Published : 22 Oct 2025 07:26 AM
Last Updated : 22 Oct 2025 07:26 AM

ஏன் கிருமிகளில் இருந்து மருந்து தயாரிக்கிறார்கள்? | டிங்குவிடம் கேளுங்கள்

சந்திர கிரகணம் நிகழும்போது நிலவு ஏன் சிவப்பாகக் காணப்படுகிறது, டிங்கு? - எஸ்.ஜெ. கவின், 10-ம் வகுப்பு, கிறைஸ்ட் தி கிங் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்.

சூரியன், பூமி, நிலவு ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளியை நடுவில் இருக்கும் பூமி தடுத்துவிடுகிறது. இதனால் பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்படிப் பூமி சூரியனின் ஒளியைத் தடுத்தாலும் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி வளைந்து, நிலவை அடைய முற்படும்போது, பூமியில் உள்ள வளிமண்டலத்தில் தூசுகளால் குறைந்த அலைநீளம் கொண்ட வண்ணங்கள் எல்லாம் சிதறடிக்கப்பட்டு, அலைநீளம் அதிகமான சிவப்பு மட்டும் சிதறடிக்கப்படாமல் நிலவை அடைகிறது. இதனால் நிலவு சிவப்பாகத் தெரிகிறது, கவின்.

ஏன் கிருமிகளில் இருந்து மருந்து தயாரிக்கிறார்கள், டிங்கு? – வை. சிவப்பிரியா, 8-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, தங்களாச்சேரி, மதுரை.

தடுப்பூசி என்பது மருந்து. உடலில் ஒரு நோய்க்கு எதிராக, தற்காப்பு சக்தியை உருவாக்கப் பயன்படுகிறது. இறந்த அல்லது மெதுவாகச் செயல்படும் கிருமிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்தை உடலில் செலுத்தும்போது, கிருமிகள் நுழைந்துவிட்டதாக எண்ணி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.

பிறகு நிஜமாகவே நோய்க் கிருமிகள் உடலுக்குள் நுழையும்போது, இந்த எதிர்ப்பு சக்தி சிறப்பாக அதை எதிர்த்துப் போராடுகிறது. அதனால்தான் கிருமிகளில் இருந்தே அவற்றை எதிர்க்கும் தடுப்பு மருந்தை உருவாக்குகிறார்கள், சிவப்பிரியா.

சில நேரத்தில் கண் இமைகள் வேகமாகத் துடிப்பது ஏன், டிங்கு? – கா. கருப்பாயி, 8-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

எப்பொழுதாவது கண் இமைகள் சில நொடிகளோ ஒரு நிமிடத்துக்கோ துடிப்பது உண்டு. தூக்கமின்மை, சத்துக் குறைபாடு, மன அழுத்தம், கண் சோர்வு போன்ற காரணங்களால் இமைகள் இப்படி வேகமாகத் துடிக்கின்றன. எப்போதாவது இப்படித் துடிப்பதில் பிரச்சினை இல்லை. இந்தத் துடிப்பு பல நாட்கள் தொடர்ந்தால் மருத்துவரைச் சந்திக்க வேண்டும், கருப்பாயி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x