Published : 13 Aug 2025 07:30 AM
Last Updated : 13 Aug 2025 07:30 AM

அணுகுண்டுக்கு ஏன் ‘சிரிக்கும் புத்தர்’ என்று பெயர்? | டிங்குவிடம் கேளுங்கள்

1974ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரான் எனும் இடத்தில் அணுகுண்டை வெடிக்க வைத்தனர். பல உயிர்களைப் பறிக்கக்கூடிய அணுகுண்டு பரிசோதனைக்கு ’புத்தர் சிரித்தார்’ (Smiling Buddha) என்று ஏன் அப்துல் கலாம் பெயரிட்டார், டிங்கு? - ரா. முத்துகுமார், 8-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி. தங்களாச்சேரி. மதுரை.

1974 மே 18 அன்று இந்தியா, பொக்ரானில் முதல் அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இந்த அணுகுண்டு சோதனைக்குச் ’சிரிக்கும் புத்தர்’ என்று பெயரிட்டிருந்தனர். அணுகுண்டு வெடித்த மே 18 புத்தர் பிறந்தநாள்.

அதனால் இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அணுகுண்டு சோதனையை முடித்துவிட்டு, பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அப்போதைய இயக்குநர் ராஜா ராமண்ணா, அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியிடம், ‘புத்தர் சிரித்தர்’ என்று செய்தியைப் பகிர்ந்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது.

அன்பின் வடிவான புத்தரின் பெயரை ஓர் அணுகுண்டு பரிசோதனைக்கு வைத்திருக்க வேண்டாம்தான். ஆனால், சுரங்கம், கால்வாய் தோண்டுவது போன்ற ஆக்கபூர்வப் பணிகளுக்காக இந்தச் சிரிக்கும் புத்தர் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதாக அப்போது சொல்லப்பட்டது.

இந்த அணுகுண்டு சோதனை நடவடிக்கைக்கு அமெரிக்க ராணுவ உளவுத்துறை, ‘ஹேப்பி கிருஷ்ணா’ என்று பெயரிட்டிருந்தது. இந்த முதல் அணுகுண்டு சோதனைத் திட்டத்தில் அப்துல் கலாம் இல்லை. பெயரையும் அவர் சூட்டவில்லை. 1998இல் நடைபெற்ற இரண்டாம் அணுகுண்டு சோதனை திட்டத்தில்தான் அப்துல் கலாம் பங்கேற்றார், முத்துக்குமார்.

மனிதர்கள், விலங்குகளின் ரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழும் அட்டைப்பூச்சி, ரத்தம் கிடைக்காத நேரத்தில் எதை உண்டு உயிர் வாழும், டிங்கு? - ர. தக்ஷ்ணா, 7-ம் வகுப்பு, நாச்சியார் பள்ளி. ஜமீன் ஊத்துக்குளி.

அட்டைப்பூச்சி என்று நாம் சொன்னாலும் அது பூச்சி வகையைச் சேர்ந்தது அல்ல. புழு வகையைச் சேர்ந்தது. அட்டைகளில் நிறைய இனங்கள் உண்டு. அவற்றில் சில இனங்களே ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன. ரத்தம் கிடைக்காதபோதும் பல நாட்களுக்கு உணவே இல்லாமல் வாழும் திறன் பெற்றவை. மற்ற அட்டைகள் மண்புழுக்கள், பூச்சிகளின் லார்வாக்கள், பூச்சிகள், முதுகெலும்பு இல்லாத சிறிய உயிரினங்கள் போன்றவற்றை உட்கொள்கின்றன, தக்ஷ்ணா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x