Last Updated : 24 Sep, 2025 07:31 AM

 

Published : 24 Sep 2025 07:31 AM
Last Updated : 24 Sep 2025 07:31 AM

ஊரையே காப்பாற்றிய டோகோ! | வரலாறு முக்கியம் மக்களே! - 17

டோகோ

1924 டிசம்பர். அலாஸ்காவின் நோம் நகரத்தில் டிப்தீரியா என்கிற தொண்டை அழற்சி நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. அன்றைய காலக்கட்டத்தில் அது தீவிரமானால் மரணம் நிச்சயம். அதற்கு நச்சு எதிர்ப்பு மருந்துதான் (Diphtheria Antitoxin) ஒரே தீர்வு. அது கைவசம் இல்லை. நோய் தீவிரமாகப் பரவினால் நகரத்தின் பாதி மக்கள்தொகையே அழிந்துவிடலாம். நோம் நகரம் பனியால் உறைந்து கிடந்தது. கடல் நீரும் உறைந்துபோக, துறைமுகமும் மூடப்பட்டிருந்தது.

மருந்தை எப்படிக் கொண்டுவருவது என்று டாக்டர் கர்ட்டிஸ் வெல்ச், நகர மேயர், அதிகாரிகள் திட்டம் தீட்டினார்கள். அமெரிக்காவின் வாஷிங்டனில் இருந்து மருந்துகள் அலாஸ்காவின் ஆங்கரேஸுக்கு அனுப்பப் பட்டன. அங்கிருந்து அவை நெனானாவுக்கு ரயில் மூலம் வந்துகொண்டிருந்தன.

அதற்கு மேல் ரயிலில் செல்லும் சூழல் இல்லை. நெனானாவிலிருந்து நோம் நகரம் சுமார் 1,085 கி.மீ. தொலைவில் அமைந்திருந்தது. அந்தக் கடுமையான சூழலில் பனிச்சறுக்கு வண்டியை இழுத்துச் செல்லும் சைபீரிய ஹஸ்கி இன நாய்களே போக்குவரத்துக்கான ஒரே வழி. அதன் மூலம் மருந்தை நோமுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டார்கள்.

லியோன்ஹார்ட் செப்பாலா, சைபீரியன் ஹஸ்கி நாய்களைக் கொண்டு பல பந்தயங்களில் வென்றவர். நீண்ட தூரப் பயணங்களில் அனுபவம் கொண்டவர். நாய்கள் ஒன்று சேர்ந்து ஒரு வண்டியை இழுத்துச் சென்றாலும். தலைமை தாங்கும் நாய் ஆபத்துகளை உணர்ந்து கொள்ளும் திறமையுடன், சவால்களைச் சமாளிக்கும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அப்படி ஒரு சைபீரிய ஹஸ்கி நாய் செப்பாலாவிடம் இருந்தது. அதன் பெயர் டோகோ. வயது 12.

நெனானாவிலிருந்து மருந்துப் பெட்டியை எடுத்துவர பல்வேறு குழுக்கள் நியமிக்கப் பட்டிருந்தன. கிட்டத்தட்ட 20 நிறுத்தங்கள். ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஒரு முஷர் (பனிச்சறுக்கு வண்டி ஓட்டுநர்) தனது நாய்களுடன் காத்திருப்பார். மருந்துப் பெட்டி கைமாற்றப்படும். நோமிலிருந்து தனது நாய்களுடன் புறப்படும் செப்பாலா, வழியில் நுலாடோ நகரத்தில் மருந்துப் பெட்டியை வாங்கிக் கொண்டு மீண்டும் நோம் நோக்கி விரைந்து வருவது திட்டம். அந்தப் பாதைதான் இருப்பதிலேயே அதிக ஆபத்துகள் நிறைந்த பாதை.

1925, ஜனவரி 27 இரவு 9 மணிக்கு, நெனானாவின் ரயில் நிலையத்தில் 9 கிலோ மருந்துப் பெட்டியை முதல் முஷர் பெற்றுக் கொண்டு புறப்பட்டார். அவர் அடுத்த நிறுத்தத்தை அடைவதற்குள் மூன்று நாய்கள் இறந்து போயிருந்தன. அடுத்தடுத்த முஷர்களும் கடும் ஆபத்துகளைக் கடந்து தங்கள் பாதையில் சரியாக வந்துகொண்டிருந்தார்கள். அதே நேரம் செப்பாலா, டோகோ தலைமையில் நோமிலிருந்து புறப்பட்டிருந்தார்.

ஜனவரி 30, பார்சல் நுலாடோவை அடைந்திருந்தது. அங்கே அடுத்த முஷர் பார்சலைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டார். அடுத்த மூன்று நிறுத்தங்களைக் கடந்து ஷக்டூலிக் நிறுத்தத்தில் செப்பாலாவிடம் பெட்டியைக் கொடுத்தார். பயணத்தின் முக்கியமான கட்டம். அவர்கள் நார்டன் சவுண்ட் கடல் பகுதியை அடைந்தார்கள். உறைந்து கிடக்கும் கடலின் மீது பயணம் செய்தால் சுமார் 70 கி.மீ. தூரத்தை, குறுக்கு வழியில் கடந்து நேரத்தை மிச்சப்படுத்தலாம். அது கடும் ஆபத்துகள் நிறைந்தது.

டோகோ மீது நம்பிக்கை வைத்து செப்பாலா கடலைக் கடக்க முடிவெடுத்தார். கண்ணுக்குத் தெரியாத அளவுக்குக் கடும் இருளும் பனிப்புயலும் மிரட்டின. இந்தச் சூழலில் செப்பாலா, டோகோவை வண்டியிலிருந்து விடுவித்து, வழிகாட்டும்படி கட்டளையிட்டார். பிற நாய்கள் வண்டியை இழுக்க, அவர் பின்தொடர்ந்தார்.

அதிகாலை 2 மணிக்குப் பனிப்புயல் தாண்டவமாடியது. அடித்த காற்றில் கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த பனிப்பரப்புகள் உடைந்து நகர்ந்திருந்தன. உடலில் கயிறு கட்டப்பட்ட டோகோ உயிரைப் பணயம் வைத்து நீரில் குதித்து, உறையும் குளிரில் அடுத்த பனிப்பரப்பில் கரையேறியது.

தன் கால் நகங்களால் அந்தப் பரப்பை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டது. செப்பாலா கயிற்றை இழுக்க, அவர் இருந்த பனிப்பரப்பு நகர்ந்து, டோகோ இருந்த பரப்புடன் மோதி நின்றது. அந்த இடத்தைப் பத்திரமாகக் கடந்தார்கள். அடுத்து ஒரு மலைப் பிரதேசத்தைக் கடும் சவால்களுடன் கடக்க வேண்டியிருந்தது. டோகோ அவர்களைப் பத்திரமாக வழிநடத்தியது.

பிப்ரவரி 1 மதியம் 3 மணி அளவில் கோலோவைச் செப்பாலா அடைந்தபோது அடுத்த முஷர் சார்லியிடம் பெட்டி ஒப்படைக்கப்பட்டது. டோகோவின் தலைமையில் பிற நாய்களும் செப்பாலாவும் பயணம் செய்த தொலைவு 420 கி.மீ. அதில் 217 கி.மீ. பெட்டியுடன் செய்த கடும் ஆபத்துகள் நிறைந்த பயணம். இந்த ஒட்டுமொத்தப் பயண ஓட்டத்தில் அதிகத் தொலைவு பயணம் செய்தவர்கள் இவர்களே! ஆனால், வரலாறு மாற்றி எழுதப்பட்டது.

காசீன் என்கிற முஷர், பால்டோ நாயின் தலைமையில் காத்துக்கொண்டிருந்தார். பிளஃப் நகரத்திலிருந்து நோம் நகரம் நோக்கி பால்டோ பெட்டியை எடுத்துச்சென்றது. சுமார் 85 கி.மீ. பயணம் செய்து பிப்ரவரி 2, அதிகாலை 5.30 மணிக்கு நோமை அடைந்தது. மருந்துப் பெட்டியைச் சேதாரமின்றிப் பெற்றுக் கொண்டார் டாக்டர் வெல்ச். நூற்றுக்கணக்கான குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

பெட்டியைச் சுமந்து மருத்துவமனையை அடைந்த பால்டோ, நோமையே காப்பாற்றிய கடவுளாகப் பத்திரிகைச் செய்திகளில் இடம் பெற்றது. பெரும் புகழ்பெற்றது. நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க்கில் பால்டோவுக்குப் பெரிய சிலையும் வைக்கப்பட்டது. எல்லாப் புகழும் பால்டோவுக்குச் சென்று சேர்ந்ததில் செப்பாலாவுக்கு வருத்தமே.

‘இவ்வளவு பெருமைக்கும் தகுதியானது டோகோதான்’ என்று அவர் தனது புத்தகத்தில் எழுதினார். பிற்காலத்தில்தான் டோகோ மீது உண்மையான வெளிச்சம் பாய்ந்தது. அதற்கும் சிலை வைக்கப்பட்டது. டைம் இதழ் டோகோவுக்கு 2011ஆம் ஆண்டில் மிகப்பெரிய கௌரவத்தை வழங்கியது. The Most Heroic Animal of all Time. டோகோ செய்த அந்தச் சிலிர்ப்பூட்டும் சாகசப் பயணத்தின் (1925 serum run to Nome) நூற்றாண்டு இது!

(சந்திப்போம்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x