Published : 06 Aug 2025 07:58 AM
Last Updated : 06 Aug 2025 07:58 AM
“நேற்று வரவேண்டிய கோவேறு கழுதைகள் இன்னும் வந்து சேரவில்லையே?” என்று எல்லையில் பாதுகாப்புக்கு நின்ற ஓர் இந்திய ராணுவ வீரர் கவலையுடன் கேட்டார். “ஒருவேளை எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் சென்றிருக்குமோ?” என்று இன்னொரு ராணுவ வீரர் சந்தேகத்தைக் கிளப்பினார். காலம் காலமாகப் பொதி சுமப்பதற்காகவே நேர்ந்துவிடப்பட்ட ஜீவராசிகள் கழுதைகள். கழுதை பாதி, குதிரை பாதி கலந்து பிறந்த கலவையே கோவேறு கழுதைகள்.
அவை குதிரைகளைவிட அளவில் சிறியவை. கழுதைகளைவிடப் பெரியவை, வலிமையானவை. ஆனால், பொதி சுமப்பத்தில் அவற்றை விஞ்ச ஆள் கிடையாது. போருக்குச் செல்லும்போது ஆயுதங்களையும் உணவுப் பொருள்களையும் சுமந்து செல்வதற்காகக் கோவேறு கழுதைகள் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பல்வேறு தேசங்களின் ராணுவங்களிலும் கோவேறு கழுதைகள் இதற்காகவே பராமரிக்கப்படுகின்றன.
பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே பல்லாயிரக்கணக்கான கோவேறு கழுதைகள் பயன்படுத்தப்பட்டன. இந்தியா சுதந்திரம் பெறும்போது ராணுவத்தில் சுமார் 20,000 கோவேறு கழுதைகள் பணியாற்றிக் கொண்டிருந்தன.
இந்தியாவின் எல்லையாகப் பல கிலோ மீட்டர்களுக்கு வியாபித்து நிற்கும் இமயமலைப் பகுதிகளின் பல்வேறு பிரதேசங்களை அணுகுவதற்குப் பாதைகள் கிடையாது. அங்கே எல்லைகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்குத் தேவையான உணவு முதல் ஆயுதங்கள்வரை கொண்டு செல்வதற்கு உதவியவை கோவேறு கழுதைகள் மட்டுமே.
1962ஆம் ஆண்டில் இந்திய ராணுவப் பணிகளுக்காகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட பெண் கோவேறு கழுதை அது. ஸ்பானிஷ் இனத்தைச் சேர்ந்தது. ராணுவத்தில் இருக்கும் கோவேறு கழுதைகளுக்கு அடையாள எண் (Hoof Number) வழங்குவார்கள். அப்படி அதற்கு வழங்கப்பட்ட எண்: 15328. உணவுப் பொருள்களையும் ஆயுதங்களையும் கடின மான மலைப்பாதைகளிலும், பாதைகளே இல்லாத பாறை நிலங்களிலும், மனிதன் நடக்கக்கூட இயலாத பனிப்பிரதேசங்களிலும் சுமந்து செல்ல அதற்குப் பயிற்சி அளிக்கப் பட்டது.
போர்க்காலங்கள் என்றால் சுமை அதிகம். யாராவது வீரர்கள் காய மடைந்தால்கூட அவர்களைச் சுமந்தபடி ராணுவ மருத்துவமனைக்குப் பத்திரமாகக் கொண்டுசெல்ல வேண்டிய ‘ஆம்புலன்ஸ்’ பணியையும் சேர்த்துச் செய்ய வேண்டும். பனிக் காலம்தான் கொடூரமாக இருக்கும்.
அணுக முடியாத இடங்களில் அமைக்கப் பட்டிருக்கும் ராணுவ முகாம்களுக்குப் பொருள்களைச் சுமந்து செல்லும்போது, அந்தக் கோவேறு கழுதைகளின் உயிருக்கும் உத்தரவாதம் கிடையாது. ஆள் அரவமற்ற இடத்தில் அறியப்படாத தியாகியாகப் பனியில் சமாதியாக வேண்டியதுதான். எதிரிகளின் தாக்குதலில் வீர மரணம் அடையவும் வாய்ப்பு உண்டு.
15328, இந்திய ராணுவத்துக்காகக் குளம்படிகள் தேயத்தேய உழைத்தது. கடும்பனியிலும் கடமை தவறவில்லை. குண்டுகள் வெடிக்கின்றனவா, வெடிக்கட்டும். ஏவுகணைகள் பாய்கின்றனவா, பாயட்டும். என் கடமை சுமந்து செல்பவற்றை உரிய இடத்தில் பாதுகாப்பாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதே! 15328, சக கோவேறு கழுதைகளை வழிநடத்திச் செல்கிறதென்றால் கவலைப்படவே வேண்டாம். எல்லாம் சரியாகச் சென்று சேர்ந்துவிடும் என்று ராணுவத் தினர் அதன்மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
1971. இந்தியா – பாகிஸ்தான் போர் ஆரம்பமாகியிருந்தது. எல்லைப் பகுதி ராணுவ முகாமில் இந்திய வீரர்கள், கோவேறு கழுதைகள் மூலம் வர வேண்டிய உணவுக்காகவும் ஆயுதங்களுக்காகவும் காத்திருந்தார்கள். அவை உரிய நேரத்தில் வரவில்லை. அவர்கள் சந்தேகப்பட்டது போலவே, 15328 மற்றும் சில கோவேறு கழுதைகள் போர்ச் சூழலில், சற்றே வழி மாறி, எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் போய்விட்டன.
பாகிஸ்தான் வீரர்கள் அந்தக் கோவேறு கழுதைகளிடம் இருந்தவற்றை எடுத்துக் கொண்டார்கள். தங்கள் பொருள்களைச் சுமக்க அவற்றைப் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்தார்கள். 15328 கோவேறு கழுதையின் முதுகில் தோட்டாக்கள் நிரம்பிய பெட்டிகளும், ஒரு ‘மிஷின் கன்’னும் வேறு சில பொருள்களும் ஏற்றப்பட்டன.
அது என்ன நினைத்ததோ, தக்க தருணத்துக்காகக் காத்திருந்த 15328, பாகிஸ்தான் வீரர்களிடமிருந்து தப்பித்தது. சுமார் பத்து கிலோ மீட்டர் ஆபத்தான பாதைகளைக் கடந்து பத்திரமாக இந்திய எல்லைக்குள் நுழைந்தது. அங்கே பாதுகாப்புக்கு இருந்த ராணுவ வீரர்கள், அது 15328தான் என்று அடையாளம் கண்டுகொண்டனர்.
எதிரிகளிடம் சிக்கியும், சாதுர்யமாகத் தப்பிவந்த அதன் செயலைக் கண்டு வியந்தனர். இது போன்ற விலங்குகளுக்கான கமாண்டர், 15328-ஐ உரிய முறையில் கௌரவிக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்தார். அப்போது அது நிகழவில்லை.
1987. கமாண்டிங் ஆபிசர் மஜ் சன்னி லால் சர்மா, 15328 கோவேறு கழுதையின் வயது என்னவென்று கேட்டார். 29 இருக்கும் என்றார்கள். பொதுவாக ஒரு கோவேறு கழுதையானது அதிகபட்சம் 20 ஆண்டுகள்வரை பணி செய்யும் உடல் தகுதியுடன் இருக்கும்.
அதையும் தாண்டி 15328, உழைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தார் லால் சர்மா. 53 AT Company ASC என்கிற ராணுவப் பிரிவில்தான் 15328 அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தது. அந்தப் பிரிவின் ‘அடையாளச் சின்னம்’ ஆக்கி அதனைக் கௌரவித்தார். அதன் ஓவியத்துடன் வாழ்த்து அட்டைகளும் அந்த ஆண்டில் வெளியிடப்பட்டன.
1992ஆம் ஆண்டில் 15328, டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அங்கே நடைபெற்ற ராணுவ விழாவில், அதற்கு நீல வண்ண வெல்வெட் கம்பளம் போர்த்தி மரியாதை செய்யப்பட்டது. சரி, எத்தனை நாள்தான் இந்தப் பெருமைமிகு கோவேறு கழுதையை அடையாள எண் சொல்லியே அழைப்பது? இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று அப்போதுதான் யோசிக்கப்பட்டது.
சிக்கிமின் வடக்குப் பகுதியில் அமைந்த ‘பெடோங்’ என்கிற ஊரில்தான் ஆங்கிலோ-பூடான் போர் 1862ஆம் ஆண்டு நடந்தது. அதன் நினைவாக பெடோங்கி (பெண்பால்) என்று பெயர் சூட்டினார்கள். ராணுவத்தின் குறிப்புகளிலும் ‘பெடோங்கி’ என்கிற பெயர் பதிவானது. 1997ஆம் ஆண்டு வரை பெடோங்கி ராணுவத்தில் பணியாற்றியது.
அதிகக் காலம் ராணுவப் பணி செய்த கோவேறு கழுதை என்கிற கின்னஸ் சாதனையைச் சொந்தமாக்கிக் கொண்டது. ஓய்வுக்குப் பின் பரேலியில் சமதளமான பரப்பில் புல்வெளிகளில் அமைதியாக மேய்ந்தபடி தன் இறுதிக் காலத்தைக் கழித்தது. 1998, மார்ச் 25 அன்று மரணமடைந்தது. இந்திய ராணுவத்தில் பணியாற்றிய எந்த ஒரு கோவேறு கழுதையும் பெடோங்கி அளவுக்குப் புகழைச் சம்பாதித்ததில்லை.
(சந்திப்போம்)
- writermugil@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT