Last Updated : 20 Aug, 2025 07:45 AM

 

Published : 20 Aug 2025 07:45 AM
Last Updated : 20 Aug 2025 07:45 AM

ஹீரோ பெலாரஸ் ஜேக்! | வரலாறு முக்கியம் மக்களே! - 12

இதுவரை கடலில் ஓங்கில்களால் காப்பாற்றப்பட்ட மனித உயிர்களின் எண்ணிக்கையை அளவிடவே முடியாது! ஓங்கில்கள், மனிதர்கள் மீது கொண்ட பாசம் அப்படிப்பட்டது! 2004, அக்டோபர். நியூசிலாந்தின் வாங்கரே கடல் பகுதியில், இங்கிலாந்தைச் சேர்ந்த ராப் ஹவுஸ், தன் மகள், நண்பர்களுடன் நீந்திக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஓங்கில்கள் கூட்டமாக வந்து அந்த நால்வரைச் சுற்றியும் வட்டமடிக்கத் தொடங்கின. ஓங்கில்கள் விளையாட்டுக் குணம் கொண்டவை. ஆகவே இப்படிச் செய்கின்றன என்று நினைத்தபடி ஓங்கில்களுக்கு மத்தியில் ஜாலியாக நீந்திக் கொண்டிருந்தார்கள்.

பின்புதான் வெள்ளைச் சுறா ஒன்று அவர்களை நோக்கி நீந்தி வருவதைக் கண்டார்கள். அந்த ஓங்கில்கள், சுறாவிடமிருந்து அந்த நால்வரையும் காப்பாற்றுவதற்காகவே அப்படிச் சுற்றிச்சுற்றி நீந்திக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்தார்கள்.

சுமார் அரை மணி நேரத்துக்கு ஓங்கில்கள் பாதுகாப்பு வளையமாக அவர்களைச் சுற்றி நீந்தவும், வெறுத்துப் போன வெள்ளைச் சுறா அங்கிருந்து புறப்பட்டது. பின்பு ராப் ஹவுஸும் மற்றவர்களும் பத்திரமாகக் கரைக்குத் திரும்பினார்கள். ஓங்கில்கள் நிம்மதியாக கடலுக்குள் மறைந்தன.

2000. இத்தாலியின் தென்கிழக்கில் அமைந்த மேன்ஃப்ரெடோனியா கடற்கரைப் பகுதியில் இமானுவேல் செசி படகில் சென்று கொண்டிருந்தார். அதில் இருந்த அவரின் 14 வயது மகன் டேவிட் செசி, திடீரென நிலைதடுமாறி கடலுக்குள் விழுந்துவிட்டார். அவருக்கு நீச்சல் தெரியாது. மகன் விழுந்ததைத் தந்தை கவனிக்கவும் இல்லை. கடல் நீருக்குள் டேவிட் மூழ்கிக்கொண்டே போக, எங்கிருந்தோ அசுர வேகத்தில் நீந்திவந்த ஃபிலிப்போ என்கிற ஓங்கில், அவரை நீரின் மேல் மட்டத்தை நோக்கி உந்தித் தள்ளியது.

அவர் கீழே வரவர, ஃபிலிப்போ மேல் நோக்கித் தள்ளித்தள்ளி நீருக்குமேல் கொண்டுவந்து சேர்த்தது. எப்படியோ இமானுவேலின் கவனத்தை ஈர்த்தது. மகனை நீரில் கண்டுகொண்ட இமானுவேல், அவரைக் காப்பாற்றி, படகில் போட்டார். ஃபிலிப்போ எந்த நன்றியையும் எதிர்ப்பார்க்கவில்லை. ‘என் கடமையைத்தானே செய்தேன்’ என்பதுபோல் நீருக்குள் மறைந்தது. அந்தக் கடல் பகுதியில் ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றும் ஹீரோ ஓங்கிலாகவே ஃபிலிப்போ தன் பணியைச் செய்துவந்தது.

நியூசிலாந்தில் பெலாரஸ் ஜேக்
நினைவாக வைக்கப்பட்டுள்ள வெண்கலச் சிலை

நியூசிலாந்தின் இரண்டு பெரிய தீவுகளுக்கு இடையே அமைந்தது குக் நீரிணை. அந்தக் கடற்பகுதியைக் கடந்து செல்ல வேண்டும் என்றாலே கப்பல் மாலுமிகளுக்கு அடிவயிற்றைக் கலக்கும். கப்பல் பயணிகளும் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்வார்கள். மிக வேகமான நீரோட்டமும் ஏகப்பட்ட பாறைகளும் பேரலைகளும் நிறைந்த ஆபத்தான கடற்பகுதி அது. அங்கே பல கப்பல்கள் விபத்தில் சிக்கி தரைதட்டிய, கவிழ்ந்த வரலாறுகள் உண்டு.

1888ஆம் ஆண்டு. பிரிண்டில் என்கிற சிறிய கப்பலின் மாலுமி, சர்வ ஜாக்கிரதையுடன் அந்தப் பகுதிக்குள் நுழைந்தார். அப்போது Risso என்கிற வகையைச் சேர்ந்த ஓங்கில் ஒன்று, கப்பலுக்கு இணையாக நீந்த ஆரம்பித்தது. துள்ளிக் குதித்தும் நடனமாடியும் கப்பலுக்கு முன்பாகப் பயணம் செய்தது.

‘என்னடா இது, ரொம்பத் தொல்லை பண்ணுது’ என்று கப்பலில் இருந்தவர்கள், அதை வேட்டையாடத் தயாரானார்கள். மாலுமி தடுத்தார். ‘ஆபத்தில்லாத பாதையில் பயணம் செய்ய அது நமக்கு வழிகாட்டுவதுபோலத் தெரிகிறது’ என்றார்.

அவர்கள், ஓங்கில் காட்டிய பாதையில் நீரிணையை எந்த ஆபத்தும் இன்றிக் கடந்தார்கள். பிரெஞ்சு பாஸ் பகுதி வந்ததும் ஓங்கில் கடலுக்குள் மறைந்து காணாமல் போனது. இதேபோன்ற அனுபவம், அடுத்தடுத்து வேறு சில கப்பல் மாலுமிகளுக்கும் கிடைத்தது. ‘ஆமா, வெள்ளை உடம்புல சாம்பல் நிறத்துல வரி வரியா இருக்கும்.

ஒரு 13 அடி நீளம் இருக்கும். அதே ஓங்கில்தான். எனக்கும் அதுதான் வழி காட்டிச்சு’ என்று மாலுமிகள் ஆச்சரியமாகப் பேசிக்கொண்டார்கள். நியூசிலாந்தில் அந்த ஓங்கிலின் புகழ் பரவியது. அந்த ஆண் ஓங்கில், நீரில் நடனமாடியபடியே நீந்துவது என்பது ஸ்காட்லாந்தின் பாரம்பரிய நடனமான ‘பெலாரஸ் ஜேக்’ போலவே இருந்ததால், அதற்கும் அந்தப் பெயரிட்டு அடையாளப்படுத்தத் தொடங்கினர்.

இரவு பகல் பாராமல் பெலாரஸ் ஜேக் கப்பல்களுக்கு, குக் நீரிணையில் வழிகாட்டும் சேவையை விருப்பமுடன் செய்தது. ‘பெலாரஸ் ஜேக் இப்ப வந்திரும். அப்புறம் தைரியமா போகலாம்’ என்று கப்பல் மாலுமிகள் தங்கள் வழிகாட்டிக்காக நடுக்கடலில் காத்திருந்தார்கள். அந்த ஓங்கில் குறித்த செய்திகள் பத்திரிகைகளில் அடிக்கடி இடம்பிடித்தன. அதைக் காண்பதற்காகவே அந்தக் கடல் பகுதியில் மக்கள் விருப்பப்பட்டு பயணம் செய்தார்கள்.

1904. பென்குயின் என்கிற கப்பலுக்கும் வழிகாட்டியபடி நீந்திக் கொண்டிருந்தது பெலாரஸ் ஜேக். கப்பலின் மாலுமி, அந்த அற்புதமான வழிகாட்டியைச் சுட்டார். குறி தவறியதால் பெலாரஸ் ஜேக் தப்பியது. கப்பலிலிருந்த மற்றவர்கள், கரைக்கு வந்ததும் மாலுமி மீது புகார் அளித்து கைது செய்ய வைத்தனர்.

விஷயம் கேள்விப்பட்ட நியூசிலாந்து அரசாங்கம், ‘பெலாரஸ் ஜேக்கை வேட்டையாடத் தடை’ என்று அதன் பாதுகாப்புக்காகச் சட்டமே இயற்றியது (1904, செப்டெம்பர் 26). உலக வரலாற்றில் ஒரு கடல்வாழ் உயிரினத்துக்காக இயற்றப்பட்ட முதல் சட்டம் இதுவே.

1912ஆம் ஆண்டுவரை பெலாரஸ் ஜேக், கப்பல்களின் வழிகாட்டியாகச் சேவை செய்தது. கடைசிக் காலத்தில் வயது மூப்பின் காரணமாக அந்த வழிகாட்டியால் வேகமாக நீந்த இயலவில்லை. அதை மதித்து மாலுமிகளும் கப்பல்களை மெதுவாகவே செலுத்தினார்கள்.

அந்த ஆண்டின் ஏதோ ஒரு நாளில் இருந்து பெலாரஸ் ஜேக், மாலுமிகளின் கண்களில் தென்படவில்லை. விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டது. பின்பு இயற்கையாகவே மரணம் அடைந்தது. நியூசிலாந்தில் பெலாரஸ் ஜேக் நினைவாக வெண்கலச் சிலை நிறுவப்பட்டிருக்கிறது.

பென்குயின் கப்பல் மாலுமி தன்னைச் சுடுவதற்கு முயற்சி செய்த பிறகு, பெலாரஸ் ஜேக் அந்தக் கப்பலுக்கு வழிகாட்டுவதைத் தவிர்த்தது. 1909, பிப்ரவரி 12 அன்று குக் நீரிணைப் பகுதியில் பாறையில் மோதி பென்குயின் கப்பல் கவிழ்ந்தது. 75 பேர் இந்த விபத்தில் உயிரிழந்தார்கள்.

(சந்திப்போம்)

- writermugil@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x