Published : 03 Sep 2025 07:07 AM
Last Updated : 03 Sep 2025 07:07 AM
நிலா, கோள்கள் அனைத்தும் ஏன் கோள வடிவில் இருக்கின்றன, ஏன் வேறு வடிவங்களில் இல்லை, டிங்கு? - ஜெப் ஈவான், 9-ம் வகுப்பு, புனித பாட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.
நல்ல கேள்வி. கோள்களின் கோள வடிவத்துக்குக் காரணம், ஈர்ப்பு விசை. கோள்களின் ஈர்ப்பு விசை அனைத்துப் பக்கங்களில் இருந்தும் உள்ளுக்குள் இழுக்கிறது. அதனால் கோள்கள் கோள வடிவத்தை அடைகின்றன. நம் சூரியக் குடும்பத்தில் 8 கோள்கள் இருக்கின்றன.
ஒவ்வொன்றும் அளவிலும் தன்மையிலும் வித்தியாச மானவை. சூரியனிலிருந்து வெவ்வேறு தொலைவில் இருக்கின்றன. சில கோள்கள் சிறிதாகவும் பாறைகளால் ஆனவையாகவும் உள்ளன. சில கோள்கள் பெரிதாகவும் வாயுக்களால் ஆனவையாகவும் உள்ளன. ஆனாலும் கோள வடிவில் உள்ளன.
ஏன் கோள்கள் சதுரமாகவோ முக்கோணமாகவோ தட்டையாகவோ இல்லை? கோள்கள் உருவானபோது அனைத்துப் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, தனக்கென ஈர்ப்பு விசையை உருவாக்கிக்கொண்டு சுழலும்போது தனக்கு அருகிலுள்ள பொருட்களை எல்லாம் இழுக்க ஆரம்பிக்கின்றன. அப்போது கோள வடிவத்தைப் பெறுகின்றன.
ஆனாலும் எல்லாக் கோள்களும் முழுமையான கோள வடிவில் இல்லை. சூரியனுக்கு அருகில் இருக்கும் புதனும் வெள்ளியும் முழுமையான கோள வடிவில் இருக்கின்றன. சனி, வியாழன் கோள்களின் நடுவில் மற்ற கோள்களைவிடச் சற்றுத் தடிமன் அதிகமாக இருக்கும்.
கோள்கள் சுழலும்போது வெளிப்புற விளிம்பில் உள்ள பொருட்கள் உள்ளே இருக்கும் பொருட்களைவிடச் சற்று வேகமாக நகர வேண்டும். அதனால் பூமத்தியரேகை பகுதியில் இந்தப் புடைப்பு தோன்றுகிறது. பூமியும் செவ்வாயும் வாயுக் கோள்களைவிடச் சிறியவை, மெதுவாகச் சுற்றக்கூடியவை. இவை இரண்டும் முழுமையான கோள வடிவில் இல்லை என்றாலும் சனி, வியாழன் கோள்களைவிட மேம்பட்ட கோள வடிவில் உள்ளன. அதேபோல யுரேனஸும் நெப்டியூனும் முழுமையான கோள வடிவில் இல்லை, ஜெப் ஈவான்.
பகலில் வரும் ஈக்கள், ஏன் இரவில் வருவதில்லை, டிங்கு? - ரா. உமா மகேஸ்வரி, 8-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி. பள்ளி, தங்களாச்சேரி, மதுரை.
ஈக்கள் பகல் நேரத்தில் இயங்கும் உயிரினம். அவை பகலில் உணவு தேடி சுறுசுறுப்பாக இயங்குகின்றன. இரவில் ஓய்வெடுக்கின்றன. ஈக்களின் பார்க்கும் திறன் இரவு நேரத்தில் இயங்குவதற்கு ஏற்ற மாதிரி இருக்காது. சூரிய ஒளியும் வெப்பமும் இவற்றுக்குத் தேவை. எனவே பகலில் உணவு தேடி அலைந்துவிட்டு, இரவில் பாதுகாப்பான இடங்களில் ஓய்வெடுக்கின்றன, உமா மகேஸ்வரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT