Published : 01 Oct 2025 07:32 AM
Last Updated : 01 Oct 2025 07:32 AM
இங்கிலாந்து ராஜ்ஜியத்தின் அடையாளமாக விளங்கும் லண்டன் கோபுரம் கோட்டையானது தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. இது பதினோராம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு, அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் விஸ்தரிக்கப்பட்டது.
இந்த லண்டன் கோபுரம் அரசர்களின் மாளிகையாகவும் இருந்துள்ளது. கொலைக் களமாகவும் விளங்கியிருக்கிறது. இங்கே ‘உயிரியல் பூங்கா’ ஒன்றும் சுமார் 500 ஆண்டுகளாகச் செயல்பட்டிருக்கிறது. இங்கிலாந்தின் முதல் Zoo என வரலாற்றில் இடம்பெற்றது லண்டன் கோபுரம்தான்.
பல்வேறு நாட்டு அரசர்கள், முக்கியஸ்தர்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் இங்கிலாந்து அரசருக்குப் பரிசாக அனுப்பி வைத்த விலங்குகள், லண்டன் கோபுரத்தில் பராமரிக்கப்பட்டன. பொ.ஆ. (கி.பி) 12ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆண்ட அரசர் ஜான் காலத்தில் சிங்கத்தைப் பராமரிப்பவர்களுக்குச் சம்பளம் வழங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன.
13ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசராக இருந்த மூன்றாம் ஹென்றிக்கு, புனித ரோம் சாம்ராஜ்ஜியத்தின் அரசரான இரண்டாம் பிரடெரிக், ஒட்டகத்தைப் பரிசாக அனுப்பினார். அந்த ஒட்டகமானது தன் வெளிநாட்டு வாழ்க்கையைச் சுகபோகமாக வாழ்ந்ததா என்பது குறித்தத் தகவல்கள் இல்லை. பிரடெரிக், மூன்று சிறுத்தைகளையும் அனுப்பி வைத்தார்.
அவை சிறுத்தை அல்ல, சிங்கங்கள் என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள். பாவம், லண்டன்வாசிகள் அன்றைக்குச் சிங்கத்தைக் கண்டார்களா, சிறுத்தையைக் கண்டார்களா? அப்போதைய நார்வே மன்னரான நான்காம் ஹாகோன், பனிக்கரடியை அனுப்பி இருக்கிறார். அது கோட்டையை ஒட்டி, தேம்ஸ் நதிக்கரை ஓரமாக உலவிக் கொண்டிருந்தது. அதன் ஒரு காலில் நீளமான சங்கிலி பிணைக்கப்பட்டிருந்தது. பசித்தால், பனிக்கரடி நதியில் குதித்து மீன்களைப் பிடித்து உண்டுகொண்டது. அதைக் காணவே மக்கள் கோட்டைக்குப் படையெடுத்ததாகக் குறிப்புகள் உண்டு.
பிரான்ஸின் அரசரான ஒன்பதாம் லூயிஸ், மூன்றாம் ஹென்றியை அசத்த வேண்டும் என்பதற்காகவே ஆப்ரிக்க யானையைப் பரிசாக அனுப்பி வைத்தார். அப்போது வாழ்ந்த இங்கிலாந்து மக்கள் யாருமே யானையை நேரடியாகப் பார்த்ததே கிடையாது. ராஜ்ஜியத்துக்கு வந்த யானையைக் கோட்டைக்குள் கொண்டு செல்வதற்குள்ளாகவே அவர்களுக்கு விழி பிதுங்கிவிட்டது.
யானையைக் கண்டு உற்சாகமானார், ஹென்றி. லண்டன் கோட்டையில் யானைக்கு என்று தனியாக ஒரு ‘வசிப்பிடம்’ கட்ட உத்தரவிட்டார். அங்கே தினமும் மக்கள் வந்து யானையை வியப்புடன் பார்த்துவிட்டுச் சென்றனர். அந்த யானைக்கு வைக்கப்பட்ட பெயர் Henry te Flor என்று அப்போது வாழ்ந்த வரலாற்றாளரான மேத்யூ பாரிஸ் தனது குறிப்புகளில் எழுதி வைத்துள்ளார்.
அந்த யானை எப்படி இருந்தது என்று வருணித்துள்ள மேத்யூ, கிட்டத்தட்ட யானை போலவே இருக்கும் ஓவியம் ஒன்றையும் குத்துமதிப்பாக வரைந்துள்ளார். ஆகவே இங்கிலாந்துக்கு வந்த முதல் யானை இதுதான் என்று மேத்யூ குறிப்பிட்டுள்ளார். 1255ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்குக் கொண்டு வரப்பட்ட அந்த யானைக்கு அங்கு நிலவிய கடும் குளிர் ஒத்துக்கொள்ளவில்லை. தவிர, ஒரு யானையை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று லண்டன் கோட்டைவாசிகளுக்குப் புரியவில்லை.
யானை சைவமா, அசைவமா என்பதுகூட அவர்களுக்குத் தெரியவில்லை. அதற்கு இறைச்சியும், தரமான ரெட் ஒயினும் தினமும் கொடுக்கப்பட்டதாக மேத்யூ குறிப்பிட்டுள்ளார். ஆக, ஒழுங்காகப் பராமரிக்காததால் 1257ஆம் ஆண்டிலேயே லண்டனின் முதல் யானை இறந்து போனது. 1288ஆம் ஆண்டில் முதன் முதலாகக் கோட்டையில் விலங்குகளைப் பராமரிக்கும் கண்காணிப்பாளர் பணி உருவாக்கப்பட்டது.
பின்பு காட்டுப் பூனை, கரடி, நரி, கழுதைப்புலி, பபூன் குரங்கு என்று விதவிதமான விலங்குகள் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. 1764ஆம் ஆண்டில் இந்தியாவின் வங்கப் பகுதியிலிருந்து சிறுத்தை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. லண்டன் கோபுரத்தில் வெவ்வேறு காலத்தில் அதிக எண்ணிக்கையில் வசித்த விலங்கு என்றால், அவை சிங்கங்களே. 1436ஆம் ஆண்டில் சிங்கங்கள் இறந்ததால், அதன் கண்காணிப்பாளரான வில்லியம் கெர்பி பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
1708ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 11 சிங்கங்கள் அந்தக் கோட்டையில் வலம் வந்திருக்கின்றன. அந்தக் காலக்கட்டத்தில் சிங்கங்களைக் காண பணம் கொடுத்து நுழைவுச்சீட்டுப் பெற்று வர வேண்டும் அல்லது பூனையோ நாயோ சிங்கங்களுக்கு உணவாகக் கொண்டு வரலாம் என்கிற வழக்கமும் இருந்திருக்கிறது.
1831ஆம் ஆண்டில் லண்டன் கோபுரத்து விலங்குகள் எல்லாம், அப்போது ஆரம்பிக்கப்பட்ட லண்டன் உயிரியல் பூங்காவுக்கு மாற்றப்பட்டன. கழுகு, பருந்து, ஆந்தை போன்ற பறவைகளும் லண்டன் கோபுரத்தில் வளர்க்கப்பட்டு இருக்கின்றன. இங்கே 6 காகங்களின் வரலாற்றையும் சொல்லியாக வேண்டும். லண்டன் டவரில் பொருத்தப்பட்டிருந்த டெலஸ்கோப்பில் காக்கைகள் எச்சமிட்டுக் கொண்டே இருந்தன.
தொலைநோக்கியால் பார்க்க விடாமல் குறுக்கே மறுக்கே பறந்து கொண்டே இருந்தன. ‘காக்கைகளைத் துரத்திவிடுங்கள் அல்லது கொன்றுவிடுங்கள்’ என்று பதினேழாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை ஆண்ட அரசர் இரண்டாம் சார்லஸ் கட்டளை இட்டார். அரண்மனை ஜோதிடர் பதறினார். ‘ஐயையோ… காக்கைகளைக் கொன்றால் அரச குடும்பத்துக்கு ஆகவே ஆகாது. லண்டன் டவர் சரிந்துவிடும். ராஜ்ஜியமே வீழ்ந்துவிடும்’ என்று விதவிதமாக எச்சரித்தார்.
பயந்துபோன சார்லஸ், காக்கைகளை அன்புடனும் அக்கறையுடனும் பராமரிக்கச் சொன்னார். அந்த வழக்கத்தை அடுத்தடுத்த அரசர்களும் தொடர்ந்தார்கள். காலம்காலமாகக் குறைந்தபட்சம் 6 காக்கைகளாவது லண்டன் கோபுரவாசிகளாக இருக்க வைக்கப்படுகின்றன. அதில் ஒன்று மறைந்தாலோ குறைந்தாலோ ராஜ குடும்பத்துக்கு ஆகாது என்கிற பீதியுடனே இன்றுவரை இருக்கிறார்கள்.
இந்தக் காக்கைகளைப் பராமரிக்க ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாவலர்களும் இருக்கிறார்கள். இறந்த காக்கைகளுக்குப் பதிலாக, தகுதியான புதிய காக்கைகள் கோபுரவாசிகள் ஆக்கப்படுகின்றன. காக்கைகள் வெகுதூரம் பறந்து போய்விடக் கூடாது என்பதற்காகவே அதன் இறக்கைகளையும் குறிப்பிட்ட அளவு கத்தரித்து விடுகிறார்கள். அந்த சார்லஸ் காலம் தொட்டுத் தொடரும் காக்கைப் பாரம்பரியம், இன்றைய அரசர் மூன்றாம் சார்லஸ் காலத்திலும் நீடிக்கிறது!
(சந்திப்போம்)
- writermugil@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT