Published : 27 Aug 2025 07:36 AM
Last Updated : 27 Aug 2025 07:36 AM
தொலைதூரத்துக்கு வலசை மேற்கொள்ளும் பறவைகள் பொதுவாகக் கூட்டமாகத்தான் செல்கின்றன. வலசையின்போது மொத்தக் கூட்டத்தையும் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு மாற்றுகிறது தலைமைப் பறவை. செல்லும் வேகத்துக்கு ஏற்பகாற்றிலிருந்து ஏற்படும் உராய்வு விசையும் அதிகரிக்கிறது.
இந்த உராய்வு விசையைக் குறைப்பதற்குக் காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் கூர்மையான பகுதி தேவைப்படுகிறது. வல்லூறு மணிக்கு 80 கி.மீ. வேகத்திலும், புறா மணிக்கு 50 கி.மீ. வேகத்திலும் பறக்கும்போது தங்களது இறக்கையை, சாதாரண நீளத்தில் வைத்திருப்பதைவிடச் சிறிது நீளம் குறைந்த மாதிரி இருக்குமாறு வைத்துக்கொண்டு பறக்கின்றன.
கூட்டமாகப் பறவைகள் பறக்கும்போது, ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் பறப்பதைக் காணலாம். அதில் மிகவும் பிரசித்திப் பெற்றது V போன்ற வடிவமைப்பு. பல பறவைகள் இது போன்ற வடிவமைப்பில் பறக்கின்றன.
ஒவ்வொரு பறவையும் தனியாகப் பறக்கும் போது, பறப்பதற்குத் தேவையான ஆற்றல் செலவு, காற்றைத் தள்ளிக்கொண்டு செல்வதற்கான ஆற்றல் செலவு என நிறைய ஆற்றலைச் செலவிடுகிறது. இந்த ஆற்றல் செலவைக் குறைப்பதற்காக அவை கண்டறிந்த நுட்பமே V வடிவத்தில் பறத்தல்.
நடுவில் ஒரு பறவை பறக்கும், அதன் இரண்டு பக்கங்களிலும் மீதிப் பறவைகள் பறக்கும். இவ்வாறு முதலில் பறக்கும் பறவை காற்றில் இருந்து வரும் உராய்வு விசையை எதிர்கொள்கிறது. அதனால் அந்தப் பறவை அதிக ஆற்றலை உபயோகித்துப் பறக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்.
எப்படிக் கல்லை தண்ணீரில் போடும்போது ஒரு சுழல் உருவாகிறதோ, அதேபோல் பறவை காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும்போதும், ஒரு காற்றுச் சுழல் உருவாகிறது. இந்தக் காற்றுச் சுழல் இறக்கையின் கீழ்ப் பகுதியில் ஆரம்பிக்கும். அதன் பிறகு வரும் இரண்டாவது பறவை முதல் பறவையைவிடச் சற்று உயரத்தில் தன் பாதையை அமைக்கும்.
அப்படிச் செய்யும்போது காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் பறவையில் இருந்து உருவாகும் சுழல், அதன் பின்னால் வரும் பறவைக்கு ஒரு மேல்நோக்கு விசையைக் கொடுக்கிறது. இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஆற்றல் செலவைக் குறைக்கிறது. இது போலவே அடுத்தடுத்துச் செல்லும் பறவைகளும் ஆற்றல் செலவைக் குறைக்கின்றன. இவ்வாறு கூட்டமாக V வடிவத்தில் பறப்பதால் பறவைகளின் மொத்த ஆற்றல் செலவு 10 முதல் 20 சதவீதம் வரை குறைகிறது.
தன் கூட்டத்துக்குத் தலைமைவகிக்கும் முதல் பறவை அதிக ஆற்றலைச் செலவழித்துக் கூட்டத்தை வழிநடத்தும். அதனால் போதுமான வேகத்தில் செல்ல முடியவில்லை என்று தெரிந்தவுடன், தனது முதல் நிலையிலிருந்து கடைசி நிலைக்குச் சென்றுவிடும். அப்போது இரண்டாம் நிலையில் இருக்கும் பறவை முதல் நிலைக்கு வந்து கூட்டத்தை வழிநடத்தும். இப்படியாகப் பின்னால் இருக்கும் ஒவ்வொரு பறவையும் முதலிடத்திற்கு வந்து கூட்டத்தை வழிநடத்தும்.
அதிவேகமாகப் பறக்கும் ராணுவ விமானங்கள் இந்தப் பறவை தொழில்நுணுக்கத்தைப் பயன்படுத்தி V வடிவத்தில் பறப்பதைக் காணலாம். விமானம் காற்றைக் கிழித்துக்கொண்டு பயணப்படும் போதும் இந்தக் காற்றுச் சுழல் உருவாகிறது. ஆனால், பயணியர் விமானங்கள் கூட்டாகப் பறக்காமல் தனியேதான் பறக்கின்றன.
இவ்வாறு காற்றுச் சுழலினால் உருவாகும் காற்று விமான இறக்கையின் நுனியில் மேல்நோக்கிச் சென்று ஆற்றல் இழப்பு ஏற்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக, விமானத்தில் சிறப்பு நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வேகமாகச் செல்லும் விமானங்களுக்குக் காற்றுச் சுழலால் ஏற்படும் ஆற்றல் இழப்பு, குறைவான வேகத்தில் செல்லும் விமானத்தைவிடக் குறைவாக இருக்கும். சில நேரம் V வடிவத்திற்குப் பதிலாக J வடிவத்திலும் பறவைகள் பறக்கின்றன. V வடிவத்தில் பறப்பதற்கு அதிகமான எண்ணிக் கையில் பறவைகள் தேவைப்படுகின்றன.
எண்ணிக்கைக் குறைவாக இருக்கும்போது J வடிவ முறையைப் பயன்படுத்துகின்றன. காற்று வீசும் திசையில் பறப்பதால் ஆற்றல் செலவைக் குறைக்க முடியும் எனும்போது J வடிவத்தைப் பயன்படுத்துகின்றன. குறிப்பிட்ட வடிவத்தில் கூட்டமாகப் பறவைகள் பறந்து செல்வதால் குறைந்த ஆற்றல் செலவில் பல நூறு கி.மீ. தூரத்தைக் கடந்து செல்கின்றன.
(பயணம் நிறைந்தது)
- writersasibooks@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT