Last Updated : 12 Nov, 2025 07:46 AM

 

Published : 12 Nov 2025 07:46 AM
Last Updated : 12 Nov 2025 07:46 AM

நேரு மாமாவின் செல்லங்கள்! | வரலாறு முக்கியம் மக்களே! - 24

‘அந்தச் சிறை அறையில் நான் மட்டும் தனியாக இருக்கவில்லை. என்னோடு குளவிகளும் வண்டுகளும் குடியிருந்தன. சுவர் எங்கும் பல்லிகள் திரிந்தன. அந்தச் சிறிய அறையிலேயே அவை வசதியாக வாழப் பழகியிருந்தன’ என்று தனது சுயசரிதையில் ஜவாஹர்லால் நேரு பகிர்ந்திருக்கிறார்.

சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதற்காகப் பல்வேறு தருணங்களில் அவர் சிறையில் இருந்த மொத்த நாள்கள் 3,259. அதில் டேராடூன் சிறையில் மட்டும் 14 மாதங்கள், 15 நாள்கள் அடைக்கப்பட்டிருந்தார்.

கொடுமையான தனிமைச் சிறை. பேசுவதற்கு யாருமற்ற நிலையில், அங்கு வசித்த பூச்சிகளும் உயிரினங்களுமே அவரின் செல்லங்களாக மாறின. ஆம், அவற்றிடமிருந்து ‘எந்தச் சூழலிலும் வாழக் கற்றுக் கொண்டதாக’ நேரு எழுதியிருக்கிறார்.

‘என் அறையிலிருந்த நூற்றுக்கணக்கான குளவி களையும் வண்டுகளையும் பொறுத்துக் கொண்டேன். குளவிகள் கொட்டி விடுமோ என்று பயந்து, அவற்றை விரட்ட முயற்சி செய்தேன். ஆனால், அவை தம் வாழ் விடத்தை விட்டுத்தரவில்லை. அவை என்னைத் தொந்தரவு செய்யாதபோது, நானும் அவற்றைத் தொந்தரவு செய்யாமல் இருப்பதுதானே நியாயம். அதனால் அவற்றுடன் நட்புகொண்டேன்.

அவை ஒருபோதும் என்னைத் தாக்கியதே இல்லை!’ நேருவைத் தேடி தேள்களும் வந்தன. அவரின் படுக்கை மீதும், புத்தகங்கள் மீதும் ஏறி விளையாடின. அதில் ஒரு கறுப்புத் தேளைப் பிடித்து, பாட்டிலில் அடைத்து, பூச்சிகளை அதற்கு உணவாகக் கொடுப்பதும் நேருவின் வழக்கமாக இருந்தது. தனிமைச் சிறையில் மன அழுத்தத்தைக் குறைக்க தேள்களும் அவருக்கு உதவின.

தேளோடு நிற்கவில்லை. மூன்றோ, நான்கோ பாம்புகள் அவரின் சிறை அறைக்குள்ளும், அறைக்கு அருகிலும் வந்து சென்றன. அந்தச் செய்தி பத்திரிகைகளிலும் வந்து பரபரப்பைக் கிளப்பியது. ஆனால், எந்தவிதமான விஷ உயிரனங்களையும் அச்சமின்றி எதிர்கொள்ளும் மனநிலைக்கு நேரு வந்திருந்தார்.

‘அந்த நிகழ்வு எனக்குள் உண்மையில் மாற்றத்தை உண்டாக்கியது. நான் பாம்புகளை விரும்புபவன் அல்ல. அவை கடிக்க வந்தால் என்னைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்வேன். அதற்காக அவற்றை வெறுக்க மாட்டேன்’ என்றார். வெளியில் சுதந்திரமாக விளையாடும் அணில்களை வேடிக்கை பார்ப்பது நேருவின் பொழுதுபோக்காக இருந்தது. அந்தச் சிறை வளாகத்தில் இருந்த இரண்டு நாய்களை நேரு தத்தெடுத்திருந்தார்.

அவர் வாழ்ந்த தீன் மூர்த்தி பவனிலும் நாய்களை வளர்த்துவந்தார். அதில் கோல்டன் ரெட்ரீவர் வகை நாய்கள் அவருக்கு மிகவும் நெருக்கமானவை. தன் மகள் இந்திராவுக்கு நேரு, ‘லாஸி’ என்கிற நாயை வாங்கிக் கொடுத்தார். அது விரைவிலேயே இறந்து போனது. அடுத்து ஒரு கோல்டன் ரெட்ரீவர் குட்டியைப் பரிசளித்தார். இந்திரா அதற்கு வைத்த ரஷ்யப் பெயர், Pepita Nichivo. நேருவால் சுருக்கமாக ‘பெபி’ என்று அழைக்கப்பட்டது.

மது என்கிற இன்னொரு கோல்டன் ரெட்ரீவரும் பின்பு சேர்ந்துகொண்டது. நேருவோடு பல இடங்களுக்குச் செல்லும் செல்லமாக பெபி இருந்தது. நேருவைச் சந்திக்க வந்த உலகத் தலைவர்கள் பலரும் பெபியையும் கொஞ்சி மகிழ்ந்தனர். 1961இல் டெல்லியிலிருந்து குலுமணாலிக்கு நேரு விமானத்தில் செல்லும்போது பெபியும் சென்றது. அந்த ஒளிப்படங்கள் விவாதத்துக்கு உள்ளாயின.

ஆனாலும் பிரதமர் நேருவின் வாழ்க்கையில் இருந்து விலங்குகளைப் பிரிக்க இயலவில்லை. உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவர் நேருவுக்கு இரண்டு புலிக்குட்டிகளைப் பரிசளித்தார். ராஜா, ராணி என்று அவற்றுக்குப் பெயர் சூட்டினார் நேரு. அசாமுக்கு அவர் சென்றபோது, சிவப்பு பாண்டா குட்டி ஒன்று பரிசளிக்கப்பட்டது.

அதற்கு ‘பீம்சா’ என்று பெயரிட்டார். மங்கோலியாவிலிருந்து மூன்று குதிரைகள் நேருவுக்குப் பரிசாக வந்தன. இப்படி நேரு வாழ்ந்த தீன் மூர்த்தி பவனில் சிறிய அளவிலான உயிரியல் பூங்காவே செயல்பட்டது. அவரின் பிறந்தநாள் அன்று குழந்தைகளோடும் செல்ல உயிரினங்களோடும் அவர் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவது வழக்கமாக இருந்தது.

குழந்தைகள் என்றால் நேருவுக்குப் பிரியம் அதிகம். யானை என்றால் குழந்தைகளுக்குப் பிரியம் அதிகம். உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாகவும், நாடுகளுடன் நட்புறவைப் பேணும் விதமாகவும் இந்திய யானைகளை அனுப்பி வைப்பது நேருவின் வழக்கமாக இருந்தது. ஜப்பானின் யுவனோ உயிரியல் பூங்காவில் இருந்த யானைகள், இரண்டாம் உலகப் போரின்போது இறந்தன.

ஜப்பானியக் குழந்தைகள், ‘இந்தியாவிலிருந்து யானைகளை வரவழையுங்கள்’ என்று அரசாங்கத்துக்குக் கோரிக்கை வைத்தனர். அது இந்தியப் பிரதமர் நேருவை வந்தடைந்தது. ‘நாங்கள் கனவில் மட்டுமே கண்ட யானையை நேரிலும் காண உதவி செய்யுங்கள்’ என்று ஒரு குழந்தை எழுதியிருந்தது.

நெகிழ்ந்துபோன நேரு, உடனே அதற்கான நடவடிக்கையை எடுத்தார். கர்நாடகா யானைக்குத் தன் செல்ல மகள் ‘இந்திரா’ பெயரையே வைத்தார். இந்திரா, 1949, செப்டம்பர் 25 அன்று யுவனோ உயிரியல் பூங்காவில் அடியெடுத்து வைத்தது. இந்திய – ஜப்பான் நல்லுறவின் அடையாளமாகவும் திகழ்ந்தது. இதேபோல பெர்லின் குழந்தைகளிடமிருந்தும் நேருவுக்குக் கோரிக்கை வந்தது.

1952இல் அங்கே சாந்தி என்கிற யானைக் குட்டியை அனுப்பி வைத்தார். 1954இல் நெதர்லாந்துக்கு அனுப்பி வைத்த யானைக் குட்டியின் பெயர் முருகன். 1955இல் கனடாவுக்கு அனுப்பி வைத்த யானையின் பெயர் அம்பிகா. யானைகளை அனுப்பி வைத்தபோது, நேரு அந்தந்த நாட்டுக் குழந்தைகளுக்குச் சொன்ன செய்தி இதுதான்: ‘யானைகள் புத்திசாலிகள், பொறுமையானவை, வலிமை யானவை. மென்மையானவையும்கூட. நாமும் இந்தக் குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்!’

(சந்திப்போம்)

- writermugil@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x