Published : 03 Sep 2025 07:11 AM
Last Updated : 03 Sep 2025 07:11 AM
குளத்து நீர் அமைதியாக இருந்தது. மிகவும் சுத்தமான நீராக இருந்ததால், குளத்தின் அடியில் அலைந்து திரியும் மீன்களைக் கண்ணாடி வழியே பார்ப்பதுபோல் இருந்தது. கிராமத்து மக்களுக்கு அந்தக் குளத்து நீர்தான் குடிநீராகப் பயன்பட்டது. ஆகவே அதில் யாரும் குளிப்பதில்லை. மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தனர். மீன்களைக் கொண்டுவந்து குளத்தில் விட்டிருந்தனர். அந்த மீன்களை யாரும் பிடிப்பதில்லை. அவை அங்கேயே வளர்ந்து குஞ்சு பொறித்து வாழ்ந்துவந்தன.
வழக்கம்போல் காலை நேரத்தில் மீன்கள் உற்சாகமாக நீந்திக் களித்திருந்தன. மீன்குஞ்சு களுக்குக் காலை நேரக் குளிர்ந்த நீரில் நீந்துவது என்றால் மிகவும் பிடிக்கும். நேரம் செல்லச் செல்ல நீரின் மேற்பரப்பு சூடாக ஆரம்பித்தது. குளத்தின் ஆழத்துக்குச் செல்ல மீன்குஞ்சுகளை பெரிய மீன்கள் அழைத்தன. “மேலே இருந்தால்தான் ஜாலியாக வேடிக்கைப் பார்க்கலாம்” என்றன மீன்குஞ்சுகள்.
பெரிய மீன்களுக்கு அவை சொன்னது சரி என்று பட்டது. அந்தக் குளத்தைச் சுற்றிலும் ஒன்றிரண்டு தென்னை மரங்களும் ஓர் ஆலமரமும் இருந்தன. “ஆலமரத்தின் நிழல் குளத்து நீரில் இந்நேரம் விழுந்திருக்கும். அங்கே சென்றால் நீர் ஜில்லென்று இருக்கும். போகலாமா?” என்று கேட்டது ஒரு மீன். மீன்குஞ்சுகளும் அந்த யோசனையை ஏற்றுக் கொண்டன. குளத்தின் ஆழத்திலேயே நீந்தி ஆலமர நிழலை அடைந்தன. ஆலமரத்தின் நிழல் குளத்து நீரின் ஒரு சிறு பகுதியில் விழுந்திருந்தது. அந்த இடத்தில் மட்டும் நீர் ஜில்லென்று இருந்தது.
மீன் குஞ்சுகளுக்கு உற்சாகம் தாங்கவில்லை. குளத்தின் ஆழத்துக்குச் செல்லவும் மீண்டும் மேற்பரப்புக்கு வரவுமாக விளையாடின. அப்போது, குளக்கரையில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். ஆலமரத்தின் விழுதுகளைப் பிடித்துத் தொங்கி ஊஞ்சல் ஆடினர். அவர்கள் உற்சாகமாகக் கத்திக்கொண்டே ஊஞ்சல் ஆடியதைப் பார்த்த மீன்குஞ்சுகள், தாங்களும் அவ்வாறு விழுதுகளைப் பிடித்து, ஊஞ்சலாட வேண்டும் என விரும்பின.
ஆலமரத்தின் சில விழுதுகள் நீர்ப்பரப்புக்குச் சற்று மேலே தொங்கிக்கொண்டிருந்தன. மீன்குஞ்சுகளால் அதைப் பிடிக்க முடியவில்லை. அதைப் பார்த்த பெரிய மீன்கள் கவலை அடைந்தன. அப்போது ஒரு பெரியவர் வந்தார். சிறுவர்களைப் பார்த்து “இங்கே விளையாடக் கூடாது” என்று விரட்டிவிட்டார். உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் விளையாடிய சிறுவர்களை விரட்டிவிட்டாரே என்று ஆலமரத்துக்கு வருத்தமாக இருந்தது.
தன் பார்வையைக் குளத்து நீரின் பக்கம் திருப்பியது. அங்கே மீன்குஞ்சுகள் விழுதுகளைப் பிடிக்க முயற்சி செய்துகொண்டிருப்பதைப் பார்த்து ஆனந்தமடைந்தது. தன் கிளைகளைச் சற்றுத் தாழ்த்தி விழுதுகளை நீர்பரப்புக்கு மிக அருகில் கொண்டு சென்றது.
மகிழ்ச்சியடைந்த மீன்குஞ்சுகள் விழுதுகளை எட்டிப்பிடிக்க முயன்றன. மீன்குஞ்சுகளுக்கு விளை யாட்டுக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில், அவை எம்பி விழுதுகளைப் பிடிக்க முயலும்போது, தன் விழுதுகளை மேலே இழுத்துக் கொண்டது ஆலமரம். மீன்கள் ஏமாற்றமடைந்தன. ஆலமரம் மீண்டும் விழுதுகளைக் கீழே இறக்கியது. மீன் குஞ்சுகள் விழுதுகளைப் பற்றிக் கொண்டன.
“இப்போது மகிழ்ச்சியா?” என்று கேட்டது ஆலமரம். “மகிழ்ச்சிதான்! ஆனால், சிறுவர்கள் விளையாடி யதைப்போல் விழுதுகளைப் பிடித்து ஊஞ்சலாட முடியவில்லையே” என்றன மீன்குஞ்சுகள். ஆலமரம் அந்த விழுதுகளைத் தானே மெதுவாக ஆட்டிவிட்டு மீன்கள் ஊஞ்சலாடுவதற்கு உதவி செய்தது.
அது, ஒரு தாய் தன் குழந்தையைத் தொட்டிலில் இட்டு ஆட்டுவதுபோல் இருந்தது. மீன்குஞ்சுகளுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. மீன்குஞ்சுகளும் மீன்களும் ஆலமரத்திடம் நன்றி சொல்லிவிட்டு, விடைபெற்றுச் சென்றன. “தினமும் இங்கே வாருங்கள். விளையாடிவிட்டுச் செல்லலாம்” என்று மீன்களை அன்போடு அனுப்பி வைத்தது ஆலமரம். “அவசியம் வருவோம்!” என உற்சாகமாகச் சொன்ன மீன்குஞ்சுகள், துள்ளி குதித்து நீருக்குள் மறைந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT