Published : 17 Sep 2025 07:30 AM
Last Updated : 17 Sep 2025 07:30 AM
தங்கம் எங்கிருந்து கிடைக்கிறது டிங்கு? - ஏ. ஆராதனா, 3-ம் வகுப்பு, இந்தியன் பப்ளிக் பள்ளி, சேலம்.
பூமியின் மேலடுக்கின் அடியில் பாறைகளுக்கு இடையே இருக்கிறது தங்கம். அந்தத் தங்கத்தைச் சுரங்கம் தோண்டி, வெட்டி எடுக்கிறார்கள். கடல் போன்ற நீர்நிலைகளிலும் தங்கத்துகள்கள் கிடைக்கின்றன. சரி, பூமிக்குத் தங்கம் எங்கிருந்து வந்தது? நட்சத்திரங்களில் வெப்பம் ஒருகட்டத்தில் அளவுக்கு அதிகமாக உயரும்போது ஹைட்ரஜனும் ஹீலியமும் ஒன்றோடு மற்றொன்று இணைந்து, அதைவிட எடை அதிகமான ஹீலியம், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், இரும்பு போன்ற அணுக்களை உற்பத்தி செய்கின்றன.
நட்சத்திரத்தின் மையம் இரும்பு அணுக்களால் நிரம்பும்போது நட்சத்திரத்தின் இயக்கம் நிலைகுலைந்து வெடித்துச் சிதறுகிறது. இந்த நட்சத்திர வெடிப்பைத்தான் சூப்பர் நோவா என்கிறோம். இது நிகழும்போது எல்லையற்ற ஆற்றல் வெளியாகிறது. இந்த ஆற்றல் நட்சத்திரத்தில் உருவான தனிமங்களின் அணுக்களை வெளியே தள்ளுகிறது.
இந்தத் தனிமங்கள் குளிர்ந்து விண்வெளியில் தூசுகளோடும் வாயுக்களோடும் கலந்துவிடுகின்றன. இதைத்தான் நெபுலாக்கள் என்கிறோம். இந்த நெபுலாக்கள் புதிய நட்சத்திரங்களாகவும் கோள்களாகவும் மாறுகின்றன. அப்படி பூமி உருவாகும்போது நெபுலாவில் உள்ள தங்கம் பூமிக்கு வந்துவிட்டது.
இந்தத் தங்கம் எரிமலை வெடிக்கும்போது, அதிலிருந்து வெளியேறும் குழம்பின் மூலம் வெளியே வருகிறது. அந்தக் குழம்புகள் குளிர்ந்து பாறைகளாகின்றன. அந்தப் பாறைகளில் இருந்துதான் நாம் தங்கத்தை வெட்டி எடுத்து, பயன்படுத்துகிறோம். இது தவிர, தங்க உலோகம் கலந்த விண்கற்கள் பூமியில் மோதியதாலும் தங்கம் கிடைத்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர், ஆராதனா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT