Published : 15 Oct 2025 07:42 AM
Last Updated : 15 Oct 2025 07:42 AM
1951. பந்தாவ்கர் காட்டுப்பகுதியில் அந்த மகாராஜா தன் துப்பாக்கியால் ஒரு தாய்ப்புலியைக் குறிபார்த்தார். தோட்டா தப்பவில்லை. அதன் குட்டிகளும் தப்பவில்லை. ஆனால், ஒரே ஒரு குட்டியை மட்டும் அவர் சுடவில்லை. தன் பணியாளர்களிடம் அந்தப் புலிக்குட்டியைப் பிடித்து வரச் சொன்னார். அதன் பட்டுடலைத் தடவிப் பார்த்தார்.
உடல் முழுக்க வெள்ளையும் கொஞ்சமாக இளங்காவியும் கலந்த நிறத்தில் இருந்தது. குட்டியின் ஊதா நிறக் கண்களில் பயம் தெரிந்தது. ‘இதை அரண்மனைக்குக் கொண்டு வாருங்கள்’ என்று மகாராஜா கட்டளை இட்டார். அந்த மகாராஜா தன் வாழ்க்கையில் செய்த நல்ல காரியங்களில் இதுவும் ஒன்று. வெள்ளைப் புலிகள் விஷயத்தில் அவர் எடுத்தது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு.
இல்லை என்றால் வெள்ளைப் புலிகளே இந்தப் பூமியில் இல்லாது போயிருக்கும். மத்தியப் பிரதேசத்தின் ரேவா சமஸ்தானத்தை ஆண்ட கடைசி மகாராஜா மார்தாண்ட் சிங். அந்த வெள்ளை ஆண் புலிக்குட்டிக்கு அவர் வைத்த பெயர், மோகன். ‘அழகு’ என்று அர்த்தம்.
ரேவா சமஸ்தானத்தை ஆட்சி செய்தவர்கள் எல்லாம் புலி வேட்டைப் பிரியர்களே. அங்கே பந்தாவ்கர் காட்டுப் பகுதியில் புலிகள் அதிகம். அவற்றை வேட்டையாடுவதற்கு என்றே பிரிட்டிஷ் காரர்களும் துப்பாக்கிகளோடு திரிந்தார்கள். மகாராஜா மார்தாண்ட் சிங் மட்டும் தன் வாழ்நாளில் 131 புலிகளைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்.
அவர் தந்தை மகாராஜா குலாப் சிங், 1919ஆம் ஆண்டில் பாதுகாப்பான இடத்தில், பந்தோபஸ்துடன் நின்றுகொண்டு தனது முதல் புலியைச் சுட்டார். பின்பு ஒரே ஆண்டில் 83 புலிகளைச் சுட்ட மகாராஜா என்று மோசமான சாதனையைப் படைத்தார். குலாப் சிங், தன் வாழ்நாளில் சுட்ட புலிகளின் எண்ணிக்கை 616. அதில் வெள்ளைப் புலிகளும் உண்டு.
ரேவா சமஸ்தானத்தின் கோவிந்த்கர் அரண்மனை வளாகத்தில் மோகனை வளர்ப்பதற்கான ஏற்பாடு களைச் செய்யச் சொன்னார் மகாராஜா. ஆனால், மோகனுக்கு அரண்மனையும் மனிதர்களும் பிடிக்க வில்லை. ஆகவே, இரண்டே நாள்களில் காணாமல் போனது.
‘எங்கே இருந்தாலும் மோகனைத் தேடிப் பிடித்துக் கொண்டு வாருங்கள்’ என்று மகாராஜா கட்டளையிட, வீரர்கள் தேடினார்கள். மண்ட் கோட்டைப் பகுதியில் மோகன் பிடிபட்டது. மீண்டும் கோவிந்த்கர் அரண் மனைக்குக் கொண்டு வரப்பட்டது. மகாராஜாவுக்கு மகிழ்ச்சி. மோகனுக்குப் பாதுகாப்பையும் வசதிகளையும் அதிகப் படுத்தினார்.
இனி தப்பிக்க வழியே இல்லை. மகாராஜா, சுமார் 20 கி.மீ. தள்ளி அமைந்திருந்த ரேவா அரண்மனையிலிருந்து, கோவிந்த்கர் அரண்மனைக்கு மோகனைப் பார்ப்பதற்காகவே வந்து போனார். ஆகவே, மோகனும் அவரின் அன்பை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தது. முதன் முதலில் மனிதர்களால் செல்லமாக வளர்க்கப்பட்ட வெள்ளைப் புலி என்கிற வரலாற்றுப் பெருமை மோகனுக்கு உண்டு.
வங்கப் புலிகளில் வெள்ளைப் புலிகள் அரிதானவை. பத்தாயிரத்தில் ஒன்று வெள்ளைப் புலியாகப் பிறக்க வாய்ப்பு உண்டு. இருந்தாலும் வரலாறு எங்கும் வெள்ளைப் புலி வேட்டையாடப்பட்டிருக்கிறது. 1561ஆம் ஆண்டில் அக்பரின் அவைக் குறிப்புகளைச் சொல்லும் அக்பர்நாமாவில் அவர், இரண்டு வெள்ளைப் புலிகளை வேட்டையாடியதாகக் குறிப்பு இருக்கிறது. 1872இல் மிர்ஸாபுர் பகுதியில் மேஜர் டபிள்யூ.எம். ஸ்டீவர்ட், வெள்ளைப் புலியைச் சுட்டதாகக் குறிப்பு உள்ளது.
1933ஆம் ஆண்டில் பிஹாரில் மகாராஜா கோபால் சரண் சிங், வெள்ளைப் புலியை வேட்டையாடி இருக்கிறார். 1958ஆம் ஆண்டில் பிஹாரின் ஹசாரிபாக் பகுதியில், அகர்வாலா குடும்பத்தினரால் பெண் வெள்ளைப் புலி ஒன்று வேட்டையாடப்பட்டிருக்கிறது. வனப்பகுதியில் வேட்டையாடப்பட்ட கடைசி வெள்ளைப் புலி இது என்று நம்பப்படுகிறது.
எனில், இப்போது வெள்ளைப் புலிகள் என்னவாயின? ரேவாவின் செல்ல வெள்ளைப் புலி மோகனின் தயவால், அதற்குப் பிறந்த வாரிசுகள், அதன் வாரிசுகளுக்குப் பிறந்த வாரிசுகள் எல்லாம் உலகின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் உயிரியல் பூங்காக்களுக்கு அனுப்பப்பட்டன. இன்றைக்கு உலகம் எங்கும் சுமார் 200 வெள்ளைப் புலிகள் உயிரியல் பூங்காக்களில் உள்ளன. அதில் பாதி அளவு இந்தியாவில் உள்ளன. அந்த வெள்ளைப் புலிகளுக்கு மரபணு பரிசோதனை செய்தால், அவை மோகனின் சந்ததியாக இருக்க வாய்ப்பு அதிகம்.
1969. மோகனுக்கு வயது 19. பிரதமர் இந்திரா காந்தி, மகாராஜா மார்தாண்ட் சிங்கிடம், ‘வேட்டை யாடியது போதும், இனி தேசிய விலங்கான புலிகளைக் காப்பாற்ற வேண்டியது கடமை’ என்று கேட்டுக்கொண்டார். மத்தியப் பிரதேசத்தில் புலிகளின் புகலிடமாக, பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியாக, பந்தாவ்கர் தேசியப் பூங்கா உருவாக்கப்பட்டது.
துப்பாக்கியைத் தூர எறிந்த மார்தாண்ட் சிங், நோய்வாய்ப்பட்டுக் கிடந்த மோகனுக்காக மனம் வருந்திக் கிடந்தார். அந்த டிசம்பர் 19 அன்று மோகனின் உயிர் பிரிந்தது. ராஜ மரியாதையுடன் மோகனுக்கான இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. அதன் கம்பீரமான முகம், ரேவாவின் அருங்காட்சியகத்தில் இப்போதும் பாதுகாக்கப்படுகிறது.
(சந்திப்போம்)
- writermugil@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT