Published : 15 Oct 2025 07:34 AM
Last Updated : 15 Oct 2025 07:34 AM
மிருதுளாவும் தருணும் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். புங்கை மரத்திலிருந்து பூக்கள் கொட்டிக் கிடந்தன. தருண் பூக்களை அள்ளி வந்தான். அந்தப் பூக்களால் அப்பா, அம்மா, தம்பியின் பெயரோடு தன் பெயரையும் மண் தரையில் எழுதினாள் மிருதுளா.
அப்போது மின்னல் வேத்தில் ஒரு பூனைக்குட்டி ஓடிவந்தது. அதன் பின்னாலேயே ஒரு நாய் துரத்திக்கொண்டு வந்தது. இவர்கள் இருவரும் சுவர் ஓரம் ஒதுங்கினார்கள். அந்தப் பூனைக்குட்டி பக்கத்தில் இருந்த முள்புதரில் மறைந்து கொண்டது. சத்தம் கேட்டு வெளியே வந்த அம்மா நாயைத் துரத்தினார்.
மிருதுளாவும் தருணும் அந்தப் பூனைக்குட்டியைத் தேடினார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு தருண் பூனைக்குட்டியைக் கண்டறிந்தான். அக்காவிடம் காட்டினான். அது பயத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தது. இருவரும் ‘மியாவ் மியாவ்’ என்று கூப்பிட்டுப் பார்த்தார்கள்.
அது இடத்தை விட்டு நகரவே இல்லை. “அம்மா, அந்தப் பூனைக்குட்டி பயந்துட்டு உள்ளே இருக்கு... வெளியே வர, நீங்க கொஞ்சம் உதவி பண்ணுங்கம்மா” என்றான் தருண். “அது பயத்துல இருக்கு… கொஞ்ச நேரத்துல அது வெளியே வந்துடும். நம்மால அந்த முள்புதருக்குள்ள போக முடியாது. நீங்க போய் விளையாடுங்க” என்றார் அம்மா.
"எனக்குக் கொஞ்சம் பாலும் பிஸ்கட்டும் குடுங்க" என்றான் தருண். ஒரு கிண்ணத்தில் பாலையும் பிஸ்கட்டுகளையும் கொடுத்தார் அம்மா. அதை எடுத்துக்கொண்டு பூனைக்குட்டி இருக்கும் இடத்துக்கு வந்தான் தருண். அதைக் காட்டி அழைத்தான். அந்தப் பூனைக்குட்டி நகரவே இல்லை. வெவ்வேறு வழிகளில் அந்தக் குட்டியை அழைத்து, தருணும் மிருதுளாவும் சோர்ந்து விட்டார்கள்.
அப்போதுதான் மிருதுளாவுக்கு ஒரு யோசனை வந்தது. அம்மாவின் திறன்பேசியை வாங்கினாள். பூனை கத்துவது போன்ற ஒலியை ஒலிக்கவிட்டாள். சத்தத்தைக் கேட்டதும் பூனைக்குட்டி எழுந்து நின்றது. கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் அருகில் வர ஆரம்பித்தது. அருகில் வந்ததும் பூனைக்குட்டியைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டான் தருண். பால் கிண்ணத்தை வாயருகே எடுத்துச் சென்றான். வேகமாகப் பாலைக் குடிக்க ஆரம்பித்தது. மிருதுளா புங்கைப் பூக்களால் ஒரு பூனைக்குட்டியை வரைந்தாள்.
- நா.கோகிலன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT