Published : 13 Aug 2025 07:37 AM
Last Updated : 13 Aug 2025 07:37 AM
‘பறவையாக இருந்தால் சட்டென்று பறந்துவிடலாம்’ என்று நாம் எளிதாகச் சொல்லிவிடுவோம். ஆனால், பறப்பது பறவைகளுக்கே எளிதல்ல. அது ஒரு கற்றல் பயணம். பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்குப் பலவிதங்களில் கற்றுக் கொடுக்கின்றன. சில பறவைகள் மனிதர் களைப் போலவே சிக்கலான முறைகளில் கற்பிக்கின்றன. சில பறவைகள் தானாகவே கற்றுக் கொள்கின்றன.
இன்னும் சில பறவைகள் மற்ற பறவைகளிடம் இருந்து கற்றுக்கொள்கின்றன. கூட்டமாக வாழும் பறவைகளும் தனித்து வாழும் பறவைகளும் வெவ்வேறு வழிகளில் கற்பிக்கின்றன. முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகளுக்குப் பெற்றோர்தான் உணவை ஊட்டிவிட வேண்டும். குஞ்சுகள் பிறந்தவுடன் முதல் செயல் தாயைப் பின்தொடர்தல்தான். இது வாத்து, அன்னம் போன்ற பறவைகளில் அதிகம் காணப்படுகிறது.
இந்தப் பாலபாடத்தில் நான்கு முக்கியமான பயிற்சிகள் பறவைகளுக்குத் தேவைப்படுகின்றன. உணவு தேடுவது, பறப்பது, எதிரிகளைத் தவிர்ப்பது, ஒலிகளைக் கண்டறிவது. சில பறவைகள் தங்கள் இனத்தின் பாடலைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
கூட்டிலிருந்து குஞ்சுகள் எட்டிப் பார்க்கத் தொடங்கியதும், அவற்றுக்குப் பாதுகாப்புக் குறித்த பாடங்கள் ஆரம்பமாகின்றன. ஆபத்து வரும்போது பெற்றோர் கொடுக்கும் எச்சரிக்கை ஒலி, அவை ஒளிந்துகொள்ளும் முறை போன்றவற்றைக் குஞ்சுகள் கூர்ந்து கவனிக்கும். வேட்டையாடிகள் அருகில் வந்தால், பெற்றோர் பதற்றத்துடன் வேறு திசையில் பறந்து எச்சரிக்கை விடுப்பதைப் பார்க்கும் குஞ்சுகள், தாங்களும் ஆபத்தை உணர்ந்து ஒளிந்துகொள்ளப் பழகுகின்றன.
குஞ்சுகளுக்கு இறக்கைகள் வளர ஆரம்பித்ததும், பறப்பதற்கான பயிற்சி தொடங்குகிறது. சில நேரம் தாய்ப் பறவை குஞ்சை மெதுவாகத் தள்ளிவிட்டுப் பறக்க ஊக்குவிக்கும். குஞ்சுகள் பயத்துடன் சிறகடிக்கத் தொடங்கி, கீழே விழுந்து, மீண்டும் முயற்சி செய்யும். பெற்றோர் பறவைகள் பறந்து, குஞ்சுகளுக்கு வழிகாட்டுகின்றன. இது ஒரு கடினமான பயிற்சிதான், ஆனால் வானில் சுதந்திரமாகப் பறப்பதற்கான முதல் படி இதுதான்.
பறக்கக் கற்றுக்கொண்டதும் குஞ்சுகளுக்கு உணவு தேடும் பயிற்சி ஆரம்பமாகிறது. தாய் அல்லது தந்தை பறவை புழுக்களைத் தோண்டி எடுப்பதையும், பூச்சிகளைப் பிடிப்பதையும் குஞ்சுகளுக்குக் காட்டும். சில நேரம், தானே பிடித்துக் குஞ்சுகளுக்குக் கொடுக்கும். குஞ்சுகள் அதைப் பார்த்து, தாங்களும் முயற்சி செய்யும். ஒவ்வொரு சிறு வெற்றியும் அவற்றுக்கு நம்பிக்கையை அளிக்கும்.
கிளிகள், குருவிகள் போன்று கூட்டமாக வாழும் பறவைகள், குஞ்சுகளுக்குக் கற்றுக் கொடுக்கும் முறை சுவாரசியமானது. பெரியவர்கள் உணவு தேடுவதையும், ஆபத்து வரும்போது ஒன்றுக்கு மற்றொன்று உதவிக்கொள்வதையும் குஞ்சுகள் பார்க்கும். கூட்டத்தில் உள்ள மற்ற பறவை களுடன் விளையாடுவதன் மூலம், சமூகப் பழக்க வழக்கங்களையும், கூட்டு ஒத்துழைப்பு மனப்பான் மையையும் குஞ்சுகள் கற்றுக்கொள்கின்றன.
கூட்டமாக வாழும் சிட்டுக்குருவி, கிளி போன்ற பறவைகள் வட்டமாகப் பறப்பது, ஒரே நேரத்தில் இடம்பெயர்வது போன்றவற்றைப் பார்த்தே கற்றுக் கொள்கின்றன. இது சமூகக் கற்றல் எனப்படுகிறது. ஆந்தைகள், கழுகுகள் போன்று தனியாக வாழும் பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்கு அடிப்படைப் பயிற்சிகளை மட்டும் அளித்துவிட்டு, விரைவில் அவற்றைத் தனியாக வாழப் பழக்குகின்றன.
குஞ்சுகள் தங்கள் சொந்த முயற்சியால் உணவு தேடவும், தங்களைத் தற்காத்துக்கொள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது அவற்றுக்குச் சுதந்திரத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது. கழுகுகள் தங்கள் குஞ்சுகளுக்குப் பறத்தலைக் கற்பிக்க, கூட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பறந்து காட்டுகின்றன. குஞ்சுகளைப் பறக்க ஊக்குவிக்கின்றன.
பறவைகள் முட்டையிடுவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைப்பதில்லை. குஞ்சுகள் பறக்கும் வரை, சில நேரம் அவை தனியாக உணவு தேட ஆரம்பிக்கும் வரைகூட, பெற்றோர் அவற்றைப் பாதுகாத்து, வழிநடத்துகின்றன. பல பறவைகள் பெற்றோரின் உதவியின்றி இயற்கையாகவே கற்றுக்கொள்கின்றன. வலசை செல்லும் பறவைகள் பெற்றோர் இல்லை என்றாலும், இயல்பூக்கம் (instinct) வழியாகத் தங்கள் இடமாற்றப் பயணத்தைத் தொடர்ந்து செய்கின்றன.
பெரும்பாலான பறவைகளில் அம்மா பறவைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குஞ்சுகளுக்கு உணவு தேடும் முறை, பறத்தல், ஆபத்திலிருந்து தப்பிக்கும் வழி போன்றவற்றைச் சொல்லிக் கொடுக்கின்றன. காகங்கள் தங்கள் குஞ்சுகளுக்கு உணவை எப்படிப் பிரித்து உண்ண வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கின்றன.
கிளிகள் குஞ்சுகளுக்கு ஒலி பயிற்சி கொடுத்து, பல்வேறு ஒலிகளைப் பின்பற்ற கற்றுக் கொடுக்கின்றன. கூடு கட்டுதல், பாதுகாப்பு, இரையைக் கொண்டு வருதல் போன்ற பணிகளில் அப்பா பறவைகள் ஈடுபடுகின்றன.
சில பறவை இனங்களில் அப்பா பறவை குஞ்சுகளுக்கு உணவு கொண்டு வருவதில் அதிகக் கவனம் செலுத்தும். அம்மா பறவை குஞ்சுகளைக் குளிரில் இருந்து பாதுகாப்பது, கூட்டைச் சுத்தமாக வைத்திருப்பது போன்ற வேலைகளைச் செய்யும். இன்னும் சில இனங்களில், இரண்டும் சமமாகப் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளும். தங்கள் குஞ்சுகளுக்குக் கற்பித்தல் மூலம் அவற்றை உயிர்வாழ, பறவைகள் தயார்படுத்துகின்றன.
(பறப்போம்)
- writersasibooks@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT