Published : 27 Aug 2025 07:44 AM
Last Updated : 27 Aug 2025 07:44 AM
தனது ஆறு வயது மகள் பேட்ரீசியாவுக்குப் பிறந்த நாள் பரிசாக என்ன கொடுக்கலாம் என்று யோசித்தார் ஃப்ளோரென்ஸ் ஸிக்ஃபீல்ட். அமெரிக்காவின் புகழ்பெற்ற பிராட்வே தியேட்டரைச் சேர்ந்த கலைஞர். எதையும் பெரிதாக யோசித்தே பழக்கப்பட்டவர். தன் மகள் வாழ்நாளுக்கும் மறக்கவே முடியாதபடி ஒரு பரிசை வழங்க நினைத்தார். ஆகவே, ஜான் ரிங்லிங் என்கிற சர்க்கஸ் கலைஞரிடமிருந்து யானைக்குட்டி ஒன்றை வாங்கினார்.
அந்தப் பரிசு வந்து இறங்கியபோது, பேட்ரீசியா வாய்பிளந்து நின்றாள். 1912ஆம் ஆண்டில் பிறந்த அந்த இந்திய ஆண் யானைக்கு ‘ஸிக்கி’ (Ziggy) என்று பெயரிட்டார் ஸிக்ஃபீல்ட். ஆனால், ஸிக்கியை அவர்களுக்குப் பராமரிக்கத் தெரியவில்லை. ஸிக்கி அவர்கள் வீட்டுத் தோட்டத்தை நாசம் செய்ய, அதனை மீண்டும் ரிங்லிங் சர்க்கஸுக்கே அனுப்பி வைத்தார்.
அங்கிருந்து சிறிது நாள்களில் சிங்கர் என்பவர் நடத்திய மிட்ஜெட் சர்க்கஸுக்கு ஸிக்கி விற்கப்பட்டது. அங்கே ஸிக்கி விரும்பும் வகையில் ஒரு பொறுப்பாளர் கிடைத்தார். சர்க்கஸ் கோமாளியான சார்லஸ் பெக்கர், ஸிக்கிக்கு நடனமாடவும் வாத்தியங்கள் வாசிக்கவும் கற்றுக் கொடுத்தார். ஆக, சார்லஸுடன் சேர்ந்து ஸிக்கியும் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் சர்க்கஸ் டூர் சென்று, வித்தைக் காட்டிப் புகழ்பெற்றது. ஸிக்கியைக் காண்பதற்காகவே குழந்தைகள் திரண்டனர்.
பத்தடி உயரம், சுமார் 5,400 கிலோ எடை, நீளமான வளைந்த தந்தங்கள் என்று வளர்ந்து கம்பீரமாகக் காட்சி அளித்தது ஸிக்கி. ஆனால், முதுமையின் காரணமாக சார்லஸ், சர்க்கஸிலிருந்து ஓய்வு பெற்றார். புதிய பொறுப்பாளராக ஜானி விண்டர்ஸ் வந்தார். ஸிக்கிக்கும் ஜானிக்கும் நட்போ அன்போ பெரிதாக வளரவில்லை. கலிபோர்னியாவில் அவர்கள் முகாமிட்டிருந்தனர். கட்டிப்போட்டிருந்த இடத்திலிருந்து தப்பிச் சென்ற ஸிக்கி, அங்கே பல்போவா பூங்காவில் கோபத்துடன் நின்று கொண்டிருந்தது. சார்லஸ் வரவழைக்கப்பட்டார். அவரே ஸிக்கியைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
சர்க்கஸில் இனி ஸிக்கியை வைத்துக்கொள்வது கடினம் என்று உணர்ந்தார்கள். ஆகவே, ஸிக்கியை சிகாகோ நகரத்தில் அமைந்த ஃபுரூக்ஃபீல்ட் உயிர்க் காட்சி சாலைக்கு அனுப்பி வைத்தனர். 800 டாலர் கொடுத்து வாங்கப்பட்ட ஸிக்கியைக் காண்பதற்குப் பலரும் ஆர்வமாக வந்து சென்றனர்.
1941, ஏப்ரல் 26. உயிர்க் காட்சி சாலையில் ஸிக்கிக்குப் பொறுப்பாளராக ஜார்ஜ் லூயிஸ் நியமிக்கப்பட்டிருந்தார். ஓரளவு அதனுடன் பழகி பணிகளைக் கவனித்துவந்தார். குறிப்பிட்ட பருவத்தில் யானையின் உடலில் நிகழும் இயல்பான ஹார்மோன் மாற்றங்களால் ஸிக்கிக்கு ‘மதநீர்’ சுரக்கத் தொடங்கியது. ஆகவே, கடுங்கோபத்துடன் இருந்தது.
அன்றைக்கு ஜார்ஜ் அதன் அருகில் சென்றபோது, தும்பிக்கையால் தாக்கியது. ஆக்ரோஷத்துடன் தரையில் தந்தங்களால் முட்ட, அவை மண்ணில் சிக்கிக் கொண்டன. அப்போது ஜார்ஜ், லாவகமாக அதன் பிடியிலிருந்து தப்பி, அங்கிருந்து வெளியேறினார். மதம்பிடித்த யானையைக் கொன்றுவிடும் வழக்கம் அப்போது இருந்தது.
ஜார்ஜ் உயிர்க் காட்சி சாலை நிர்வாகிகளிடம் கெஞ்சினார். ‘இதுவும் யானையின் இயல்புதான். தயவுசெய்து அதனைக் கொன்று விடாதீர்கள்.’ அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டனர். ஜார்ஜ், பாக்கிடெர்ட் ஹவுஸ் என்கிற மறைவான, மூடப்பட்ட பகுதிக்கு இன்னொரு யானையின் உதவியுடன் ஸிக்கியை அழைத்துச் சென்று அடைத்தார். அதன் பின்னங்காலில் கனத்த, நீளமான சங்கிலி கட்டப்பட்டது. மதநீர் சுரக்கும் பருவம் முடியும்வரை ஸிக்கி, யாரும் நெருங்க இயலாத அளவுக்கு ஆக்ரோஷத்துடனேயே நடந்துகொண்டது.
வருடங்கள் கடந்தன. ஸிக்கியின் ஆக்ரோஷம் தணிந்த நிலையிலும் அது வெளியே கொண்டு வரப்பட வில்லை. அதன் கால் சங்கிலி அகற்றப் படவில்லை. அதற்கான உணவைத் தள்ளியிருந்தே வீசினார்கள். அதுவே வழக்கமாகிப் போனது. வெயில், மழை, குளிர், பிற விலங்குகள், பார்வையாளர்கள், சூரியன், நிலா எல்லாவற்றையும் ஸிக்கிப் பல ஆண்டுகளாக மறந்தே போனது. காலப்போக்கில் மனிதர்கள் வந்தாலே, அவர்களைப் பார்க்காமல் ஸிக்கி சுவரை நோக்கித் திரும்பிக்கொண்டது.
1969, மார்ச். சிகாகோ ட்ரிப்யூன் என்கிற பத்திரிகையில், ‘யானை ஸிக்கி, ஒரே இடத்தில் 29 ஆண்டுகளாக அடைபட்டுக் கிடக்கிறது’ என்று அதன் பரிதாப நிலை குறித்துச் செய்தி வெளிவந்தது. அது ஸிக்கியின் விடுதலைக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்று பலரையும் தூண்டியது. ‘ஸிக்கியை வெளியே கொண்டுவர வேண்டும் என்றால், உரிய வசதிகளுடன் தனி கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு 50,000 டாலர்கள் நிதி வேண்டும்’ என்று உயிர்க் காட்சி சாலை நிர்வாகத்தினர் அறிவித்தனர்.
அமெரிக்கர்கள் ஸிக்கிக்காக நிதி திரட்ட, விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர். பள்ளிக் குழந்தைகள் பலரும் Ziggy Fund என்கிற பெயரில் பணம் திரட்டினர். 50,000 டாலர்கள் சேர்ந்தன. அப்போதும் உயிர்க் காட்சி சாலை நிர்வாகத்தினர் உடனே கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்கவில்லை. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஸிக்கி வெளியில் வர விரும்புமா என்பதைப் பரிசோதிக்க நினைத்தனர். வாஷிங்டனில் குடியேறியிருந்த பழைய பொறுப்பாளரான ஜார்ஜ் லூயிஸை வரவழைத்தனர். அவரை ஸிக்கி அடையாளம் கண்டுகொண்டது. 30 ஆண்டுகளுக்கு முன்பு ஸிக்கியை உள்ளே அடைத்த ஜார்ஜ், அப்போது வெளியே அழைத்துவந்தார்.
சூரிய ஒளி பட்டதும் ஸிக்கி அப்படியே நின்றது. காற்றை, வெளிச்சத்தை அனுபவித்தது. பின்பு மெல்ல உலாவ ஆரம்பித்தது. அங்கே இருந்த வைக்கோலைத் தின்றது. ஒரு மணி நேரத்திற்கு மேல் சுதந்திரத்தை அனுபவித்த பிறகு, சாந்தமாக மீண்டும் தன் இடத்துக்குச் சென்றது. உடனே கட்டுமானப் பணிகள் ஆரம்பமாயின.
குளிப்பதற்கான குளத்துடன் சேர்த்து ஸிக்கிக்கான புதிய பகுதி கட்டி முடிக்கப்பட்டது. 1971, ஆகஸ்ட் 28, ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்க, ஸிக்கி தனது புதிய வீட்டில் குடிபுகுந்தது. ஸிக்கி பொம்மைகள், ஸிக்கி சாவிக் கொத்து என்று விதவிதமான பரிசுப் பொருள்கள் விற்பனையும் நன்றாக நடந்தது. அன்றைய நாளில் அமெரிக்காவின் புகழ்பெற்ற யானையாக ஸிக்கி விளங்கியது.
1975, மார்ச்சில் ஸிக்கி தவறி அகழியில் விழுந்தது. அதை மீட்பதற்குள் பெரும்பாடாகிவிட்டது. பின்பு நோய்வாய்ப்பட்ட ஸிக்கி, முதுமை காரணமாக அந்த ஆண்டு அக்டோபர் 27 அன்று இறந்து போனது. அன்றைக்கு அமெரிக்கக் குழந்தைகள் பலரும் ஸிக்கிக்காகக் கண்ணீர் சிந்தினர்.
(சந்திப்போம்)
- writermugil@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT