிகழும் இதயத் துடிப்பு, சுவாசம், செரிமானம், ரத்த ஓட்டம், பார்வை போன்ற இன்றியமையாத இயக்கங்களையும் சுரப்பிகளையும் செயல்படுத்துகின்றன.

இவற்றில் பரிவு நரம்புகள் (Sympathetic nerves), இணைப் பரிவு நரம்புகள் (Para sympathetic nerves) என இருவகை உண்டு. உடலியக்கங்களைத் தூண்டுவதும், துரிதப்படுத்துவதும் பரிவு நரம்புகள். உதாரணமாக, நாம் ஓடும்போது இதயம் வேகமாகத் துடிப்பதற்கும், வேகவேகமாக மூச்சு விடுவதற்கும் பரிவு நரம்புகளின் தூண்டுதலே காரணம். மாறாக, இந்த இயக்கங்களைக் குறைப்பதும் கட்டுப்படுத்துவதும் இணைப் பரிவு நரம்புகளின் பணி. உதாரணம்: ஓடி முடித்ததும் இதயத்துடிப்பு பழைய நிலைமைக்குத் திரும்புவது; சுவாசம் சீராக நிகழ்வது.

சரி, நரம்பு என்பது எப்படி இருக்கும்?

ஒவ்வொரு நரம்பும் பார்ப்பதற்கு கேபிள் வயர்போல் பல நரம்பிழைகளின் (Nerve fibers) தொகுப்பாக இருக்கிறது. ஒரு நரம்பிழையில் ஏராளமான நரம்பணுக்கள் (Neurons) உள்ளன. நரம்பின் அமைப்புக்கும் செயலுக்கும் அடிப்படையாகத் திகழ்கிறது நரம்பணு. ஒரு நரம்பணுவின் நீளம் 10 மைக்ரான். மூளையிலும் மற்ற நரம்புகளிலும் உள்ள நரம்பணுக்களின் மொத்த எண்ணிக்கை 10,000 கோடி. ஒரு கணக்குக்கு இவற்றை நீளவாக்கில் இணைத்தால் அது 1000 கி.மீ. தூரம்வரை செல்லும்.

ஒவ்வொரு நரம்பணுவுக்கும் மற்ற இடங்களிலிருந்து தகவல்கள் வந்து சேர வேண்டும். அதேபோன்று ஒவ்வொரு நரம்பணுவில் இருந்தும் தகவல்கள் வெளியில் செல்ல வேண்டும். இதற்காக ஒவ்வொரு நரம்பணுவிலும் வேரிழை (Axon), உடற்பகுதி (Cell body), குற்றிழைகள் (Dendrites) என மூன்று பகுதிகள் உள்ளன.

நரம்பணுவின் ஒரு பக்கத்தில் மரக்கிளைகள்போல் நீட்டிக்கொண்டிருப்பவைக் ‘குற்றிழைகள்’. நரம்பணுவுக்குத் தகவல் வந்து சேரும் பகுதி இது. இதன் எதிர்ப் பகுதி நீண்ட ஓர் இழையாகப் பாயும். அதன் முனை பார்ப்பதற்கு ஒரு கவட்டையைப்போல் பிரிந்திருக்கும். அது ‘வேரிழை’. அதன் வழியாகத் தகவல் வெளியில் செல்கிறது. அதை ‘நரம்பிழை’ என்றும் அழைப்பது உண்டு. இது ஒரு நரம்புறையால் (Myelination) மூடப்பட்டிருக்கும். இதன் நடுநடுவில் பல குழிகள் (Nodes of Ranvier) இருக்கும். அந்தக் குழிகளில் மட்டும் உறை இருக்காது.

குற்றிழைக்கும் வேரிழைக்கும் நடுவில் இருப்பது உடற்பகுதி. இதில் உட்கரு இருக்கும். இது ஒரு செல் உறையால் போர்த்தப்பட்டிருக்கும். பொதுவாக, உடலில் மற்ற செல்கள் அழியுமானால், மறுபடியும் அவை வளர்ந்துவிடும். ஆனால், நரம்பின் பகுதிகள் அழிந்துவிட்டால் மறுபடியும் வளராது. இது நரம்புக்கே உரித்தான தனித்தன்மை. அதனால்தான் உடலில் ஏற்படும் நரம்பு நோய்களில் பலவற்றை முழுமையாகத் தீர்க்க முடியவில்லை.

ஒரு நரம்பணுவில் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றிழைகள் இருக்கலாம். ஆனால், வேரிழை ஒன்று மட்டுமே இருக்கும். நரம்பணுவில் ஒற்றைக்கொம்பு நரம்பணு (Unipolar neuron), இரட்டைக் கொம்பு நரம்பணு (Bipolar neuron), பல கொம்பு நரம்பணு (Multipolar neuron) என மூன்று வகை உண்டு.

ஒரு நரம்பணுவின் குற்றிழைகள் அருகிலிருக்கும் வேரிழையோடு இணைந்திருக்கும். அதன் வேரி்ழை எதிர்ப்புறத்தில் இருக்கும் வேறொரு குற்றிழையுடன் இணைந்திருக்கும். இரண்டுக்கும் நடுவில் ‘நரம்புச் சந்தி’ (Synapse) எனும் சிறிய இடைவெளி இருக்கும். அதுதான் தகவல் பரிமாறும் பகுதி. இப்படி ஒரு சங்கிலிப் பின்னல்போல் நரம்புகள் நம் உடல் முழுவதிலும் அமைந்திருப்பதால், மூளையில் புறப்படும் தகவல் கால் விரல் நுனிக்கு எளிதாக வந்து சேர்கிறது.

நரம்புகளில் தகவல் செல்லும் வேகம் சாதாரணமாக ஒரு நொடிக்கு 100 மீட்டர்; அவசரத்துக்கு நொடிக்கு 180 மீட்டர். இது எப்படிச் சாத்தியம்? அது அடுத்த வாரம்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x