Published : 24 Sep 2025 07:39 AM
Last Updated : 24 Sep 2025 07:39 AM
யூனிகார்ன் என்கிற விலங்கை நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். திரைப்படங்களில், கார்ட்டூன்களில் ஆச்சரியமாகப் பார்த்திருப்போம். வெள்ளை நிறத்தில், கூர்மையான ஒற்றைக் கொம்புடன், வானவில் வண்ணத்தில் பிடரியும், வாலும் கொண்ட வசீகரக் குதிரைதான் யூனிகார்ன்.
அழகு, வீரம், ஞானம் ஆகியவற்றுக்குப் பெயர்பெற்றது. யூனிகார்ன்களுக்கு நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும், தீய சக்திகளை விரட்டும் சக்தியும் உண்டு என்பது நம்பிக்கை. ஆனால், உண்மையில் இப்படி ஒரு விலங்கினம் இருக்கிறதா? யூனிகார்ன் என்பதற்கு ஒற்றைக் கொம்பு என்று பொருள். அதாவது ஒற்றைக் கொம்புடைய விலங்குகளை யூனிகார்ன் என அழைக்கலாம்.
யூனிகார்ன் பற்றிய முதல் பதிவு, பொஆமு (கி.மு.) 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மருத்துவர் தீசியஸ், இந்தியாவைப் பற்றி எழுதிய நூலான இண்டிகாவில்தான் இடம்பெறுகிறது. தீசியஸ் யூனிகார்னை இந்தியாவில் வாழும் கழுதை என்கிறார். வெள்ளை உடலும், சிவப்புத் தலையும், ஊதாக் கண்களும், தலையில் ஒற்றைக் கொம்பும் கொண்ட குதிரையைவிடப் பெரிய விலங்கு இந்தியாவில் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
அந்தக் கொம்பை நீரில் நனைத்து, அந்த நீரைப் பருகுபவர்களுக்கு எந்த விஷமும் தாக்காது, வலிப்பு நோய் குணமாகும் என்கிறார். தீசியஸுக்குப் பிறகு வந்த அரிஸ்டாட்டிலும் யூனிகார்ன் இருப்பதை ஒப்புக்கொள்கிறார். அரிஸ்டாட்டிலின் பதிவுக்குப் பிறகுதான் யூனிகார்ன் மீதான ஆர்வம் ஐரோப்பா எங்கும் பரவியது.
பண்டைய இயற்கையியலாளர் மூத்த பிளினி, தனது இயற்கை வரலாறு நூலில் யூனிகார்ன்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜூலியஸ் சீசரும்கூட மேற்கு ஐரோப்பாவில், கால் எனும் இடத்தில் ஒற்றைக் கொம்பு விலங்குகளைக் கண்டதாகக் கூறியிருக்கிறார். 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்கோ போலோ தனது பயண நூலில் யூனிகார்ன்களை இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் பார்த்ததாகப் பதிவுசெய்துள்ளார்.
ஆனால், அவை மாயாஜாலக் கதைகளில் வருவதுபோல இல்லாமல், அழுக்குப் படிந்து சேற்றில் புரண்டுகொண்டிருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஒற்றைக் கொம்பு விலங்குகளைப் பற்றிய சித்திரங்கள் வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டத்திலேயே நமக்குக் கிடைக்கின்றன. பொஆமு 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய பாரசீக நகரமான பெர்சிபோலிசில், ஒற்றைக் கொம்பு விலங்குகள் சிங்கத்துடன் சண்டையிடுவது போன்ற சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல பாபி லோனிய சித்திரங்களிலும், பைசாந்திய தொன்ம நூலான லெட்டர்ஸ் ஃபிரம் பிரெஸ்டர் ஜான் எனும் நூலிலும் சிங்கங்கள் எப்படி யூனிகார்ன்களைத் தந்திரத்துடன் வேட்டையாடின என்பதை விவரிக்கும் கதைகள் உண்டு. இப்படிச் சிங்கத்துக்கும் யூனிகார்னுக்கும் இடையே உள்ள பகை, பல ஐரோப்பிய தேவதைக் கதைகளிலும் இடம்பெற்றுள்ளது.
பெர்சிய புராணமான புந்தாஹேஷனில் (Bundahishn) மூன்று கால்களும் ஒற்றைக் கொம்பும் உடைய விலங்கு ஒன்று, நச்சு நீரைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டதாகக் குறிப்பிடுகிறது. சீனப் புராணங்களில் வரும் சீலின் (Qilin) எனும் ஒற்றைக் கொம்பு விலங்கு, அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. சிந்துசமவெளி நாகரிகத்தில் ஒற்றைக் கொம்பு எருதுகள் இடம்பெற்ற முத்திரைகள் கிடைக்கின்றன. இவற்றைச் சில வரலாற்று ஆய்வாளர்கள் யூனிகார்ன் முத்திரைகள் என அழைக்கின்றனர்.
பைபிள், யூனிகார்னுக்குப் புனிதத்தன்மையை வழங்கியது. பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில், எருது ஒன்று, ஒற்றைக் கொம்புடைய எருதாகத் தவறாக வர்ணிக்கப்பட்டு, கிறிஸ்தவச் சிற்பங்களில் யூனிகார்ன் இடம்பெற வழிவகுத்தது. 2ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிசியோலோகஸ் (Physiologus) எனும் கிறிஸ்துவ நூல்தான் யூனிகார்னுக்கு ஒற்றைக் கொம்புடைய குதிரை எனும் உருவத்தை வழங்கியது.
இதன்பிறகு ஷேக்ஸ்பியரில் தொடங்கி நவீனகாலப் படைப்பாளிகளான ரெயினர் மரியா ரில்கே, டென்னிசன் எனப் பலரது படைப்புகளிலும் யூனிகார்ன் பற்றிய கதைகள், வர்ணனைகள் இடம்பெறத் தொடங்கின. பீட்டர் எஸ்.பீகல் எழுதிய தி லாஸ்ட் யூனிகார்ன், சி.எஸ். லூயிஸ் எழுதிய தி லாஸ்ட் பேட்டில், ஜே.கே. ரெளலிங் எழுதிய ஹாரிபாட்டர் நூல்கள் என இன்றைய சிறார்கள், இளையோர் புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் வீடியோ கேம்களிலும் யூனிகார்ன்கள் வலம்வரத் தொடங்கிவிட்டன.
மத்தியக் காலக்கட்டம் வரையுமே யூனிகார்ன் எனும் குதிரை இருப்பதாக நம்பப்பட்டது. யூனிகார்ன் கொம்புக்கு மருத்துவக் குணம் உண்டு எனும் நம்பிக்கையின் காரணமாக, நார்வால் எனப்படும் கடல் பாலூட்டி விலங்கை ஐரோப்பியர்கள் வேட்டையாடினர். இதனை யூனிகார்னின் கொம்பு என்கிற பெயரில் ஐரோப்பாவில் விற்பனை செய்துள்ளனர். மறுமலர்ச்சி யுகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக விலங்குகள் பற்றிய அறிவியல்பூர்மான ஆய்வுகள் வலுவடைய, யூனிகார்ன் குறித்த கட்டுக்கதைகளும் 18ஆம் நூற்றாண்டுக்கு மேல் குறைந்துவிட்டன.
ஆனால், இயற்கையில் அப்படி ஒரு விலங்கு உருவாக வாய்ப்பு உண்டா? உறுதியாகச் சொல்ல முடியாது என்கின்றனர் விஞ்ஞானிகள். இயற்கையில் ஒற்றைக் கொம்புள்ள விலங்குகள் ஏற்கெனவே இருக்கின்றன. நிலத்தில் வாழும் காண்டாமிருகம், கடலில் வாழும் பாலூட்டியான நார்வால், பண்டைய காலத்தில் வாழ்ந்த எலாஸ்மோதெரியம் போன்ற விலங்குகளுக்கு ஒற்றைக் கொம்பு உண்டு.
ஆனால், இரட்டை கொம்புகள் கொண்ட விலங்குகளே இயற்கையில் அதிகம். காரணம், விலங்குகள் சண்டையிடுவதற்கு ஒற்றைக் கொம்பைவிட, இரட்டைக் கொம்பே வசதியானது. மேலும், ஒற்றைக் கொம்பு கழுத்தில் வலியை ஏற்படுத்தும், விலங்குகளின் சமநிலையைப் பாதிக்கும்.
இதனால்தான் இயற்கை இரட்டைக் கொம்பு உயிரிகளையே அதிகம் பரிணமித்து உருவாக்குகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். இதற்காக ஒற்றைக் கொம்பு விலங்குகள், குறிப்பாக யூனிகார்னைப் போன்ற குதிரைகள் உருவாகவே முடியாது என்றும் சொல்ல முடியாது. கோட்பாட்டுரீதியாக அதற்கும் வாய்ப்புண்டு.
2008ஆம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த ரோ எனும் மான் இனத்தில் மரபணு பிறழ்வின் காரணமாக ஒற்றைக் கொம்புடைய மான் பிறந்தது. இதற்கு யூனிகார்ன் என்றே விஞ்ஞானிகள் பெயர் சூட்டினர். இதுபோல மரபணு மாறுபாட்டின் காரணமாக, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒற்றைக் கொம்பு விலங்குகள் பிறந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒருவேளை இத்தகைய பண்பு பிழைத்திருக்கவும், இனப்பெருக்கம் செய்யவும் உதவினால் மேலும் பல யூனிகார்ன்கள் உருவாகலாம். இயற்கைக்கு மனிதர்களைவிட கற்பனைத் திறனும் படைப்பாற்றலும் அதிகம் இல்லையா!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT