Published : 10 Sep 2025 07:25 AM
Last Updated : 10 Sep 2025 07:25 AM
அழகான கிராமத்தில் தாத்தா, பாட்டியுடன் வாழ்ந்து வந்தனர் பூங்கோதையும் அவள் தம்பி முத்துவும். முத்து ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவன். அவனால் முழுமையாகப் பேச முடியாது. ஓர் இடத்தில் உட்காரவும் மாட்டான். துறுதுறுவென்று ஓடிக்கொண்டே இருப்பான்.
அவர்கள் வீட்டின் பின்னால் ஒரு தோட்டம் இருந்தது. அங்கே நிறைய பூச்செடிகள் இருந்தன. முத்துவுக்குப் பூக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அவனுக்கு வண்ணங்களின் மீது எப்போதும் ஆர்வம் இருந்தது. அதனால் பூத்து நிற்கும் மலர்களின் அருகே சுற்றிக்கொண்டிருப்பான். பூங்கோதைக்கும் அவள் வீட்டுத் தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் விதவிதமான செடிகளுடன் பேசுவதும் பாடுவதும் பிடிக்கும்.
தினமும் பள்ளி விட்டு வந்ததும் தம்பியைத் தோட்டத்துக்கு அழைத்துச் செல்வாள். பூத்திருக்கும் மலர்களைக் காட்டி, அவற்றின் பெயர்களையும் நிறங்களையும் சொல்லி, அவனோடு பேசுவாள். அவன் அக்கா சொல்வதைக் கேட்டுக்கொண்டே, மலர்களின் அழகை ரசித்தபடியே நடப்பான். ஒரு நாள் மாலை மழை ஓய்ந்த பிறகு, வானில் ஒரு பெரிய வானவில் தோன்றியது. “அடடா! என்ன அழகு!” என்று பூங்கோதை கைதட்டி மகிழ்ந்தாள். தம்பியை அழைத்துக் காட்டினாள்.
இருவரும் வானவில்லின் ஏழு வண்ணங்களையும் ஆச்சரியமாகப் பார்த்தனர். ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என அத்தனை வண்ணங்களும் அவர்களைப் பார்த்துச் சிரிப்பது போல இருந்தது.
முத்து ஒன்றைக் கவனித்தான். வானவில்லின் உச்சியில் இருந்த சிவப்பு நிறம் மட்டும் மற்ற வண்ணங்களைப் போலப் பிரகாசமாக இல்லை. அது கொஞ்சம் கொஞ்சமாக வெளிறிப் போய்க் கொண்டிருந்தது. அதை அக்காவிடம் காட்டினான். “ஐயோ, வானவில்லுக்கு என்ன ஆச்சு? சிவப்பு நிறம் மங்கிவிட்டதே... என்ன செய்றது?” என்று கவலைப்பட்டாள் பூங்கோதை.
அக்காவை அழைத்துக்கொண்டு தோட்டத்தி லிருந்த சிவப்பு ரோஜாச் செடியிடம் சென்றான் முத்து. அதைப் பார்த்ததும் அவளுக்குப் புரிந்துவிட்டது. “அழகான ரோஜாவே! அதோ பார், வானவில்லின் சிவப்பு நிறம் மங்கிக்கொண்டே போகிறது. உன் சிவப்பான இதழ்கள் சிலவற்றை எனக்குத் தருவாயா?” என்று கெஞ்சிக் கேட்டாள் பூங்கோதை.
ரோஜாவும் மெல்லிய காற்றில் தன் கிளைகளை அசைத்து சம்மதம் தெரிவித்தது. அக்காவும் தம்பியுமாகச் சில ரோஜா இதழ்களைப் பறித்து, ஒரு சிறிய சிரட்டையில் போட்டனர். ரோஜா இலையின் மேல் இருந்த பனித்துளிகளையும் சேர்த்துக் கொண்டனர். தன் விரல்களால் அந்த இதழ்களை மெதுவாக நசுக்கினாள் பூங்கோதை. இதழ்களில் இருந்து கருஞ்சிவப்பான வண்ணம் வெளிப்பட்டது. அடர்த்தியான சிவப்பு வண்ணம் அந்தச் சிரட்டையில் தயாரானது.
‘அடடா! வண்ணம் தயார். ஆனால், வானவில்லுக்கு எப்படி வண்ணம் தீட்டுவது’ என்று யோசித்தாள் பூங்கோதை. அப்போது மென்மையான காற்று அவர்களைச் சுற்றி வீசியது. சட்டென்று பூங்கோதையும் முத்துவும் பறக்க ஆரம்பித்தனர். ஒரு கையால் வண்ணச் சிரட்டையையும் மறுகையால் தம்பியையும் பிடித்துக்கொண்டிருந்தாள் பூங்கோதை.
காற்று அவர்களை வானவில்லின் அருகே கொண்டு சென்று, ஒரு மேகத்தின் மீது இறக்கிவிட்டது. வெளிறிப் போயிருந்த சிவப்புப் பட்டையின் மீது முத்து தன் குட்டி விரல்களால் அந்த ரோஜா வண்ணத்தைத் தொட்டுத் தொட்டுப் பூசினான். பூங்கோதை இன்னொரு பக்கமாக வண்ணத்தைப் பூசினாள். அவர்கள் பூசப் பூச, வானவில்லின் சிவப்பு நிறம் மீண்டும் உயிர் பெற்று, முன்பைவிட அழகாகவும் பிரகாசமாகவும் ஜொலிக்கத் தொடங்கியது. முழுச் சிவப்புப் பட்டைக்கும் வண்ணம் தீட்டி முடித்தனர்.
இப்போது வானவில் ஏழு வண்ணங்களுடன் மிக மிக அழகாக இருந்தது. முத்து கைதட்டி தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தினான். காற்று மீண்டும் அவர்களை மெதுவாகக் கீழே கொண்டுவந்து, அவர்கள் தோட்டத்தில் இறக்கி விட்டது. அன்று முதல் வானவில் தோன்றும் போதெல்லாம் அதன் சிவப்பு நிறம் மட்டும் கூடுதல் பிரகாசத்துடன் ஜொலித்துக்கொண்டிருக்கிறது!
- கனியப்பா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT