Published : 01 Oct 2025 07:27 AM
Last Updated : 01 Oct 2025 07:27 AM
அந்த ஊரில் நான்கு பள்ளிக்கூடங்கள் உண்டு. நான்கு பள்ளிகளுக்கும் இடையே பசுமை அறிவியல் வார விழா போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அனைவரும் ஒரே நாளில் விதைகளை ஊன்றிட வேண்டும். மூன்று வாரங்கள் கழித்து எந்த அணியின் விதைகள் அதிகம் முளைவிட்டு வளர்ந்து இருக்கின்றனவோ அந்தப் பள்ளிக்கு விருது வழங்கப்படும் இப்படி அறிவிப்பு வெளியான உடனே நித்யா, ஜனார்த்தனன், கவிமணி, கண்ணகி ஆகியோர் அடங்கிய குழு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டனர். எனவே அவர்களின் பெயர்களைப் போட்டி நடத்துகிறவர்களுக்குத் தலைமை ஆசிரியர் அனுப்பிவிட்டார்.
ஜனார்த்தனன் அவரை, கண்ணகி வெண்டை, நித்யா கத்திரி, கவிமணி மிளகாய் விதைகளை எடுத்துவந்து அறிவியல் ஆய்வகத்தில் கொடுத்தார்கள். தோட்டம் போடுவதற்கான சரியான இடத்தைப் பள்ளிக்கு உள்ளேயே அவர்கள் தேர்வுசெய்ய வேண்டும். தலைமை ஆசிரியர் அலுவலகத்துக்குப் பக்கத்தில் இருக்கும் இடத்தைச் சுத்தம் செய்து தருகிறேன் என்றார்.
அறிவியல் ஆசிரியர் அறிவியல் ஆய்வகத்தின் முன்னால் இருந்த இடத்தில் தோட்டம் போடலாம், அறிவியல் விளக்கம் தருவது சுலபம் என்றார். பள்ளிக் கட்டிடத்தின் பின்புறம் இருந்த காம்பவுண்டுக்கும் பள்ளிக் கட்டிடத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைப்பது சரியாக இருக்கும் என்பது விளையாட்டு ஆசிரியரின் வாதம்.
மண்ணில் ஒரு விதை வளர்வதற்குப் போதுமான ஆக்சிஜன், சரியான வெப்பநிலை தேவை. அதைத் தவிர தண்ணீர் ஊற்ற வேண்டும். இதெல்லாம் அவர்கள் நன்கு அறிந்ததுதான். கரு வெளிப்பட்டு வளரத் தொடங்கிய உடன் வளர்ச்சியை அதிகம் ஆக்குவதற்காகச் சில நேரம் ஊட்டசத்துகள் தேவைப்படலாம்.
புதிய வேளாண் தொழில்நுட்ப முறைகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்று ஜனார்த்தனனும் கவிமணியும் வாதிட்டார்கள். இணையத்தில் தேடி ஹைட்ரோபோனிக்ஸ் என்று அழைக்கப்படும் மண்ணைப் பயன்படுத்தாமல் நீர், ஆக்சிஜன், ஊட்டச்சத்துகளின் கரைசலைப் பயன்படுத்தும் விவசாய முறையைப் பற்றி ஜனார்த்தனன் அறிந்து வந்திருந்தான்.
அதேபோல செங்குத்து விவசாயம் என்கிற ஒன்றைப் பற்றி கவிமணி அறிந்து வந்திருந்தான். இந்த முறைப்படி பயிர்களைச் செங்குத்தாக அடுக்கி, அடுக்கு முறையில் வளர்க்க வேண்டும். இது இடப்பற்றாக்குறையைப் போக்கும். ஏறக்குறைய நூறு விதைகள் இருந்தன.
ஆனால், எந்த இடம், என்ன மாதிரியான விவசாயம் என்று முடிவு செய்வதற்குள் விதைகள் காணாமல் போயிருந்தன. எங்கு தேடியும் விதைகளை அவர்களால் கண்டறிய முடியவில்லை. யார் விதைகளை எடுத்திருக்கக்கூடும்? கண்ணகிக்கு அழுகையே வந்துவிட்டது. எப்படி மறுபடியும் விதைகளைச் சேகரிப்பது என்று அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தபோது, நித்யாவுக்கு ஒரு யோசனை தோன்றியது.
உடனே தலைமை ஆசிரியர் அறைக்குச் சென்றவர்கள், ‘அறிவியல் ஆய்வுக் கூடத்தில் இருக்கும் சிசிடிவி ஒளிபடக் கருவியில் பார்த்துவிடலாமா?’ என்று கேட்டார்கள். சிசிடிவியைப் பார்த்த நால்வரும் மகிழ்ச்சியில் துள்ளினார்கள். அணில்கள்தான் விதைகளை எடுத்துச் சென்றிருந்தன.
அந்தப் பள்ளியில் சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்தும் தண்ணீர்த் தொட்டி இருந்தது. அதன் கீழே எப்போதும் ஈரமாக இருக்கும். அந்த இடத்தில் அணில்கள் விதைகளைக் குவித்து வைத்திருந்தன! “அங்கே விதைத்தால் கடகடவென்று முளைத்துவிடும். இயற்கை விவசாயமே நாம் செய்ய வேண்டியது” என்றார் அறிவியல் ஆசிரியர். நித்யாவும் நண்பர்களும் மகிழ்ச்சியோடு விதைகளை நட ஆரம்பித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT