Published : 03 Sep 2025 07:17 AM
Last Updated : 03 Sep 2025 07:17 AM
மார்கி து லஃபயெட் பிரான்ஸைச் சேர்ந்த ராணுவத் தளபதி. அமெரிக்கப் புரட்சிப் போர், பிரெஞ்சுப் புரட்சி, ஜுலைப் புரட்சிப் போன்ற வரலாற்று நிகழ்வுகளில் முக்கியப் பங்காற்றியவர். பொ.ஆ.1824இல் லஃபயெட், அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, மக்கள் அவருக்கு விதவிதமான பரிசுகளை வழங்கினர்.
அதில் ஒருவர் உயிருள்ள பெரிய முதலையைப் பரிசாகக் கொடுத்தார். முதலையை என்ன செய்வதென்று தெரியாத லஃபயெட், வெள்ளை மாளிகைக்கு விருந்துக்குச் சென்றபோது, அதை அமெரிக்க அதிபர் ஜான் குவின்ஸி ஆடம்ஸுக்குப் பரிசளித்தார். பொதுவாக அமெரிக்க அதிபர்கள் பலரும் விதவிதமான செல்ல உயிரினங்களை வளர்ப்பது உண்டு. அவற்றில் பெரும்பாலானவை நாய்களே.
அதிபர் ஜான், எந்தவிதமான செல்ல உயிரினத்தையும் வளர்க்கவில்லை. அவரின் மனைவி லூயிஸா, பட்டுடைகளைத் தயாரித்து அணிந்து கொள்வதற்காகப் பட்டுப்புழுக்களை வளர்த்து வந்தார். பரிசாக வந்த முதலையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று அதிபர் ஜானுக்குத் தெரியவில்லை. ஆகவே, அதனைக் கட்டி முடிக்கப்படாத அறை ஒன்றில் அடைக்கச் சொன்னார்.
அமெரிக்க அதிபரைச் சந்திக்கப் பல்வேறு விருந்தினர்கள் வருவார்கள். அவர்களில் சிலரிடம் மட்டும் ஜான், ‘நீங்கள் இந்த அறையை உபயோகித்துக் கொள்ளுங்கள்’ என்று கைகாட்டுவார். அது அந்தக் கட்டி முடிக்கப்படாத அறை. விருந்தினர்கள் அந்த அறையின் கதவைத் திறந்தார்கள்.
அறையின் நடுவில் மிகப்பெரிய பாத்டப் ஒன்று வைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்கள். அதனுள் அந்த முதலை சொகுசாகப் படுத்திருந்தது. அவ்வளவுதான், விருந்தினர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள். அதில் அதிபர் ஜானுக்கு ஓர் ஆனந்தம்! அந்த முதலைக்கு ஜான் எந்தப் பெயரும் வைக்கவில்லை. இந்தச் செல்ல முதலை குறித்து வெள்ளை மாளிகை ஆவணங்கள் எதுவும் இல்லை. ஆகவே இது உண்மை இல்லை என்று சொல்பவர்களும் உண்டு.
1929இல் அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றவர் ஹெர்பெர்ட் ஹுவர். அவரின் மகனான ஆலன், இரண்டு முதலைகளை வளர்த்தார். அவை இரண்டும் வெள்ளை மாளிகையின் வராண்டாக்களிலும் தோட்டத்திலும் நடைபயின்றன. இதற்கு ஆதாரங்கள் உண்டு. ரக்கூன் ஒன்றும் வெள்ளை மாளிகையில் செல்லமாக இருந்திருக்கிறது. விருந்து ஒன்றுக்கு அழைத்து வரப்பட்ட அந்த ரக்கூன், அப்போதைய அதிபராக இருந்த கால்வின் கூலிஜின் மனைவியான கிரேஸைக் கவர்ந்தது.
‘யாரங்கே, இந்த ரக்கூனுக்கு வெள்ளை மாளிகையில் மரத்தால் ஆன வீடு ஒன்றைக் கட்டுங்கள்’ என்று கட்டளை இட்டார் அவர். அந்தப் பெண் ரக்கூனுக்கு ‘ரெபெக்கா’ என்று பெயரிட்டார். அதற்கு ஜோடியாக ஓர் ஆண் ரக்கூனையும் (ரூபன்) கொண்டுவந்தார்.
ரூபனுக்கு வெள்ளை மாளிகையைப் பிடிக்கவில்லையா அல்லது ரெபெக்காவைப் பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை. சில நாள்களிலேயே அங்கிருந்து அது காணாமல் போனது. ரெபெக்கா வெள்ளை மாளிகையில் நீண்ட காலம் (1926-1929) வாழ்ந்த ஒரே ரக்கூனாக வரலாற்றில் இடம்பிடித்தது.
அதிபர் கால்வினின் பதவிக்காலம் முடிந்ததும், ரெபெக்கா அங்கிருந்த ஓர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது. அடுத்து பதவிக்கு வந்த அதிபர் ஹெர்பெர்ட் ஹுவர் வெள்ளை மாளிகையில் குடியேற, அவரின் செல்லமாக வந்த ஒபோசம் (Opossum) என்கிற பாலூட்டி, ரெபெக்காவின் மர வீட்டை எடுத்துக் கொண்டது. ஒபோசத்துக்கு வைக்கப்பட்ட பெயர், பில்லி போசம். ஹெர்பெர்ட், பூனை ஒன்றையும் வளர்த்தார்.
அதற்குப் பெயர் யோசிக்க அவருக்கு நேரமில்லைபோல. ஆகவே அது ‘Mr. Cat’ என்று எல்லாராலும் மரியாதையாக அழைக்கப்பட்டது. டேஃப்ட் (Taft) என்கிற செல்லப்பசு, வெள்ளை மாளிகையின் புல்வெளியில் மேய்ந்தபடி, ஹெர்பெர்ட்டின் குடும்பத்துக்கே பால், வெண்ணெய், சீஸ் வழங்கி மகிழ்வித்தது. போலி (Polly) என்கிற செல்லக் கிளியை அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன் வளர்த்துவந்தார்.
அன்றைய விலையில் 25 டாலர் கொடுத்து வாங்கப்பட்ட அந்தக் கிளி, மனிதர்கள் பேசுவதை அப்படியே திருப்பிச் சொல்வதில் கில்லாடியாக இருந்தது. கோபம் வந்தால் அமெரிக்க அதிபர் என்றும் பாராமல் திட்டித் தீர்த்தது. தன் கடிதங்களில்கூட ஜாக்சன், போலி குறித்துக் குறிப்பிட்டிருக்கிறார்.
போலி வெள்ளை மாளிகைக்கு வந்த ஒரே ஆண்டில், ஜாக்சன் உடல் நலமின்றி இறந்து போனார். அவரின் செல்லக் கிளியையும் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள வைக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் போலி சத்தம்போட்டு அங்கிருந்தவர்களைத் திட்டத் தொடங்கியது. ஆகவே அதனை அவசரமாக அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.
2001ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற ஜார்ஜ் புஷ், வெள்ளை மாளிகையில் உலவிய தன் கறுப்புப் பூனைக்கு வைத்திருந்த பெயர், ‘இந்தியா.’ இது இந்தியர்கள் மத்தியில் சர்ச்சையை உண்டாக்கியது.
புஷ் வேண்டுமென்றே பூனைக்கு இந்தப் பெயரை வைத்திருக்கிறார், இந்தியர்களை அவமதிக்கிறார் என்று இந்தியாவின் சில இடங்களில் போராட்டங்கள்கூட நடந்தன. ரூபன் சியாரா என்கிற பேஸ்பால் விளையாட்டு வீரரின் செல்லப்பெயர் எல் இந்தியோ. அதைத்தான் பூனைக்கு வைத்திருப்பதாக புஷ் தரப்பில் விளக்கம் கூறப்பட்டது. இந்தியா மீது உயிரையே வைத்திருந்த புஷ் குடும்பத்தினர், 2009ஆம் ஆண்டில் அது இறந்தபோது கடும் சோகத்தில் ஆழ்ந்ததாகச் செய்திகள் வெளிவந்தன.
1901இல் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற தியடோர் ரூஸ்வெல்ட்தான் வெள்ளை மாளிகையில் அதிக அளவில் செல்ல உயிரினங்களை வளர்த்தவராகக் கருதப்படுகிறார். நாய், பூனை, குதிரை, பறவை, கினி எலி, கரடி, கழுதைப்புலி, ஆந்தை, முயல், பல்லி - இவை எல்லாம் ரூஸ்வெல்ட்டின் செல்லங்களாக இருந்திருக்கின்றன. அதிபரின் குடும்பமே செல்ல உயிரினங்களின் மீது அதீதப் பாசத்துடன் இருந்தது.
ஒருமுறை ரூஸ்வெல்ட்டின் மகனான க்வென்டின், வளர்ப்புப் பிராணிகள் விற்கும் கடை ஒன்றிலிருந்து நான்கு சிறிய பாம்புகளை ஆசையுடன் வாங்கி வந்தார். வெள்ளை மாளிகையில் அதிபர் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த க்வென்டின், தந்தையிடம் பாம்புக்குட்டிகளை எடுத்துக் காண்பிக்க, அவை அந்த மேசையில் நாலாபுறமும் ஊர்ந்து செல்ல, முக்கியஸ்தர்கள் பதறி ஓடினர். பின்பு பாம்புகள் பிடிக்கப்பட்டு, வேறு இடத்துக்கு அனுப்பப்பட்டன.
தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் எந்தச் செல்ல உயிரினத்தையும் வளர்க்கவில்லை. ‘ஏன் நீங்கள் நாய் வளர்க்கவில்லை?’ என்கிற கேள்விக்கு டிரம்ப் அளித்த பதில், ‘நேரம் இல்லை.’
(சந்திப்போம்)
- writermugil@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT