Last Updated : 20 Aug, 2025 07:37 AM

1  

Published : 20 Aug 2025 07:37 AM
Last Updated : 20 Aug 2025 07:37 AM

எனக்கு ஏன் நான்கு கால்கள் இல்லை? | கதை

புங்க மரக்கிளையில் சிட்டுக்குருவி ஒன்று கூடுகட்டி, ஒரே ஒரு முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தது. குருவிக்குஞ்சு சற்று வளர்ந்து பறக்கவும் கற்றுக்கொண்டது. ஆனாலும் தாய்க்குருவி குஞ்சிடம், ‘நீ கூட்டைவிட்டு வெகுதூரம் பறந்து செல்ல வேண்டாம். இன்னும் கொஞ்சம் நாட்கள் போன பிறகு நீ விருப்பப்பட்ட இடத்திற்குப் பறந்து போகலாம்’ என்று சொல்லி இருந்தது.

எனவே குருவிக்குஞ்சு தன் கூடு இருந்த மரத்தின் அருகிலேயே பறக்கும். ஆங்காங்கே மரக்கிளைகளில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துப் பொழுதைப் போக்கும். மாலைப் பொழுதில் மீண்டும் தன் கூட்டிற்குத் திரும்பிவிடும். ஒரு நாள் சிலந்தி ஒன்று இரண்டு மரக்கிளை களுக்குத் தாவிக்கொண்டிருந்தது. அது தன் வாயிலிருந்து சுரக்கும் ஒரு பசையைக் கொண்டு பெரிய வலை பின்னுவதைக் குருவிக்குஞ்சு பார்த்தது.

சிலந்திக்கு எட்டுக் கால்கள் இருப்பதைப் பார்த்த குருவிக்குஞ்சுக்கு வியப்பாக இருந்தது.இன்னொரு நாள் பூனை ஒன்று எலியைத் துரத்துவதைப் பார்த்தது. அங்குமிங்கும் ஓடிய எலி பூனையிடம் அகப்படாமல் மரத்தடியி லிருந்த சிறிய பொந்துக்குள் ஒளிந்துகொண்டது. மற்றொரு நாள் நாய் ஒன்று பூனையைத் துரத்தியது. பூனையோ நாயிடம் அகப்படாமல் வேகமாக ஓடிச் சென்று மரத்தில் ஏறி அமர்ந்துகொண்டது.

இன்னொரு நாள் மலையிலிருந்து சில குரங்குகள் கிராமத்தின் எல்லைக்கு வந்தன. அவை ஒரு கொய்யா மரத்தின் கிளைகளில் தாவி ஏறின. மரத்தில் பழுத்துக் கிடந்த கொய்யாப் பழங்களைப் பறித்து உண்டன. மற்றொரு நாள் கிராமத்திலிருந்து ஆடுகளும் ஆட்டுக் குட்டிகளும் அந்த இடத்திற்கு வந்தன.

ஆடுகள் அங்கிருந்த செடிகளைத் தின்றன. சில ஆடுகள் தங்கள் பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி, முன்னங்கால்களை உயர்த்தி, உயரமான கிளைகளில் உள்ள இலைதழைகளை உண்டன. ஆட்டுக் குட்டிகள் புல்வெளியில் துள்ளி விளையாடின.

இன்னொரு நாள் கிராமத்திலிருந்து சில சிறுவர்கள் வந்தார்கள். அருகிலிருந்த மாமரத்தில் ஏறி மாங்காய் களைப் பறித்து அவர்கள் தின்றார்கள். பிறகு தாழ்வான கிளைகளைக் கைகளால் பற்றித் தொங்கி, ஊஞ்சல் ஆடி விளையாடினார்கள். இவற்றை எல்லாம் பார்த்த குருவிக்குஞ்சின் மனதில் பல எண்ணங்கள் எழுந்தன.

‘மனிதர்களுக்கு இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இருக்கின்றன. பெரிய விலங்குகளுக்கு மட்டுமன்றி எலி, அணில் போன்ற சிறிய விலங்குகளுக்கும்கூட நான்கு கால்கள் இருக்கின்றன. சிலந்திக்குக்கூடப் பல கால்கள் இருக்கின்றன. ஆனால், நம்மைப் போன்ற பறவைகளுக்கு இரண்டு கால்கள் மட்டும்தானே இருக்கின்றன’ என்று குருவிக்குஞ்சு கவலைப்பட்டது.

உணவு தேடச் சென்ற தாய்க்குருவி கூட்டுக்குத் திரும்பியது. உடனே குருவிக்குஞ்சு, “அம்மா, இந்த உலகில் நம் பறவை இனத்திற்கு மட்டும் இரண்டு கால்கள்தானே இருக்கின்றன. இயற்கை நம்மை மட்டும் ஏன் இப்படிப் படைத்து வஞ்சித்தது?” என்று கேட்டது. “நீதான் இப்போது பறக்கக் கற்றுக்கொண்டாய் அல்லவா? நாளை காலை என்னோடு வா. நான் அழைத்துச் செல்கிற இடங்களில் என்னென்ன நடக்கிறது என்று பார். பிறகு உன் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்” என்றது தாய்க்குருவி.

மறுநாள் பொழுதுவிடிந்தது. தாய்க்குருவி குருவிக்குஞ்சை அழைத்துக்கொண்டு புறப்பட்டது. முதலில் ஒரு வேப்பமரத்திற்குக் குருவிக்குஞ்சை அழைத்துச் சென்றது தாய்க்குருவி. அங்கே ஒரு காகம் நன்கு பழுத்த வேப்பம் பழத்தைத் தன் அலகால் கொத்திப் பறித்து விழுங்கியதைக் குருவிக்குஞ்சு பார்த்தது.

பிறகு தாய்க்குருவி ஒரு வாதுமை மரத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கே ஒரு கிளி தனக்குக் கிடைத்த ஒரு கொட்டையைத் தன் அலகால் உடைத்து, உள்ளிருந்த பருப்பை எடுத்து உண்டதைக் குருவிக்குஞ்சு பார்த்தது. பிறகு இரண்டும் ஒரு குளக்கரைக்குச் சென்றன. அங்கே ஒரு மயில் நீர் அருந்திக்கொண்டிருப்பதைக் குருவிக்குஞ்சு பார்த்தது. திரும்பி வரும் வழியிலேயே சில புறாக்கள் தங்கள் சிறகுகளை அலகால் கோதிக்கொண்டிருப்பதைக் குருவிக்குஞ்சு பார்த்தது.

இறுதியாக இரண்டும் ஒரு பனைமரத்தின் அருகில் வந்தன. அங்கே தூக்கணாங்குருவிகள் மெல்லிய நார்களைத் தங்கள் அலகால் பின்னி, அழகான கூட்டை உருவாக்கிக் கொண்டிருப்பதைக் குருவிக்குஞ்சு பார்த்தது. பிறகு தாய்க்குருவியும் குருவிக்குஞ்சும் தங்கள் கூட்டிற்கு வந்துசேர்ந்தன. தாய்க்குருவி தன் குஞ்சிடம், “இன்று நாம் வெளியே சென்றபோது பல வகைப் பறவைகளைப் பார்த்தோம். அவற்றிலிருந்து நேற்று நீ கேட்ட கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொண்டாயா?” என்று கேட்டது.

“அம்மா, பல வகைப் பறவைகளைப் பார்த்தோம். ஆனால், அவற்றில் என் கேள்விக்கு என்ன பதில் இருக்கிறது என்று புரியவில்லையே...” என்றது குருவிக் குஞ்சு. “மனிதர்களுக்குக் கைகளும் கால்களும் இருக்கின்றன, விலங்குகளுக்கு நான்கு கால்கள் இருக்கின்றன. ஆனால், நம் பறவை இனத்திற்கு இரண்டு கால்கள்தானே இருக்கின்றன என்று வருத்தப்பட்டாய்.

இயற்கை நமக்கு அலகு எனும் சிறந்த உறுப்பைத் தந்திருக்கிறது. நம் இனம் தன் அலகால் பழங்களைப் பறிக்கிறது, கொட்டைகளை உடைக்கிறது, உணவை உண்கிறது, குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுகிறது, நீர்அருந்துகிறது, சிறகுகளைக் கோதி சுத்தம் செய்கிறது. இதை எல்லாம் நீ பார்த்தாய் அல்லவா! எல்லாவற்றுக்கும் மேலாக அலகால் எவ்வளவு அழகாகக் கூடுகட்டுகிறது.

பறவை இனமாகிய நமக்கிருக்கும் அலகால் எத்தனையோ வேலைகளைச் சிறப்பாகச் செய்யும்படி இயற்கை படைத்திருக்கிறதே” என்று சொன்னது தாய்க்குருவி. “ஆமாம் அம்மா, இயற்கை ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு சிறப்பைத் தந்திருக்கிறது என்று புரிந்துகொண்டேன்” என்று மகிழ்ச்சியாகச் சொன்னது குருவிக்குஞ்சு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x