Published : 15 Oct 2025 07:27 AM
Last Updated : 15 Oct 2025 07:27 AM
நிலவு ஆண்டுக்குச் சுமார் 3.78 செ.மீ. வேகத்தில் பூமியை விட்டுத் தொலைவுக்குச் செல்கிறது. இந்த உண்மை லேசர் கற்றைத் தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் துல்லியமாகக் கணக்கிடப் பட்டுள்ளது. 1969இல் நீல் ஆம்ஸ்ட்ராங்கை ஏந்திச் சென்ற அப்பல்லோ விண்கலத்தில், லேசர் ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது. நிலவில் தரையிறங்கிய அந்த விண்கலத்தின் பகுதி, அங்கேயே தங்கிவிடும் வகையில் வடிவமைக்கப் பட்டிருந்தது.
பின்னர் 1970இல் ஏவப்பட்ட லூனா 17 விண்கலத்தில் சென்ற சோவியத் ஒன்றியத்தின் முதல் ரோபாட் வாகனமான ‘லூனோகோட் 1’இலும், இதே போன்ற லேசர் பிரதிபலிப்பான் இருந்தது. இவ்வாறு அப்பல்லோ 14, அப்பல்லோ 15 (1971), லூனா 21 (1973) ஆகிய விண்கலங்களுடன் மொத்தம் ஐந்து பிரதிபலிப்பான்கள் நிலவின் மேற்பரப்பில் வைக்கப்பட்டன. சமீபத்தில் இந்தியாவின் சந்திரயான்-3 திட்டத்திலும், மார்ச் 2, 2025 அன்று புளூ கோஸ்ட் மிஷன் 1 மூலம் நிலவில் தரையிறங்கிய ‘ஃபயர்ஃபிளை’ விண்கலத்திலும் இத்தகைய பிரதிபலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தப் பிரதிபலிப்பான் கண்ணாடிகளின் மீது பூமியிலிருந்து மிகத் துல்லியமான லேசர் ஒளித் துடிப்புகள் அனுப்பப்படுகின்றன. அந்தத் துடிப்புகள் கண்ணாடியில் பட்டு, பூமியை நோக்கிப் பிரதிபலித்துத் திரும்பும். நிலவில் பட்டுத் தெறித்து மீண்டும் வர எடுத்துக்கொள்ளும் நேரத்தின் அடிப் படையில், நிலவின் தொலைவு மிகத் துல்லியமாகக் கணக்கிடப்படுகிறது.
இவ்வாறு அளவிட்டுப் பார்த்தபோது, ஆண்டு தோறும் பூமியிலிருந்து நிலவு சராசரியாகச் சுமார் 3.78 செ.மீ. விலகிச் செல்வது கண்டறியப்பட்டது. நிலவு பூமியை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. எனவே இயற்கையாகவே ஒவ்வொரு நாளும் பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தூரம் மாறுபடும். அதிகபட்ச தொலைவு 4,06,731 கி.மீ. ஆகவும், குறைந்தபட்ச தொலைவு 3,64,397 கி.மீ. ஆகவும், சராசரித் தொலைவு 3,84,748 கி.மீ. ஆகவும் அமைகிறது. ஆண்டுதோறும் இந்தச் சராசரித் தொலைவு 3.78 செ.மீ. அதிகரித்துவருகிறது.
இதற்குக் காரணம், பூமியின் சுழற்சி வேகம் குறைவதே. பூமியின் அளவில் கால் பங்கு அளவுள்ள நிலவு, பூமியின் மீது கணிசமான ஈர்ப்பு விசையைச் செலுத்துகிறது. பூமி தன்னைத் தானே சுற்றி வரும் ஒவ்வொரு நாளும், பூமியின் கடல் பகுதியை நிலவு இழுப்பதால், இந்த இழுப்பு ஒரு வகை வேகத் தடையாகச் செயல்பட்டு, பூமியின் சுழற்சி வேகத்தை மெதுவாக்குகிறது.
இதன் விளைவாக, பூமி தன்னைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் நேரம் நீள்கிறது, அதாவது ஒரு நாளின் நீளம் கூடிக்கொண்டே செல்கிறது. ஆண்டுக்குச் சராசரியாக ஒரு நாளின் நீளம் 1.09 முதல் 1.78 மி.விநாடி வரை அதிகரித்துள்ளது. ஒரு மி.விநாடி என்பது ஒரு விநாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.
பூமியும் நிலவும் ஒன்றை மற்றொன்று சார்ந்த இயக்கத்தில் உள்ளன. தட்டாமாலை சுற்றும் இருவரில் ஒருவர் வேகம் குறைந்தால் மற்றவரின் வேகம் தானே குறையும்; ஒருவர் தடுமாறினால் மற்றவரின் இயக்கத்திலும் தடுமாற்றம் வரும். அதுபோல பூமியும் நிலவும் ஒன்றை மற்றொன்று பிணைந்த இயக்கத்தில் உள்ளன. பூமியின் சுழற்சி வேகம் குறைவதற்கும் நிலவின் தொலைவு அதிகரிப்பதற்கும் உள்ள தொடர்பு நியூட்டனின் கோண உந்த அழியா விதியால் விளங்கிக் கொள்ளலாம்.
பூமியின் சுழற்சி வேகமும் நிலவின் சுற்றுப்பாதையும் சேர்ந்ததுதான் மொத்த கோண உந்தம். இந்த உந்தம் அழியாமை விதியின்படி, பூமியின் சுழற்சி வேகம் குறையும்போது, அந்த இழப்பை ஈடுசெய்ய நிலவின் வேகம் கூட வேண்டும். நிலவின் சுற்றுவேகம் கூடும்போது, அதற்கேற்ப அதன் சுற்றுப்பாதையின் ஆரமும், அதாவது பூமியிலிருந்து உள்ள தொலைவும், கூடிக் கொண்டே செல்கிறது. இதனால்தான், பூமியின் சுழற்சி மந்தமடையும் போதெல்லாம், நிலவு ஆண்டுதோறும் பூமியை விட்டு விலகிச் செல்கிறது.
இன்னும் நூறு ஆண்டுகளில் 3 மீட்டர் தொலைவுதான் கூடியிருக்கும். எனவே, நம்மால் எளிதில் உணர முடியாது. ஆனால், சுமார் 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்குத் திரும்ப வந்தால் இன்றுள்ள தொலைவைப் போல சுமார் ஒன்றரை மடங்கு தொலைவில் நிலவு இருக்கும்.
அந்த நேரத்தில் பூமியைச் சுற்ற சுமார் 50 நாள்கள் வரை அது எடுத்துக்கொள்ளும். பூமியின் சுழல் வேகம் குறைந்து, குறைந்து அந்தக் கட்டத்தில் 50 நாள்களுக்கு ஒருமுறைதான் பூமி சுழலும். அதாவது பூமி தன்னைத் தானே சுழல எடுக்கும் காலமும் நிலவு பூமியைச் சுற்றிவர எடுக்கும் காலமும் ஒன்றாகும். அந்தச் சூழலில் பூமியின் ஒரு பகுதியில் மட்டுமே நிலவு தென்படும்; பூமியின் மறுபக்கத்தில் உள்ளவர்களுக்கு நிலவே தெரியாது.
(அறிவோம்)
- tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT