Last Updated : 27 Aug, 2014 12:00 AM

 

Published : 27 Aug 2014 12:00 AM
Last Updated : 27 Aug 2014 12:00 AM

தண்ணி ஏன் வழுக்கி விடுது?

வீட்டின் நடு அறையில் உட்கார்ந்திருந்த கவின், மற்றொரு அறைக்குச் செல்வதற்காக வேகமாக எழுந்து நடந்து சென்றான். டைல்ஸ் தரையில் தண்ணீர் கொட்டிக்கிடப்பதைப் பார்க்காமல், அவன் வேகமாகச் சென்றதால் வழுக்கிக் கீழே விழப் பார்த்தான்.

பக்கத்தில் இருந்த அப்பா ஓடி வந்து, அவனைத் தாங்கிப் பிடித்ததால் கவின் அடிபடாமல் தப்பித்தான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனி சிரித்தாள்.

"ரஞ்சனி! ஒருத்தர் கீழே விழும்போது அவங்களுக்கு உதவி செய்யாம இப்படித்தான் சிரிப்பியா?" என நிலா டீச்சர் அதட்டினார்.

"அம்மா! கொஞ்ச நேரத்துக்கு முன்னால டம்ளர்ல இருந்த தண்ணிய அவன்தான் கீழே கொட்டினான். அப்பவே அதைத் துடைச்சிருந்தா இப்போ விழுந்திருக்க மாட்டான்ல. அத நினைச்சுத்தான் சிரிச்சேன்" என்றாள் ரஞ்சனி.

"அவன் சின்ன பையன். தரையில தண்ணிய ஊத்தினா வழுக்கி கீழே விழுந்துடுவோம். அதனால அப்படி ஊத்தக் கூடாதுன்னு நீதான் அவனுக்குச் சொல்லியிருக்கணும்" என்றார் நிலா டீச்சர்.

"சரிம்மா" என்றாள் ரஞ்சனி.

"அம்மா! தரையில கிடக்கிற தண்ணியில கால வைச்சா ஏம்மா வழுக்கி விழுறோம்?" என்று கேள்வியைக் கேட்டான் கவின்.

"கவின் ஒவ்வொரு தடவை கீழே விழுறப்பவும், புதுசு புதுசா விஞ்ஞான விளக்கங்கள தெரிஞ்சிக்க வாய்ப்பு கிடைக்காது" என்று சொல்லி மீண்டும் சிரித்தாள் ரஞ்சனி.

"அம்மா! தண்ணி இருக்குற தரையில நடக்குறப்ப ஏன் கீழே விழுறோம்னு சொல்லுங்கம்மா" என்று மீண்டும் தன் கேள்விக்கே வந்தான் கவின்.

"சரி சொல்றேன்" என விளக்கத் தொடங்கினார் நிலா டீச்சர்.

"தரையில நாம நடக்கும்போது, சீராக நடக்கணும்னா தரைக்கும், நமது கால்களுக்கும் இடையே போதுமான பிடிப்பு (Grip) அவசியம். அதுக்கு காலுக்கும் தரைக்கும் இடையே சீரான உராய்வு இருக்க வேண்டியது ரொம்ப ரொம்ப முக்கியம். போதுமான உராய்வு இருந்தாதான் நாம தரையில காலை ஊனும்போது, தரையிலிருந்து போதுமான உந்து சக்தி கிடைச்சு, நாம் காலை எடுத்து அடுத்த அடியை வைக்க முடியும்.

நம்ம கால்களோட அடிப் பகுதி இயல்பாகவே சொரசொரப்பாக இருக்கும். இதனால நாம தரையில காலை வைக்கும்போது தரைக்கும், காலுக்கும் இடையே போதுமான உராய்வு கிடைச்சு, இயல்பாக நடக்க முடியுது.

செருப்போ, ஷூவோ போட்டுகிட்டு போகும்போது சீரான உராய்வு கிடைச்சாதான் நடக்கவோ, ஓடவோ முடியும். அதுக்காகத்தான் செருப்பு, ஷூவின் அடிப் பகுதிகள்ல

சிறுசிறு பள்ளங்களும், மேடுகளும் இருக்கும்படி தயாரிக்கிறாங்க.

அந்தக் காலத்துல வீடுகள்ல மண் தரையாகவோ சிமெண்ட் தரையாகவோ இருக்கும். அந்தத் தரைப் பகுதிகள் பெரும்பாலும் சொரசொரப்பா இருக்குங்கிறதால நடக்கும்போது தேவையான உராய்வு கிடைச்சு, இயல்பா நடக்க முடியும்.

ஆனால், இப்போ பெரும்பாலான வீடுகள்ல டைல்ஸ், மார்பிள், கிரானைட் கற்களால தரைய அமைக்கிறாங்க. மண், சிமெண்ட் தரையோட ஒப்பிட்டா டைல்ஸ், மார்பிள், கிரானைட் தரைகள் எல்லாம் சொரசொரப்பு குறைஞ்சு, வழுவழுப்பா இருக்கும்.

இதுல அந்த தரைல தண்ணிய வேற ஊத்துனம்னா வழுவழுப்பு இன்னும் அதிகமாகி, நாம காலை ஊனும்போது போதுமான உராய்வு கிடைக்காமப் போகும், வழுக்கி விழுந்திடுவோம். இதுபோல தண்ணி கிடக்கும் தரைகள்லயும், வழுவழுப்பான தரைகள்லயும் நடக்கும்போது வேகமாக ஓடாம, காலை நல்லா தரையில அழுத்தி, ஊன்றி நடக்கணும்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல. தரையில இயங்குற எல்லாப் பொருள்களுக்கும் இது பொருந்தும். உதாரணத்துக்குத் தரையில ஓடற வாகனங்கள்ல தரைக்கும் டயர்களுக்கும் இடையே போதுமான உராய்வு இருந்தாதான், வாகனங்கள்

சீராக இயங்க முடியும். இதுக்காகத்தான் வாகன டயர்கள்ல பல மேடு பள்ளங்கள் இருக்கும்படி தயாரிக்கிறாங்க.

புது டயர்ல நிறைய பள்ளங்கள் இருக்கும். அப்போ போதுமான உராய்வு கிடைச்சு தரைக்கும், டயருக்கும் இடையே சரியான பிடிமானம் இருக்கும். அதனால வாகனத்தை தேவையான வேகத்துல ஓட்டவோ, தேவைப்படும்போது உடனடியாக நிறுத்தவோ, திருப்பவோ முடியுது.

ஆனா பழைய டயர்கள்ல இந்த மேடு பள்ளங்கள் தேய்ஞ்சு போய் வழுவழுப்பாக மாறிடும். இதனால் தரைக்கும், டயருக்கும் இடையே உராய்வு குறைஞ்சு, தேவையான பிடிமானம் கிடைக்காத நிலை ஏற்படும். அதனாலதான் தேய்ஞ்சுபோன பழைய டயர்களப் பயன்படுத்தற பல வாகனங்கள் விபத்துகள சந்திக்குது" என விளக்கத்தைச் சொல்லி முடித்தார் நிலா டீச்சர்.

"அம்மா! நீங்க சொன்ன விளக்கத்துலேர்ந்து சீரான உராய்வுங்கிறது வாழ்க்கையோட பல செயல்பாடுகளுக்கு எவ்வளவு முக்கியம்ணு புரியுதும்மா" என்றான் கவின்.

"இப்போ கீழே விழுந்ததுக்கு விளக்கம் கிடைச்சிருச்சு. இனிமே அடிக்கடி நீ கீழே விழுந்தா, நாம இன்னும் நிறைய விஷயங்கள தெரிஞ்சுக்கலாம்" என்று சொல்லி மீண்டும் சிரித்தாள் ரஞ்சனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x