Published : 10 Sep 2025 07:35 AM
Last Updated : 10 Sep 2025 07:35 AM
உலகின் இரண்டாவது பெரிய பவளத்தீவு அல்டப்ரா (Aldabra). இது ஆப்ரிக்கக் கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கிறது. இது ஒரு தீவு என்பதைவிட, சில பல சிறிய பெரிய தீவுகளை உள்ளடக்கிய கூட்டம் எனலாம். ஆழமில்லா கடல் பகுதியும், மிக அழகான கடற்கரைகளும் நிறைந்தது. இங்கே காணப்படும் உயிரினங்களில் மிகவும் புகழ்பெற்றவை ராட்சச ஆமைகள். அதாவது நிலத்தில் நீண்ட காலம் நிலைத்து வாழும், தாவர உண்ணிகளான பெரிய ஆமைகள்.
உலகின் பிரம்மாண்ட ஆமைகளில் இந்த அல்டப்ரா வகை ஆமைகளும் ஒன்று. பிரிட்டிஷ் காலனியாக இந்தியா இருந்த காலத்தில், ஆங்கிலேயர்கள் அல்டப்ரா தீவுகள் பக்கம் வந்து செல்வதும், இங்கிருந்து ஆமைகளைப் பிடித்துச் சென்று யாருக்காவது பரிசாகக் கொடுப்பதும் வழக்கமாகவே இருந்தது.
1757ஆம் ஆண்டு ஆங்கிலேய ராணுவத் தளபதி ராபர்ட் கிளைவ், பிளாசி யுத்தத்தை வென்று வங்க ஆளுநராக அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தார். அப்போது சில ஆங்கிலேய வீரர்கள் அவரைப் பார்க்க வந்தனர். ‘உங்கள் பிளாசி வெற்றிக்கு எங்கள் அன்புப் பரிசு’ என்று நான்கு அல்டப்ரா ஆமைக் குட்டிகளைப் பரிசாக அளித்தனர். அப்போது அவற்றுக்கு வயது ஆறு அல்லது ஏழு இருக்கலாம்.
ராபர்ட் கிளைவின் மாளிகை அமைந்த கொல்கத்தா பாரக்பூர் தோட்டத்தில் அந்த ஆமைக்குஞ்சுகள் விடப்பட்டன. கொஞ்ச காலத்திலேயே மூன்று ஆமைக்குஞ்சுகள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்து போயின. ஒன்றே ஒன்று மட்டும் பிழைத்து வளர்ந்தது. அந்த மாளிகைக்கு ஆளுநர்கள் வந்தார்கள். வாழ்ந்தார்கள். ஆண்டார்கள். அவ்வப்போது ஆமையையும் கொஞ்சினார்கள். புறப்பட்டுப் போனார்கள். ஆமை, அது பாட்டுக்கு வளர்ந்து கொண்டும் வாழ்ந்து கொண்டும் இருந்தது.
1876. கார்ல் லூயிஸ் ஸ்வெண்ட்லர் என்கிற ஜெர்மானியரின் முயற்சியில் கல்கத்தாவின் புறநகர்ப் பகுதியான அலிபூரில் உயிரியல் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. விலங்குகளின் நேசராகத் திகழ்ந்த ஸ்வெண்ட்லர், பாரக்பூர் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட பல்வேறு உயிரினங்களை அலிபூர் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு வந்தார். அதில் அந்த அல்டப்ரா ராட்சச ஆமையும் ஒன்று. அதுக்கு வைக்கப்பட்ட பெயர் அத்வைதா (Adwaita). அப்போது அதுக்கு வயது சுமார் 120. எடை சுமார் 250 கிலோ.
அலிபூர் உயிரியல் பூங்காவில் உதவியாளராகப் பணிக்குச் சேர்ந்தவர் சன்யால். பின்பு எல்லா வேலைகளையும் கற்றுக்கொண்டு, அங்கிருந்த எல்லா உயிரினங்களின் குணநலன்களையும் புரிந்து கொண்டு, அந்தப் பூங்காவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக உயர்ந்தார். ஓர் உயிரியல் பூங்காவின் கண்காணிப்பாளராக உயர்ந்த முதல் இந்தியர் சன்யால்தான்.
சன்யாலின் பிரியத்துக்குரிய விலங்குகளில் ஒன்றாக அத்வைதா இருந்தது. தினமும் அதனைச் சந்தித்து பாசத்தைக் கொட்டினார். அதற்கு உடல்நிலை சரியில்லை என்றால் அக்கறையுடன் கவனித்து மீட்டுக் கொண்டு வந்தார். சன்யாலின் காலத்துக்குப் பிறகும் அலிபூர் உயிரியல் பூங்காவின் அடையாளமாக நிலைபெற்று, பார்வையாளர்களைக் கவர்ந்தது அத்வைதா.
கோதுமைத் தவிடு, கேரட், கீரை, ஊறவைத்த கொண்டைக் கடலை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ரொட்டி, புல் ஆகியவை அத்வைதாவுக்கான மெனு. வெகு சில வருடங்களுக்கு ஒருமுறைதான் அதற்கு மருத்துவரின் உதவியே தேவைப்பட்டது. தான் உண்டு, தன் புல்வெளி உண்டு என்று வாழ்க்கையை மெதுவாகக் கடந்தது அத்வைதா.
2006, மார்ச் 22. உலகின் மிக வயதான உயிரினமாகக் கருதப்பட்ட அத்வைதா, அலிபூர் உயிரியல் பூங்காவிலேயே இறந்து போனது. அதன் ஓடு கார்பன் வயதுக் கணக்கெடுப்பின்படி ஆராயப்பட்டது. அத்வைதாவின் வயது 255 அல்லது 256 என்று உறுதி செய்யப்பட்டது. நான்கு நூற்றாண்டுகளில் வாழ்ந்த உயிரினம் என்கிற பெருமை, அத்வைதாவுக்கு உண்டு.
ராபர்ட் கிளைவ் காலம், ஆரம்ப கால கல்கத்தாவின் வளர்ச்சி, சிப்பாய்ப் புரட்சி, சுதந்திரப் போர், இரண்டு உலகப் போர்கள், இந்திய விடுதலை, வங்கப் பிரிவினை, எமர்ஜென்ஸி, மில்லினியம் பிறப்பு வரை பார்த்த தி கிரேட் அத்வைதாவுக்கு இணையாக இந்தியாவில் எதுவும் வாழ்ந்ததே இல்லை. அத்வைதாவைப் பெருமைப்படுத்தும் விதமாக இந்திய அஞ்சல் துறையால் முதன்முதலாக அறுங்கோண வடிவில் (ஆமை ஓட்டில் இருக்கும் வடிவம்) தபால் தலைகள், 2008ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன.
அத்வைதா பற்றிப் பேசும்போது அங்கே மெதுவாக நகர்ந்து வந்து ஜோனதனும் எட்டிப் பார்க்கிறது. ஜோனதனும் அல்டப்ரா ராட்சச ஆமை இனத்தைச் சேர்ந்ததுதான். அதே தாய்மண்ணைச் சேர்ந்த குடிமகன்தான். இதற்கான அதிகாரபூர்வமான வாழ்க்கைக் கதை ஒரு பழைய கறுப்பு வெள்ளை ஒளிப்படத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.
தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்த, பிரிட்டிஷ் அதிகாரத்தின் கீழிருக்கும் தீவு, செயின்ட் ஹெலனா. பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன், அவருடைய வீழ்ச்சிக்குப் பின் சிறை வைக்கப்பட்டிருந்த தீவு. அங்கேயேதான் இறந்தும் போனார்.
ஹெலனா தீவை ஆளும் பிரிட்டிஷ் ஆளுநருக்காகக் கட்டப்பட்ட மாளிகை Plantation House. மிகப்பெரிய தோட்டமும் பரந்து விரிந்த புல்வெளியும் கொண்டது. அந்தப் புல்வெளியில் இரண்டு ஆமைகள் இருப்பதாக ஓர் ஒளிப்படம் 1886ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஓர் ஆமை ஜோனதன். இந்த வகை ஆமைகள் முழு வளர்ச்சி பெற்று பருவமடைவதற்கு 50 ஆண்டுகள் பிடிக்கும். ஒளிப்படத்தில் ஜோனதன், அத்தகைய வளர்ச்சி பெற்றுதான் இருக்கிறது.
1882ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் வீரர்கள், அல்டப்ராவின் கடற்பகுதியில் ஜோனதன் உள்ளிட்ட நான்கு ஆமைகளைப் பிடித்தனர். அவை ஹெலெனா தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஜோனதன் பிறந்த ஆண்டு 1832 என்று ஒரு குறிப்பு உண்டு. அந்தப் படம் எடுக்கப்பட்டபோது அதன் வயது 54. 2025ஆம் ஆண்டில் ஜோனதனின் வயது 193.
இப்போதும் ஜோனதன், அதே ஆளுநர் மாளிகையில் வாழ்ந்துவருகிறது. ஜோனதனுக்குப் பார்வையில் பிரச்சினை. முகரும் திறன் குறைந்துவிட்டது. உணவை உணரும் திறனும் குறைந்துவிட்டது. ஆனால், இப்போதும் கேட்கும் திறன் அற்புதமாக இருக்கிறது. இதுவரை 31 பிரிட்டிஷ் ஆளுநர்கள் அந்த மாளிகைக்கு வந்துபோய் விட்டார்கள்.
ஜோனதன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அப்படியே அமைதியாக, அழகாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. முதுகில் தன் பெரிய ஓட்டுடன், ‘இன்றைய உலகில் நிலத்தில் வாழும் அதிக வயதுடைய உயிரினம்’ என்கிற பெருமையையும் ஜோனதனே சுமந்து கொண்டிருக்கிறது.
(சந்திப்போம்)
- writermugil@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT