Published : 05 Nov 2025 07:40 AM
Last Updated : 05 Nov 2025 07:40 AM
எல்லாக் கப்பல்களிலும் ஒரு பூனையாவது செல்லமாக வளர்க்கப்படும் எலிகளைப் பிடிக்க. எலிகளால் கப்பலில் சரக்குகளுக்கு உண்டாகும் சேதம் அதிகம். எலிகளால் நோய்களும் பரவும். ஆக, கப்பலில் பூனைகளை வளர்ப்பதைவிட அதற்குச் சரியான தீர்வு கிடையாது. இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு.
நீண்ட தூரக் கடல் பயணங்களில் கப்பலில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகும். அப்போது பூனை மாதிரியான செல்ல விலங்கு ஒன்றைக் கொஞ்சி மகிழ்ந்தால், மன அழுத்தம் குறையும். ஆகவே, பண்டைக் காலத்திலிருந்தே கடல் பயணங்களில் பூனைகளும் கப்பலேறின.
ஜெர்மனியின் நாஜி கடற்படை வீரர்கள், தங்களது பிஸ்மார்க் போர்க்கப்பலில் அந்தப் பூனையைச் செல்லமாக வளர்த்து வந்தனர். வீரர்கள் இரண்டாம் உலகப் போரில் கடலில் எதிரிகளை வேட்டையாடிக் கொண்டிருக்க, கறுப்பும் வெள்ளையும் கலந்த அந்தப் பூனையோ எலிகளை வேட்டையாடிக் கொண்டிருந்தது.
எந்த எதிரிகளாலும் பிஸ்மார்க்கை மூழ்கடிக்கவே முடியாது என்று நாஜிகள் கர்வத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 1941, மே. பிஸ்மார்க், பிரிட்டிஷ் கடற்படைக் கப்பலான பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. வேல்ஸ் பின்வாங்கியது.
இருந்தாலும் வேல்ஸ் நடத்திய பதில் தாக்குதலில் பிஸ்மார்க் கப்பல் சற்று அதிகமாகவே சேதமடைந்திருந்தது. அந்த மே 27 அன்று வட அட்லாண்டிக் பெருங்கடலில் பிரிட்டிஷாரின் போர் விமானம்தாங்கிக் கப்பலான ஆர்க் ராயல், பிஸ்மார்க்கை நெருங்கி வந்து, குண்டு மழை பொழிந்தது.
பெரும் போராட்டத்துக்குப் பின் பிஸ்மார்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி இறந்தார்கள். கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றி போர்க்கைதிகளாக வைத்துக்கொண்டது பிரிட்டிஷ் போர்க் கப்பலான கோஸாக். அதே கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த மரத்துண்டு மீது நின்று கொண்டிருந்தது அந்தப் பூனை.

கடற்படை வீரர்கள் அதைக் கண்டுகொண்டார்கள். எதிரி தேசத்துப் பூனை. அதுவும் ஜெர்மனியின் நாஜிப் பூனை என்றெல்லாம் யோசிக்கவில்லை. உடனே அதைத் தூக்கிக் கொஞ்சினார்கள். அதற்கு முதல் உதவி செய்தார்கள். உணவு கொடுத்தார்கள். கோஸாக் கப்பலின் பிரிட்டிஷ் வீரர்கள் வளர்க்கும் செல்லப்பூனையாக அது மாறியது. இதனை ‘ஆஸ்கர்’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள். கோஸாக் கப்பலின் எலிகளை வேட்டையாட ஆரம்பித்தது ஆஸ்கர்.
1941, அக்டோபர் 24. பழிவாங்கக் காத்திருந்த ஜெர்மனி, தனது நீர்மூழ்கிப் போர்க் கப்பலான U-563-ஐ பிரிட்டிஷ் போர்க் கப்பல்களை நோக்கி அனுப்பியது. அது செலுத்திய நீர்மூழ்கி ஏவுகணை ஒன்று, கோஸாக்கைத் துல்லியமாகத் தாக்கியது. அதிலிருந்த சுமார் 150 பேர் கொல்லப்பட்டார்கள்.
60 பேர் காயங்களுடன், நடுக்கடலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்கள். பிரிட்டனின் ஆர்க் ராயல் கப்பல் உயிருடன் இருந்தவர்களைக் காப்பாற்றியது. ஆஸ்கர் நடுக்கடலில் கட்டை ஒன்றின் மீது ஏறி நின்று தன் ஆயுளை நீட்டித்துக் கொண்டிருந்தது.
ஆர்க் ராயல் வீரர்கள் ஆஸ்கரை மீட்டனர். தாங்கள் அழித்த பிஸ்மார்க்கில் இருந்த பூனை என்று தெரிந்துகொண்டனர். அது இரண்டாவது முறையும் உயிர்பிழைத்த அதிசயத்தைக் கண்டு, அந்தப் பூனைக்குப் புதிய பொருத்தமான பெயரைச் சூட்டினர். Unsinkable Sam. மூழ்கடிக்கவே முடியாத சாம். ஆர்க் ராயலுக்கு வந்த சில நாள்களுக்குக் கோபத்துடனும் பயத்துடனும் இருந்த சாம், அந்தக் கப்பலிலும் எலிகள் அதிகம் இருப்பதைக் கண்டு சகஜ நிலைக்குத் திரும்பியது. ஆர்க் ராயல் வீரர்களும் சாமை, தங்கள் செல்லமாக்கிக் கொண்டனர்.

1941, நவம்பர் 13. ஜெர்மனியின் நீர்மூழ்கிப் போர்க்கப்பலான U-81, ஆர்க் ராயல் மீது நீர்மூழ்கி ஏவுகணையைச் செலுத்தியது. குறிதப்பவில்லை. சுமார் 1480 பேரின் உயிரும் தப்பவில்லை. ஜிப்ரால்டர் ஜலசந்தியில் நடந்த இந்தப் பேரழிவுத் தாக்குதலில் உயிர்பிழைத்தது, ஆஸ்கர் என்கிற சாம் மட்டுமே. ஆம், மூழ்கடிக்கவே முடியாத சாம் என்று அது மீண்டும் நிரூபித்தது.
லீஜன் என்கிற பிரிட்டிஷ் போர்க்கப்பல் வீரர்கள் இந்த முறை பூனையைக் காப்பாற்றினார்கள். அதன் ‘மீண்டும் மீண்டும் உயிர் பிழைத்தல்’ கதையை அறிந்த அந்த வீரர்கள், இனி அதற்குக் கப்பலும் வேண்டாம் கடலும் வேண்டாம் என்று முடிவெடுத்தனர். அதற்குப் பிறகு ஆஸ்கர் (எ) சாம், ஜிப்ரால்டர் கவர்னரின் அலுவலகத்தில் கொஞ்ச காலத்துக்கு வாழ்ந்தது. பின்பு பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கே கடற்படை வீரர்களின் குடியிருப்பில் மீதி காலத்தைக் கழித்தது.
1955ஆம் ஆண்டில் முதுமையின் காரணமாக இறந்து போனது. பிஸ்மார்க்கில் இருந்ததும் ஆர்க் ராயலில் இருந்ததும் ஒரே பூனை அல்ல என்கிற சர்ச்சைகள் உண்டு. அது மூன்று முறை பிழைத்ததற்குச் சரியான ஆதாரங்கள் இல்லை என்கிற வாதங்கள் உண்டு. எல்லாவற்றையும் தாண்டி, வாழ்க்கைக் கடலில் மூழ்கிப் போகாமல், Unsinkable Sam ஆக அந்தப் பூனை வரலாற்றில் இடம்பிடித்துவிட்டது.
(சந்திப்போம்)
- writermugil@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT