Published : 13 Nov 2025 12:03 PM
Last Updated : 13 Nov 2025 12:03 PM
கதை
பனையூரில் காகம் ஒன்று வாழ்ந்துவந்தது. அதுக்குத் தன்னிடம் உள்ள அடர் கறுப்பு நிறம் பிடிக்கவில்லை. மற்ற பறவைகள் போல வண்ணமயமாக இருக்க வேண்டும் என்று நினைத்தது.
ஒரு வீட்டின் தோட்டத்தில் இருந்த மரத்தின் கிளையில் அமர்ந்துகொண்டு, ஏதோ சிந்தித்துக்கொண்டிருந்தது.
அந்த வீட்டு வராண்டாவில் ஒரு கூண்டுக்குள் இருந்த அழகான கிளியைக் கண்டதும் காகத்துக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
”கிளியே, உன்னை எவ்வளவு நன்றாகக் கவனித்துக்கொள்கிறார்கள்! தேடி அலையாமல் கூண்டுக்குள்ளேயே பழங்களும் பருப்புகளும் கிடைத்துவிடுகின்றன. உன்னை மாதிரி அழகு பச்சை நிறத்தில் நானும் பிறந்திருந்தால், என்னையும் இப்படிக் கவனித்திருப்பார்கள்” என்றது காகம்.
”என்ன உளறுகிறாய்? நான் என்ன மகிழ்ச்சியாகவா இருக்கிறேன்? கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறேன். ஆனால், நீயோ சுதந்திரமாக, ஜாலியாக இருக்கிறாய். நானும் உன்னைப் போன்று பிறந்திருக்கலாம்” என்றது பச்சைக்கிளி.
”என்ன இப்படிச் சொல்கிறாய்? என்னால் நம்பவே முடியவில்லை.”
“இருக்கும் இடத்துக்கு உணவு வருவதைவிட, சுதந்திரம் முக்கியமானது. அதைப் புரிஞ்சுக்கோ” என்றது பச்சைக்கிளி.
கிளி சொல்வதில் நம்பிக்கை இல்லாமல் அங்கிருந்து பறந்தது காகம். பறவைகள் பூங்காவுக்குள் நுழைந்த காகம், கூண்டுக்குள் இருந்த மயிலைப் பார்த்தது. மக்கள் ஆர்வத்துடன் அந்த மயிலை ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

’என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை. வண்ணமயமான மயிலை ஒளிப்படம் எடுக்கிறார்கள்’ என்று நினைத்தது காகம்.
சற்று நேரத்தில் கூட்டம் குறைந்தது. மயிலிடம் சென்ற காகம், “நீ வண்ணமயமாக இருப்பதால் எல்லாரும் உன்னை ஒளிப்படம் எடுக்கிறார்கள்” என்றது.
“ஒளிப்படம் எடுப்பதால் எனக்கு என்ன பயன்? நான் காட்டுக்குள் சுதந்திரமாகச் சுற்றித் திரிவேன். இப்போதோ கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறேன். என்னைவிட நீதான் நல்ல நிலையில் இருக்கிறாய்” என்றது மயில்.
”என்ன நீயும் பச்சைக்கிளி சொன்னதையே சொல்கிறாய்?”
“பச்சைக்கிளி என்ன, அனைவருமே தங்கக் கூண்டாக இருந்தாலும் அதில் வசிக்க விரும்ப மாட்டார்கள். உணவைவிடச் சுதந்திரம் முக்கியம்” என்றது மயில்.
”ஓ, இப்போது எனக்குத் தெளிவு வந்துவிட்டது. என் அழகான கறுப்பு நிறம்தான் கூண்டுக்குள் அடைக்கவிடாமல் என்னைக் காப்பாற்றி இருக்கிறது. நன்றி, வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது காகம்.
-அ. பவித்ரா, பயிற்சி இதழாளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT