Published : 22 Oct 2025 07:29 AM
Last Updated : 22 Oct 2025 07:29 AM
புராணக் கதைகளின்படி பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, தேவர்கள் போல வேடமிட்டு அமிர்தத்தை அசுரர் விழுங்கிவிட்டார். இதை அறிந்த சூரியனும் சந்திரனும் மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் தனது சக்ராயுதத்தால் அசுரரின் தலையைத் துண்டித்தார்.
அமிர்தம் தீண்டியதால், அந்தத் தலையும் தலையில்லா உடலும் சாகாவரம் பெற்றன. பாம்பின் உடலும் மனிதத் தலையும் கொண்ட ராகுவாகவும் பாம்பின் தலையும் மனித உடலும் கொண்ட கேதுவாகவும் மாறிய அவை, தன்னைக் காட்டிக்கொடுத்த சூரியனையும் சந்திரனையும் அவ்வப்போது பிடித்து விழுங்குகிறது. இதுவே சூரிய-சந்திர கிரகணம் பற்றிய புராணக் கருத்து.
ரிக் வேதத்தில் கிரகணத்தை ஏற்படுத்தும் ஸ்வர்பானு எனும் பாம்பு குறித்த செய்தி இருந்தாலும், ராகு-கேதுவைக் கிரகணத்துடன் நேரடியாக இணைக்கும் குறிப்பு இல்லை. சாந்தோக்ய உபநிடத்தில், ராகுவின் பிடியில் முழு நிலவு சிக்குவதே கிரகணம் எனும் கருத்து உள்ளது.
‘அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த பசுங்கதிர் மதியத்து அகல் நிலாப் போல’ (நற்றிணை 377), ‘பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்’ (நற்றிணை 128) போன்ற சங்க இலக்கிய வரிகள், பாம்பு விழுங்குவதால் கிரகணம் ஏற்படுகிறது எனும் நம்பிக்கை சங்க காலத் தமிழகத்திலும் இருந்தது என்பதைக் காட்டுகின்றன.
இருப்பினும், சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்திய வானவியல் மேதை ஆரியபடர், கிரகணங்களின் இயற்கைக் காரணத்தை அறிவியல்பூர்வமாக விளக்கினார். பௌர்ணமி அன்று பூமியின் நிழலில் நிலவு நுழையும்போது சந்திர கிரகணமும், அமாவாசை அன்று நிலவின் நிழல் பூமியின் மேல் விழும் போது சூரிய கிரகணமும் ஏற்படுகின்றன என்று அவர் தெளிவாகக் கூறினார். அவரது நூல்களில் ராகு-கேது அல்லது ஜோதிடப் பலன்கள் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிரகணம் என்றால் என்ன? - பூமி, நிலவு, சூரியன் ஆகிய மூன்றும் ஒரு நேர்க்கோட்டில் வரும்போது இது நிகழ்கிறது. சூரிய கிரகணம் என்பது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு வரும்போது, பூமியின் சில இடங்களில் இருந்து பார்க்கும்போது சூரியன் முழுமையாக அல்லது பகுதியாக மறைவதாகும். ஒரு குடையின் கீழ் நின்றால் சூரியன் மறைவது போல இதுவும் ஒரு நிழல் விளையாட்டு. மூன்றும் சரியான நேர்க்கோட்டில் அமைந்தால் முழுச் சூரிய கிரகணமும், சற்று விலகி இருந்தால் பகுதி சூரிய கிரகணமும் ஏற்படும்.
அதேபோல, சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, நிலவு எனும் வரிசையில் மூன்றும் ஒரு நேர்க்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படுவதால் ஏற்படுகிறது. இதுவும் முழுமையாக அல்லது பகுதியாக இருக்கலாம். ஆரியபடரின் காலத்திலேயே வாழ்ந்த வராஹமிஹிரர் போன்ற அறிஞர்கள், ராகு விழுங்குவதால் கிரகணம் ஏற்படுகிறது எனும் கருத்தை அறிவியல்பூர்வமாக மறுத்துள்ளனர்.
ராகு சூரியனை விழுங்கினால், பூமியின் எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் கிரகணம் தெரிய வேண்டும். ஆனால், நடைமுறையில் பூமியின் ஒரு பகுதியில் கிரகணம் தொடங்கும் நேரத்தில், மற்றொரு பகுதியில் அது தெரிவதில்லை. சூரியன் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும். பாம்பு கடித்து சூரியனின் அளவு மறைபட்டால் உலகம் முழவதும் அதே பகுதி அளவில் சூரியன் தென்பட வேண்டும்.
எனவே புராணக் கதைகளுக்கு இடமில்லை என்பதை இது உறுதிப்படுத்துகிறது என்கிறார் வராஹமிஹிரர். ‘ஷிஷ்யதிவ் ருத்திதா தந்திரம்’ எனும் நூலில் லல்லாச்சாரியார் என்பவரும் இதே கருத்தை வலியுறுத்தி, கிரகணம் என்பது ஒரு இயற்கை நிகழ்வான ‘நிழல் விளையாட்டு’ என்று விளக்குகிறார். கிரகணத்தின்போது சூரியனில் அல்லது சந்திரனில் எந்த ஒரு சிறப்பு மாற்றமும் ஏற்படு வதில்லை. எப்போதும் போலவே அவை தங்கள் ஒளியை வீசிக்கொண்டிருக்கின்றன.
எந்தவிதமான மர்மமான கதிர்வீச்சும் வெளிப்படுவதில்லை. உலகின் பிற பகுதிகளில், கிரகணத்தின்போது கர்ப்பிணிப் பெண்கள் ஓடி ஒளிவதில்லை. அங்கு அவர்களுக்கோ அல்லது அவர்களின் குழந்தை களுக்கோ எந்தத் தீங்கும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. கருக்கொண்ட பூச்சிகள் முதல் விலங்குகள் வரை, கிரகணத்தின்போது தங்கள் இயல்பான செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்கும் எந்தவித ஆபத்தும் இல்லை. சூரிய, சந்திர கிரகணங்கள் அற்புதமான வானியல் காட்சிகள்! இயற்கையின் இந்த அருமையான விளையாட்டைக் கண்டு மகிழ வேண்டியது நம் கடமை. ஒரு நிழலைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை.
(அறிவோம்)
- tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT