Published : 12 Nov 2025 07:35 AM
Last Updated : 12 Nov 2025 07:35 AM
செவ்வாய்க் கோளின் தரைப்பரப்பு முழுவதும் இரும்பு ஆக்சைடு நிரம்பியுள்ளது. இரும்பு அணு ஆக்சிஜனேற்றம் அடையும்போது இரும்பு ஆக்சைடாக மாறுகிறது. இதைத்தான் நாம் துரு என்கிறோம். அதாவது, செவ்வாய்க் கோள் முழுவதும் ‘துரு’ப் பிடித்துள்ளது என்று சொல்லலாம். செவ்வாய்க் கோளின் மண் கணிசமான அளவில் நொறுங்கி உடைந்து நுண்தூசியாக மாறியுள்ளது. இந்தத் தூசியும் செவ்வாயின் மெல்லிய வளிமண்டலத்தில் மிதந்தபடி இருக்கும். இந்தக் காரணங்களால்தான் அந்தக் கோள் பார்வைக்குச் சிவப்பு நிறத்தில் காட்சி தருகிறது.
மற்ற கோள்களில் நிலைமை எப்படி? - பழுப்பு, சிவப்பு, மஞ்சள், கறுப்பு, சாம்பல், வெள்ளை, நீலம், பச்சை எனப் பல்வேறு நிறங்களில் பூமியில் மண் உள்ளது. மண்ணில் உள்ள ஈரப்பசை, வானிலை, உயிரியல் இயக்கம் முதலியவை ஏற்படுத்தும் வேதி வினைகளின் காரணமாகத்தான் பூமியின் மண் பல வண்ணங்களில் காணப்படுகிறது. உயிரிகள் வெளியிடும் கரிமப் பொருள்களும் பாறைகளில் உள்ள இரும்பு, மாங்கனீசு போன்ற பல்வேறு தாதுப்பொருள்களும், மண்ணின் ஈரப்பசை மற்றும் வளிமண்டலத்துடன் வேதிவினை புரிகின்றன.
உதாரணமாக, வானிலை காரணமாக இரும்பும் மாங்கனீசும் ஆக்சிஜனேற்றம் அடைகின்றன. இதன் காரணமாகப் பல்வேறு சேர்மங்கள் உருவாகின்றன. ஆக்சிஜனேற்றப்பட்ட இரும்பு சிறிய மஞ்சள் அல்லது சிவப்பு படிகங்களாக உருவாகிறது. மண்ணில் அதிக அளவு சிதைந்த கரிமப் பொருள்கள் அல்லது மட்கிய பொருள்கள் இருந்தால், அது அடர் பழுப்பு நிறம் முதல் கறுப்பு நிறம் வரை தோற்றம் அளிக்கும். இந்தச் சேர்மங்கள் இல்லாத ‘இயற்கை’ மண்ணின் நிறம் சாம்பல்தான்.
நிலவில் வானிலை இல்லை, மழை பொழிவதும் இல்லை. எனவே, அங்கு இது போன்ற வேதிவினைகள் நிகழ்வதும் இல்லை. ஆகவேதான் நிலவின் மண் சாம்பல் நிறத்தில் உள்ளது. நிலவில் தரையிறங்கிய விண்கலங்கள் எடுத்த வண்ணப் படங்களில், நிலவின் தரை கறுப்பு-வெள்ளையாகத் தெரிவது இதன் விளைவுதான்.
சூரியனுக்கு மிக அருகில் சுற்றிவரும் புதன் கோளை எடுத்துக்கொள்வோம். அதன் மண், பாறைகளில் கார்பனின் ஒரு வடிவமான கிராபைட் செறிவாக உள்ளது. எனவே, அங்கு தரையிறங்கும் விண்வெளிப் பயணியின் பார்வைக்கு, புதனின் மண் அடர் சாம்பல் நிறத்தில் காட்சி தரும். கிராபைட் எனும் பொருளின் ஒளி பிரதிபலிப்புத் தன்மை மிகக் குறைவு. எனவே, குறைவான சூரிய ஒளியை மட்டுமே விண்வெளி நோக்கிப் பிரதிபலிக்கும். இதன் காரணமாக புதன் பார்வைக்கு மங்கலாகத் தென்படும்.

சூரியனைச் சுற்றிவரும் இரண்டாவது கோளான வெள்ளியைச் சுற்றி எப்போதும் அடர் கந்தக அமில மேகங்கள் மூடியிருக்கின்றன. எனவே, வெளியிலிருந்து பார்த்தால் அதன் தரைப்பரப்பு எப்படி இருக்கிறது என்று தெரியாது. அடர் கந்தக அமில மேகங்கள் ஊடே செல்லும் சூரிய ஒளி, மஞ்சள் நிறத்தில் வெள்ளியின் தரை மீது படரும். 1982இல் வெள்ளிக் கோளில் தரையிறங்கிய வெனெரா 13, வெனெரா 14 ஆகிய சோவியத் விண்கலங்கள், அதன் வண்ணப் படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பின. அந்தப் படங்களில், ஆரஞ்சு மஞ்சள் நிற சூரிய ஒளி படர்ந்து, அடர் சாம்பல் நிறத்தில் இருண்ட சமவெளிபோல வெள்ளிக் கோளின் மணற்பரப்பு காணப்பட்டது.
வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய மீதி நான்கு கோள்களும் வாயுக் கோள்கள். அதீத அழுத்தத்தின் காரணமாக, அவற்றின் மையப் பகுதி திட நிலையில் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனினும், அவற்றுக்கு ‘மணற்பரப்பு’ என்று எதுவும் கிடையாது. இந்தக் கோள்களை நெருங்கிச் செல்லும் விண்கலங்கள் எடுக்கும் படங்களைப் பார்த்தால், இவை பல வண்ணங்களில் பிரகாசிப்பதைக் காணலாம்.
சுருக்கமாகச் சொல்வது என்றால், கிராபைட் தரைப்பரப்பின் காரணமாக, புதன் கோள் சாம்பல் நிறத்தில் தென்படும். அடர் கந்தக அமில மேகங்களில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளியின் காரணமாக வெள்ளிக் கோள் பால் வெள்ளை நிறத்தில் காட்சி தரும். விண்வெளியில் இருந்து பார்க்கும்போது, சிவப்பு நிறத்தைவிட, பழுப்பு நிறத்திலேயே செவ்வாய் காட்சி தரும்.
ஹைட்ரஜன், ஹீலியம் மற்றும் பிற சேர்மங்கள் நிறைந்த சுழலும் மேகங்களில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளியின் காரணமாக, அணிலின் முதுகில் கோடுகள் உள்ளதுபோல, மஞ்சள், பழுப்பு, சிவப்பு மற்றும் வெள்ளைப் பட்டைகள் கொண்ட கோளாக ‘வியாழன்’ காட்சி தரும். பெரும்பாலான வண்ணப் படங்களில் உள்ளதுபோல அடர் மஞ்சள் நிறத்தில் சனிக் கோள் இல்லை. நம் கண்களுக்கு அதன் நிறம் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். பிரகாசமான பச்சை கலந்த நீல நிறமாக யுரேனஸின் படங்கள் வெளியிடப்பட்டாலும், அதன் உண்மையான நிறம் சற்றே சாம்பல் சாயல் கொண்ட நீலம். நெப்டியூன் கோள் நீல நிறச் சாயலிலேயே காட்சி தரும்.
(அறிவோம்)
- tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT