Published : 06 Aug 2025 07:49 AM
Last Updated : 06 Aug 2025 07:49 AM
காட்டில் ஒரு முயல் குட்டி இரை தேடி அலைந்தது. அப்போது சிறுத்தை ஒன்று பாய்ந்துவந்தது. ‘ஐயோ... சிக்கிவிட்டோம். இனி நம் உயிருக்கு ஆபத்து’ என்று நினைத்த முயல், அம்மா சொன்ன அறிவுரையை நினைத்துப் பார்த்தது. ‘அச்சம்தான் இறப்பைவிடக் கொடியது.
எதற்கும் அஞ்சாதே. ஆபத்து காலத்தில் சாமர்த்தியமாகச் செயல்பட வேண்டும். அதுதான் நம்மைப் போன்ற எளியவர்களுக்குப் பாதுகாப்பு.’ முயல் யோசித்தது. இரை தேடச் சென்ற தாய் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. தப்பிக்கவும் வழி இல்லை. அம்மா சொன்னது போலவே முயற்சி செய்து பார்ப்போம் என்று முடிவெடுத்தது.
“சிறுத்தையே, ரொம்பப் பசியோ?” என்று கேட்டது முயல். “ஆமாம். இப்போதுதான் நீ கிடைத்து விட்டாயே!” என்றது சிறுத்தை. “ஒரு வேண்டுகோள். நான் உங்களுக்கு உணவாகப் போகிறேன் என்று ஆனந்தம் அடைகிறேன். ஆனால், அதற்கு முன் நான் கண்ட உண்மையைக் கூறிவிடுகிறேன்” என்றது முயல். “என்ன கண்டாய்?” “புலி ஒன்று வாயில் சிறுத்தைக் குட்டியைக் கவ்விக் கொண்டு ஓடியது.” “என்ன, புலியா? அதெல்லாம் செய்யாது.”
“நான் இப்போதுதான் பார்த்தேன்.” “அது சிறுத்தைக் குட்டிதான் என்று உனக்குத் தெரியுமா?” “ஓ, நன்றாகத் தெரியும். நானே ஒருமுறை அதனுடன் விளையாடி இருக்கிறேன்.” “நீ எப்போது விளையாடினாய்?” “நீங்கள் இரை தேடச் சென்ற நேரம் உங்கள் பின்னாலேயே அந்தக் குட்டியும் வந்திருக்கிறது.
என்னைக் கண்டதும் அதுக்கு அவ்வளவு உற்சாகம். நாங்கள் இருவரும் சேர்ந்து விளையாடினோம். ஆனால்…?” என்று சொல்லிவிட்டு முயல் அழுதது. “ஏன் அழுகிறாய்?” “என் நண்பன் இன்று ஒரு புலிக்கு உணவாகிறானே என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. அதேநேரம் ஒரு மகிழ்ச்சி எனக்கு” என்றது முயல்.
“என்ன மகிழ்ச்சி?” “என் நண்பன் இரையாகப் போகிறான். நானும் உங்களுக்கு இரையாகப் போகிறேன் என்கிற மகிழ்ச்சிதான்.” முயல் சொல்வது உண்மையோ என்று யோசித்தது சிறுத்தை. “என் அம்மா இருந்திருந்தால் உங்களுடன் போராடி, என்னை விடுவிக்கப் பார்த்திருப்பார். ஆனால், நீங்கள் உங்கள் குட்டியைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறீர்கள். இதுதான் முயலுக்கும் சிறுத்தைக்கும் உள்ள வித்தியாசம் போல் இருக்கிறது” என்று அழகாகப் பேசியது முயல்.
“ஏய், நான் என்ன அவ்வளவு அற்பமானவளா? எங்கே அந்தப் புலி?” என்று கோபத்துடன் கேட்டது சிறுத்தை. “கோபம் வேண்டாம். இப்போது சென்றாலும் குட்டியைக் காப்பாற்றி விடலாம். புலி மிகவும் மெதுவாகத்தான் அந்தப் பக்கம் சென்றது” என்று சொல்லிவிட்டு, முயல் அழுதது. “ஐயோ, ஏன் அழுகிறாய்?” “புலியின் வாயில் இருந்த போதும் உங்கள் குட்டி என்னைப் பார்த்து, டாடா காட்டியது. அவன் அன்புக்கு என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லையே என்று அழுகிறேன்” என்றது முயல்.
“அப்படியா, இதோ புறப்பட்டு விட்டேன். என் வேகம் உனக்குத் தெரியுமல்லவா? மெதுவாகச் சென்ற புலியை உடனே பிடிக்கிறேன். இன்று அதுவா, நானா என்று பார்த்துவிடலாம். தகவல் சொன்ன உனக்கு என்ன செய்வது என்று எனக்குத் தெரிய வில்லை.” “எனக்கு ஒன்றும் செய்ய வேண்டாம். முதலில் குட்டியின் உயிரைக் காப்பாற் றுங்கள். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்து.” சிறுத்தை வேகமாக ஓடியது.
தப்பித்த மகிழ்ச்சியில் பொந்துக்குச் சென்றது முயல் குட்டி. “எங்கே சென்றாய்? உன்னைத் தேடிக் கொண்டிருந்தேன்” என்றது அம்மா முயல். நடந்த விஷங்களை ஆர்வத்துடன் சொன்னது முயல் குட்டி. “அடடா! உன் அறிவைக் கண்டு வியக்கிறேன்.
முதல் முறை ஒரு பெரிய ஆபத்திலிருந்து நீ தப்பிவிட்டாய்! இந்தக் கேரட்களைச் சாப்பிடு” என்று குட்டியின் தலையை வருடிக்கொடுத்தது அம்மா முயல். “நான் தப்பிக்கக் காரணமே நீங்க சொன்ன அறிவுரைதான்” என்று சொல்லிக்கொண்டே கேரட்டைக் கடித்தது முயல் குட்டி.
- முருகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT