Last Updated : 29 Oct, 2025 07:45 AM

 

Published : 29 Oct 2025 07:45 AM
Last Updated : 29 Oct 2025 07:45 AM

உலகப் புகழ் பெற்ற வாத்து! | வரலாறு முக்கியம் மக்களே! - 22

காட்டு வாத்துகள் (Mallard Ducks) பொதுவாக மறைவான இடங்களிலேயே முட்டைகள் இடும். ஆனால், எங்கிருந்தோ வந்த அந்தக் காட்டு வாத்து, அமெரிக்காவின் மில்வாகி நகரத்தின் மையத்தில் உள்ள ஒரு பாலத்தின் கீழே முட்டைகளை இட்டிருந்தது. விஸ்கான்சின் அவென்யு என்கிற அந்தப் பாலத்தின் மீது நின்று வாத்தை வேடிக்கை பார்த்தார்கள் மக்கள். கீழே ஓடும் நதியின் கரையில், கூடு அமைத்து முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருந்தது அந்த வாத்து.

வாத்து, அதன் முட்டைகள் குறித்த செய்தி, ‘தி மில்வாகி ஜர்னல்’ என்கிற பத்திரிகையில் தினமும் இடம்பெற்றது. கோர்டான் மெக்குவாரி என்கிற பத்திரிகையாளர், ‘கெர்டி’ (Gertie) என்கிற பெயரில் அந்த வாத்தைக் குறிப்பிட்டு, தினமும் செய்திகள் எழுதினார். மக்களும் வாத்து குறித்த செய்திகளை ஆர்வமாகப் படித்தார்கள். அப்போது மில்வாகி மக்கள் இருந்த மனநிலைக்கு அந்த வாத்து, மிகப்பெரிய ஆறுதலைத் தந்துகொண்டிருந்தது.

1945, ஏப்ரல். சர்வதேசங்களையும் சிதைத்துப் போட்ட இரண்டாம் உலகப் போர் நிறைவுக்கு வந்திருந்த சூழல். அமெரிக்கா இரண்டாம் உலகப் போருக்குள் நுழைந்தபோது, மில்வாகி மக்கள் ஆயிரக்கணக்கில் ராணுவத்தில் இணைந்து பணியாற்றினார்கள். போரின் முடிவில் சுமார் 1,900 பேர் இறந்து போயிருந்தார்கள். போருக்குச் சென்ற மற்ற வீரர்கள், அந்த ஏப்ரலில் மில்வாகிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

போரினால் நிகழ்ந்த இழப்புகள். வருங்காலம் குறித்த பயம். வாழ்க்கை குறித்த நிச்சயமின்மை. பொருளாதாரச் சீரழிவு. எப்படி மீண்டு வருவது என்பது குறித்த அவநம்பிக்கையான கேள்விகள். இப்படி இருள் நிறைந்திருந்த சூழலில் ஏதோ ஓர் ஒளிபோல மில்வாகிக்கு வந்து சேர்ந்திருந்தது கெர்டி.

மக்கள் கெர்டிக்கு நிலக்கடலை, பாப்கார்ன், பழத்துண்டுகளைக் கொடுத்தார்கள். அந்த ஆண்டின் அன்னையர் தினம் அன்று, கெர்டி வாத்துக்கு வாழ்த்து அட்டைகளும் வந்தன. பத்திரிகைகளிலும் வானொலி செய்திகளிலும் கெர்டி இடம்பெற்றது. கெர்டிக்கோ அதன் முட்டைகளுக்கோ எந்தவிதத்திலும் ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக, மில்வாகி நகரத்தின் சிறுவர்கள் இணைந்து ரோந்துப்படை ஒன்றை உருவாக்கினார்கள். எந்தத் தொந்தரவும் இன்றி, கெர்டி தன் முட்டைகளை அடைகாத்தது.

பாலத்தின் அடியில் திடீரென தீ விபத்து உண்டானது. மில்வாகி நதியில் படகுகள் மூலம் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். கெர்டியும் முட்டைகளும் பாதுகாக்கப்பட்டன. 1945, மே இறுதி. அடைகாக்கும் காலம் முடிவுக்கு வந்திருந்தது. கெர்டியோடு மக்களும் குஞ்சுகளின் வரவுக்காக ஆவலுடன் காத்திருந்தனர். அந்த நாளில் மில்வாகி நகர தினத்துக்காக ஊர்வலம் செல்லும் நிகழ்வு இருந்தது. சுமார் 5,000 பேர் அந்தப் பாலத்தை மெதுவாகக் கடந்து சென்றார்கள்.

அந்த நேரத்தில்தான் முதல் குஞ்சு, முட்டையை உடைத்துக் கொண்டு வெளியே வந்தது. அங்கிருந்த மக்கள் ஆரவாரம் செய்தனர். மற்ற குஞ்சுகளும் அடுத்தடுத்து வெளிவந்தன. 9 முட்டைகளில் இருந்து 6 குஞ்சுகள், கெர்டியின் வாரிசுகளாகப் பிறந்து, இரண்டாம் உலகப் போரில் துவண்டு கிடந்த அந்த மக்களுக்கு நம்பிக்கை ஒளி பாய்ச்சின.

கெர்டியின் குஞ்சுகள் நடந்து நதிக்குள் விழும் அபாயம் இருந்தது. ஆகவே வலை அமைத்து அவற்றைப் பாதுகாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஓர் இரவில் சூறாவளி வீசியது. நதியிலும் வெள்ளம் ஓடியது. கெர்டி தன் குஞ்சுகளைப் பாதுகாக்கப் போராடியது. அதில் ஒரு குஞ்சு நீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட, படகில் விரைந்த சிலர், அதைப் பத்திரமாக மீட்டனர்.

கெர்டியும் அதன் குஞ்சுகளும் ஜுனோ பூங்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டன. மக்கள் சூழ்ந்து நின்று கைகளைத் தட்டி ஆர்ப்பரிக்க, அந்தப் பூங்காவிலிருந்த குளத்தை நோக்கி கெர்டியும் அதன் குஞ்சுகளும் உற்சாக நடைபோட்டன. அவற்றுக்கு அந்தக் குளமும் பூங்காவின் சூழலும் பிடித்திருந்தது.

அங்கேயே அந்தக் குஞ்சுகள் வளர்ந்தன. கெர்டி குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்தபடி இருந்தன. லைஃப், ரீடர்ஸ் டைஜஸ்ட் ஆகிய சர்வதேசப் பத்திரிகைகளிலும் கெர்டி ‘நம்பிக்கையின் சின்னமாக’ இடம்பிடித்தது. குஞ்சுகள் பறக்கக் கற்றுக்கொண்டன. தம் சிறகுகளால் வானை அளக்கத் தயாராகின.

ஒருநாள் கெர்டி, அங்கிருந்து புறப்பட முடிவெடுத்தது. தன் குஞ்சுகளுடன் அது மில்வாகியிலிருந்து விடைபெற்றது. மக்கள் அவற்றை ஆனந்தக் கண்ணீருடன் வழியனுப்பி வைத்தார்கள். கெர்டி தன் இயல்பான காட்டு வாழ்க்கைக்குத் திரும்பிப் போனது. கெர்டியின் மீது கவனம் செலுத்தி, போர் அழுத்தத்திலிருந்து மீண்ட மில்வாகி மக்களும் தம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். பின்பு கெர்டியின் கதை, புத்தகங்களாக வெளிவந்து உலகப் புகழ்பெற்றது.

1997இல் அமெரிக்கச் சிற்பி குவெண்டோலின் கில்லென், கெர்டிக்கும் அதன் குஞ்சுக்கும் சேர்த்து வெண்கலச் சிலையை வடிவமைத்தார். சுமார் 4 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட அந்தச் சிலை, விஸ்கான்சின் அவென்யு பாலத்தின் ஒரு பகுதியில் நிறுவப்பட்டது. நம்பிக்கைச் சின்னமான கெர்டி, இப்போதும் அந்தச் சிலை மூலம் தன் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

(சந்திப்போம்)

- writermugil@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x