Published : 28 Aug 2018 06:28 PM
Last Updated : 28 Aug 2018 06:28 PM

டிங்குவிடம் கேளுங்கள்: காட்டு ராஜாவா சிங்கம்?

சிங்கத்தை  ஏன் காட்டுக்கு ராஜா என்கிறோம்? சிங்கம், புலி இரண்டில் எது வலிமையானது, டிங்கு?

- மு. கோபிகா ஸ்ரீ, நான்காம் வகுப்பு, மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, பூலுவபட்டி.

காலம் காலமாக விவாதிக்கப்படும் ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள், கோபிகா ஸ்ரீ! சிங்கமும் புலியும் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய விலங்குகள். இரண்டு விலங்குகளின் வலிமையைச் சோதிக்க வேண்டும் என்றால், இரண்டும் ஒரே வயதாக இருக்க வேண்டும். ஒரே எடையாக இருக்க வேண்டும். இரண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் சிங்கமும் புலியும் சண்டை போட்டு ஜெயித்தால்தான், எது வலிமையானது என்பதைச் சொல்ல முடியும்.

மிகப் பழங்கால ரோம் நகரில் உள்ள கொலோசியத்தில் சிங்கம், புலி சண்டைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அவற்றில் எல்லாம் புலிகளே வெற்றி பெற்றிருப்பதாகக் குறிப்புகள் உள்ளன. சிங்கங்கள் பொதுவாகக் கூட்டமாகச் சேர்ந்தே வேட்டையாடுகின்றன. புலிகள் தனியாகவே வேட்டையாடுகின்றன. இன்று சிங்கங்கள் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவில் இந்தியா உட்பட ஒரு சில இடங்களிலுமே வசிக்கின்றன.

புலிகள் ஆசியாவில்தான் காணப்படுகின்றன. அதனால் சிங்கங்களும் புலிகளும் ஒரே காட்டில் வசிப்பது வெகு குறைவாகவே இருக்கிறது. அப்படி வசிக்கக்கூடிய இடங்களிலும் சிங்கங்கள் சமவெளிப் பகுதியில்தான் வாழ்கின்றன. புலிகள் காட்டுக்குள் வாழ்கின்றன. சிங்கம் புலியின் எல்லைக்குள்ளோ புலி சிங்கத்தின் எல்லைக்குள்ளோ நுழைவதில்லை. இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது, சிங்கத்தின் உருவம் கம்பீரமாக இருப்பதாலும் அழகான பிடரி முடி இருப்பதாலும் காட்டின் ராஜா என்று பெயர் வைத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

அதனால்தான் காட்டு ராஜா சிங்கம் என்று நம்மால் கதைகளைப் படிக்கவும் எழுதவும் முடிகிறது. நான் ஒரு காட்டு ராஜா என்பது அந்தச் சிங்கத்துக்கும் தெரியாது, சிங்கம்தான் காட்டு ராஜா என்று புலிக்கும் தெரியாது.

ஆசிரியர்கள் திட்டும்போது வராத கோபம், பெற்றோர் திட்டும்போது மட்டும் ஏன் வருகிறது, டிங்கு?

– டி. அஜய் குமார், 9-ம் வகுப்பு, சீர்காழி.

ஆசிரியர்களைவிட பெற்றோரிடம் நமக்கு நெருக்கமும் உரிமையும் அதிகம். நெருங்கியவர்கள் நம்மை ஒன்றும் சொல்லக் கூடாது என்று நம் மனம் விரும்புகிறது. அதனால் அவர்கள் திட்டும்போது கோபம் வருகிறது. இதே நெருக்கமும் உரிமையும் இருப்பதால்தான், பெற்றோரும் நம்மைத் திட்டி, நல்வழிப்படுத்துகிறார்கள். இதைப் புரிந்துகொண்டால் பெற்றோர் மீதும் கோபம் வராது, அஜய் குமார்.

மெழுகுவர்த்தியைக் கீழ் நோக்கிப் பிடித்தாலும் மேல் நோக்கி நெருப்பு எரிகிறதே, ஏன் டிங்கு?

– தா. ஜாவினி, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.

நெருப்பில் இருந்து வரும் சூடான காற்று, சுற்றிலும் இருக்கும் குளிர்ந்த காற்றைவிட எடை குறைவானது. அதனால் எடை குறைவான காற்றை, எடை அதிகமான குளிர்ந்த காற்று மேல்நோக்கித் தள்ளுகிறது. எனவே நெருப்பு, மேல் நோக்கி எரிகிறது, ஜாவினி.

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும், டிங்கு?

- அ. சுபிக்ஷா, 9-ம் வகுப்பு,மகரிஷி வித்யா மந்திர், ஓசூர்.

ஒரு நாளைக்கு ஒரு மனிதர் 3 கிராம் சோடியம்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பு சோடியம் குளோரைடு. இதை 5 கிராம் அளவுக்கு எடுத்துக்கொண்டால் போதுமானது. ஆனால், நாம் இந்த அளவைவிட அதிகமான உப்பை எடுத்துக் கொள்கிறோம். இதைத் தவிர்ப்பது உடலுக்கு நல்லது. பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ் உட்பட நொறுக்குத்தீனிகளில், ஐஸ்க்ரீம்களில், பானங்களில் எல்லாம்கூட உப்புகள் சேர்க்கப்படுகின்றன. இதனால் நம் உடலில் உப்பின் அளவு அதிகரிக்கிறது. அவசியம் இல்லாத உணவைக் குறைத்துக்கொள்வது நல்லது, சுபிக்ஷா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x