Published : 25 Jul 2018 11:09 AM
Last Updated : 25 Jul 2018 11:09 AM

டிங்குவிடம் கேளுங்கள்: மண்புழு உழவர்களின் நண்பனா?

பால் ஏன் பொங்குகிறது, தண்ணீர் ஏன் பொங்குவதில்லை என்று என் தோழி கேட்கிறார். நிச்சயம் உன் பதில் வேண்டும் டிங்கு.

– வித்ய பாரதி கார்த்திக், வடகுடி, காரைக்குடி.

பாலில் கொழுப்பு, சர்க்கரை, புரதம், தாதுக்கள் போன்றவை இருக்கின்றன. பாலைக் கொதிக்க வைக்கும்போது, இவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து மேல்பகுதியில் ஆடையாகப் படர்கின்றன. இவற்றின் கீழே இருக்கும் பால் வெப்பத்தால் கொதித்து, நீராவியை வெளியேற்ற முயற்சி செய்கிறது. அதே நேரம் பாலாடை இதை வெளியே போக விடாமல் தடுக்கிறது. வெப்பம் இன்னும் அதிகமானவுடன் பாலாடையைக் கிழித்துக்கொண்டு, நீராவி வெளியேறுவதால் பால் பொங்குகிறது. தண்ணீரில் இந்தச் சத்துகள் இல்லை என்பதால் அது பொங்கி வழிவதில்லை, கார்த்திக்.

 

மண்புவை ஏன் உழவர்களின் நண்பன் என்று கூறுகிறார்கள், டிங்கு?

– கு. லிபிவர்ஷ்னி, ஒன்பதாம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பள்ளி, சமயபுரம்.

மண்புழு தாவரக் கழிவுகளை உணவாக்கிக் கொண்டு, கழிவுகளை வெளியேற்றுகிறது. இதனால் மண் வளம் பெறுகிறது. மென்மையாக மாறுகிறது. காற்றும் நீரும் இந்த மண்ணுக்குள் அதிக அளவில் தங்குகின்றன. இதனால் தாவரங்களின் வேர்கள் தங்கள் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்துகொள்கின்றன. இப்படித் தாவரங்களுக்கு உதவி செய்வதால், மண்புழுவை உழவர்களின் நண்பன் என்று அழைக்கிறார்கள். இன்று மண்புழு முக்கியமான வியாபாரமாகிவிட்டது. இதே மண்புழுக்கள் தாவரங்களின் வேர்களை உணவுக்காக வெட்டிவிடுவதும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா, லிபிவர்ஷ்னி?

ராபின்சன் க்ரூசோ நாவலைப் படித்திருக்கிறாயா, டிங்கு?

– எஸ்.எஸ்.எம்.எஸ். மணியன், 9-ம் வகுப்பு, ரோஸ்மேரி மெட்ரிக். பள்ளி, திருநெல்வேலி.

ஓ… படித்திருக்கிறேன். கடல் பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி, ஒரு தீவில் ஒதுங்குவார் ராபின்சன். மனிதர்கள் வசிக்காத அந்தத் தீவில், தனியாக வாழ ஆரம்பிப்பார். தனக்கான உணவைத் தானே விளைவிப்பார். தங்குவதற்கு இடத்தை உருவாக்கிக் கொள்வார். ஆபத்துகளை எதிர்கொள்வார். பல ஆண்டுகள் கழித்து, தன்னுடைய நாட்டுக்குத் திரும்புவார். டேனியல் டீஃபோ என்ற இங்கிலாந்துகாரர் எழுதிய சுவாரசியமான நாவல். உலகப் புகழ்பெற்றது. பல மொழிகளிலும் வெளிவந்திருக்கிறது. திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்திருக்கிறது. 1719-ம் ஆண்டு வெளிவந்த இந்த நாவலுக்கு 299 வயதாகிவிட்டது.

ராபின்சன் க்ரூசோ தாக்கத்தில் 1812-ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்து எழுத்தாளர் ஜான் டேவிட் வைஸ் எழுதிய, ‘ஸ்விஸ் ஃபேமிலி ராபின்சன்’ நாவலும் சுவாரசியமாக இருக்கும். ராபின்சன் தனி மனிதராக மாட்டிகொள்வார், இவர்கள் குடும்பமாக மாட்டிக்கொள்வார்கள். இதையும் படித்துப் பாருங்கள் மணியன்.

வெங்காயம் சாப்பிட்டால் சளி பிடிக்குமா, டிங்கு?

– வி. திவ்யதர்ஷினி, 5-ம் வகுப்பு, ஸ்ரீ செளடாம்பிகா நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

அந்தக் காலத்தில் சளி, காய்ச்சல் போன்றவற்றைக் குணப் படுத்துவதற்கு வெங்காயத்தைப் பயன்படுத்தி யிருக்கிறார்கள். வெங்காயத்துக்காக நாடுகளுக்கு இடையே போர் கூட நடைபெற்றிருக்கிறது. இன்றும் சளி, காய்ச்சல், மூச்சுத் தொடர்பான பிரச்சினைகளைச் சரி செய்வதற்கு வெங்காயம் உதவுவதாக உலக சுகாதார அமைப்பும் அறிவித்திருக்கிறது. பச்சை வெங்காயத்தைச் சாப்பிட்டால் அதில் உள்ள காரத்தன்மை கண்ணீரை வரவழைக்கும். அதிகமான கண்ணீர் மூக்கு வழியாகவும் வெளியேறும். அதனால் சளி பிடிக்கும் வாய்ப்பும் உண்டாகும் என்பதால் அப்படிச் சொல்லியிருக்கலாம், திவ்யதர்சினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x