Published : 22 Oct 2025 07:22 AM
Last Updated : 22 Oct 2025 07:22 AM
நைல் முதலைகள் கிட்டத்தட்ட ஆப்ரிக்கா முழுவதுமே காணப்படுகின்றன. ஆறுகள், ஏரிகள், சதுப்பு நிலங்களில் வாழும் நன்னீர் முதலைகள் இவை. பொதுவாக வளர்ந்த ஆண் முதலைகள் 12 முதல் 16.5 அடி வரை நீளமாக இருக்கும். அவற்றின் எடை 1,000 கிலோ வரைகூட இருக்கும்.
வளர்ந்த பெண் முதலைகள் நீளத்திலும் எடையிலும் ஆண் முதலைகளைவிட 30 சதவீதம் குறைவாக இருக்கும். இவற்றின் ஆயுள் 70 ஆண்டுகள். ஆனால், முதலைப் பண்ணைகளில் பராமரிக்கப்பட்டால், அதிக ஆண்டுகள் வாழும். அப்படி வாழ்ந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ஒரு முதலைதான், ஹென்றி.
இது போட்ஸ்வானாவில் 1900ஆம் ஆண்டில் பிறந்ததாகக் கருதப்படுகிறது. ஹென்றி என்பவர், 1903ஆம் ஆண்டில் இதை அடையாளம் கண்டு, தன் பெயரையே அதற்கு வைத்தார்.
1983ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவின் Crocworld மையத்துக்கு ஹென்றி கொண்டு வரப்பட்டது. மனிதர்களின் பராமரிப்பில் பாதுகாக்கப்பட்டது. 2024, டிசம்பரில் ஹென்றியின் 124வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதன் வாரிசுகள் ஆயிரத்தைத் தாண்டும்.
இப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன், வேட்டையாடும் திறனுடன், மிகப்பெரிய அளவுடன் ஹென்றி வாழ்ந்து வருகிறது. பொதுவாக முதலைகள் சில மாதங்களுக்குக்கூட உணவின்றி இருக்கும். தன் உடலில் சேர்த்து வைத்திருக்கும் ஆற்றலைத் தேவைக்கேற்பப் பயன்படுத்திக் கொண்டு வாழும்.
மனிதர்களின் பராமரிப்பில் இருக்கும் ஹென்றிக்கோ, உணவு கிடைப்பதில் தடையில்லை. ஆகவே, அது தன் ஆயுளை நீட்டித்துக் கொண்டு,வாழ்ந்து வருகிறது. உலகின் வயதான ஆண் முதலை ஹென்றிதான் என்று நம்பப்படுகிறது.
குஸ்டாவ் முதலை தன் வாழ்நாளில் பிடிபட்டதே இல்லை. 1955ஆம் ஆண்டில் பிறந்ததாகக் கருதப்படும் குஸ்டாவ், புருண்டி நாட்டின் ருஸிஸி ஆற்றுப் பகுதி களிலும், கிழக்கு ஆப்ரிக்காவின் டான்கன்யிகா ஏரிப் பகுதிகளிலும் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.

1987ஆம் ஆண்டில் மனிதர்கள் பலர், இந்த முதலையினால் கொல்லப் பட்டதாகச் செய்திகள் இருக்கின்றன. பிரான்ஸைச் சேர்ந்த விலங்கியல் ஆய்வாளர் பேட்ரிஸ் ஃபே புருண்டியில் சுமார் 20 ஆண்டுகள் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டார்.
ஃபேதான் அந்த முதலைக்கு குஸ்டாவ் என்று பெயர் வைத்தார். இதற்கு பிரெஞ்சு மொழியில் ‘கடவுளின் ஊழியன்’ என்று பொருள். அவர் முதலில் தெரிந்துகொண்ட விஷயம், மற்ற நைல் முதலைகளைவிட குஸ்டாவ் இரண்டரை மடங்கு பெரியது.
அதாவது அது 20 அடி நீளமும், சுமார் 900 கிலோ எடையும் கொண்டது. குஸ்டாவ் வாழும் இடங்களில் ஆய்வுகளை மேற் கொண்டார் ஃபே. மற்ற நைல் முதலைகளைப் போல குஸ்டாவ் வேகமாகச் செயல்படுவதில்லை. அதன் பெரிய அளவு காரணமாக, தரையில் மெதுவாகவே நகர்ந்தது. ஆனால், நீரில் வரிக்குதிரையையோ பெரிய நீர்யானை யையோகூட எளிதில் வீழ்த்திவிடக் கூடியது.
பொதுவாக டான்கன்யிகா ஏரியில் அமைந்த ஒரு சிறு தீவுப்பகுதியில் காணப்படும் குஸ்டாவ், ஒவ்வோர் ஆண்டும் ருஸிஸி ஆற்றுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. போகும் வழி எல்லாம் வேட்டைதான். அதில் மனித வேட்டையும் உண்டு என்று ஃபே குறிப்பிட்டிருக்கிறார்.
அந்த ஏரிக்கரையிலும் நதியின் கரையிலும் வாழ்ந்த மக்கள் பலரும், நீராட வந்து போராடி உயிரிழந்ததாகச் செய்திகள் உண்டு. அப்படித்தான் குஸ்டாவ் 300க்கும் மேற்பட்ட மனிதர்களைக் கொன்றதாகச் சொல்லப்படுகிறது. வேறு முதலைகளால் கொல்லப்பட்ட மனிதர்களின் கணக்கும், வேறு விதங்களில இறந்த மனிதர்களின் கணக்கும் குஸ்டாவ்வின் மீது எழுதப்பட்டுவிட்டது என்று சிலர் அதை மறுக்கிறார்கள்.
குஸ்டாவ்வை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்று திட்டம் போட்டார் ஃபே. 30 அடி நீளமுள்ள கூண்டு, குஸ்டாவ் உலவும் நீர்ப்பகுதியில் அமைக்கப்பட்டது. அதில் கேமரா ஒன்றும் பொருத்தப்பட்டது. குஸ்டாவ் உலவும் தரைப்பகுதியிலும் அதைப் பிடிக்கக் கண்ணிகள் வைக்கப்பட்டன.
அதில் வேறு சில முதலைகளே சிக்கின. குஸ்டாவ் அகப்படவே இல்லை. ஒருமுறை கூண்டில் ஆடு ஒன்றை வைத்தார்கள். இரவில் இடி இடித்ததில் கேமரா பழுதாகி இருந்தது. காலையில் பார்க்கும்போது கூண்டில் ஆடும் இல்லை, குஸ்டாவ்வும் இல்லை.
ஃபே, குஸ்டாவ்வைப் பிடிக்கச் சுமார் இரண்டு ஆண்டுகள் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. குஸ்டாவ்வை வேட்டையாடிப் பிடிக்கவும் முயற்சிகள் நடந்திருக்கின்றன. அதன் உடம்பில் வெவ்வேறு இடங்களில் மூன்று தோட்டாக்கள் பாய்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அதை யாராலும் பிடிக்க இயலவில்லை. வரலாற்றில் பதிவான மிக ஆக்ரோஷமான முதலை குஸ்டாவ்தான்.
2016க்குப் பிறகு குஸ்டாவ் யார் கண்ணிலும் படவில்லை. 2019ஆம் ஆண்டு புருண்டி பத்திரிகையில் குஸ்டாவ் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியானது. யார், எப்போது, எப்படி அதைக் கொன்றார்கள் என்கிற விவரங்கள் இல்லை. அதற்கான ஒளிப்படங்களோ ஆதாரங்களோ கொடுக்கப்படவில்லை.
அதற்குப் பின்பு குஸ்டாவ் குறித்த செய்திகள் எதுவும் இல்லை. இருந்தாலும் அந்தப் பகுதியில் நீராடும் மக்கள், அந்த ராட்சச முதலை எப்போது வேண்டுமானாலும் தாக்க வரலாம் என்று இப்போதும் நடுங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
(சந்திப்போம்)
- writermugil@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT