Published : 01 Aug 2025 10:31 AM
Last Updated : 01 Aug 2025 10:31 AM
உயிரினங்களின் மொழி - 30
சிறுத்தைகள் ஒன்றோடு மற்றொன்று தொடர்புகொள்ள ஒலி, உடல் அசைவு, வாசனை போன்ற வெவ்வேறு வழிகளைப் பயன்படுத்துகின்றன.
சிறுத்தைகளின் கர்ஜனை சிங்கம், புலிகளிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. கேட்பதற்குக் கரடுமுரடான ஒலியாக இருக்கும். இது ’இரத்’ என்கிற ஒலியை ஒத்திருக்கிறது. இந்த ஒலி மூன்று முதல் ஐந்து விநாடிகள் வரை நீடிக்கும். இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை கேட்கும்.
வனவிலங்கியல் ஆராய்ச்சியின்படி, ஆண் சிறுத்தைகள் தங்கள் பிரதேசத்தை அறிவிக்க மாலையிலும் அதிகாலையிலும் அதிகம் கர்ஜிக்கின்றன.
வீட்டுப் பூனைகளைப் போலவே சிறுத்தைகளும் ’புர்ர்’ ஒலி எழுப்புகின்றன. ஆனால், அவற்றின் புர்ர் மிகவும் ஆழமானது, பலமானது. இது தாய்-குட்டி உறவில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒரு தாய் சிறுத்தையின் புர்ர் அதிர்வு, குட்டிகளுக்கு ஆறுதல், பாதுகாப்பு உணர்வை வழங்குகிறது. குட்டிகள் இந்த அதிர்வுகளை உணர்ந்து தாயைக் கண்டறிகின்றன.
ஒலிகளைப் போலவே வாலும் சிறுத்தையின் தொடர்பு மொழியில் முக்கியமானது. சிறுத்தையின் வால் அதன் மன நிலையைத் துல்லியமாகக் காட்டும். அதன் வால் நிமிர்ந்து நேராக இருந்தால், தன்னம்பிக்கையுடன் இருக்கிறது என்று அர்த்தம். அதே வாலை வேகமாக அசைத்தால் எரிச்சலுடன் இருக்கிறது அல்லது கவனமாக இருக்கிறது என்று பொருள். சிறுத்தைகள் தங்கள் வாலின் நுனியைப் பல்வேறு விதங்களில் அசைக்கின்றன . வேகமாக அசைத்தால், அவை எரிச்சல் மனநிலையைக் குறிக்கும். மெதுவாகச் சுருட்டிச் சென்றால், அது குட்டிகளுக்கு வழிகாட்டும் சமிக்ஞை.
வாலைப் போலவே காதுகளும் செய்தியைப் பரிமாறிக்கொள்ள உதவுகின்றன. காதுகள் எந்த நிலையில் எப்படி அசைகின்றன என்பது முக்கியம். காதுகளைப் பின்னோக்கி மடித்தால், ஆக்கிரமிப்பைக் குறிக்கும். காதுகளை முன்னோக்கி நீட்டினால் கவனத்தையும் ஆர்வத்தையும் குறிக்கும்.
மற்ற விலங்குகளுக்கு இருக்கும் வாசனைச் சுரப்பிகள் போல் சிறுத்தைகளுக்கும் வாசனைச் சுரப்பிகள் உண்டு. அவை முகம், கால்பாதங்கள், வாலின் அடிப்பகுதியில் இருக்கும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வாசனையின் அடையாளமாகச் செயல்படுகிறது.
ஒரு சிறுத்தையின் வாசனை அடையாளம் வாரக்கணக்கில்கூட நீடிக்கும். இதன் மூலம் ஆரோக்கியம், இனப்பெருக்க நிலை, பிரதேச உரிமை பற்றிய குறிப்புகளை வெளிப்படுத்துகின்றன. சிறுத்தைகளில் ஆண்கள், பெண்களைவிட அதிகமாக வாசனைகளை வெளிப்படுத்துகின்றன.
சிறுத்தைகளின் கண்கள் மூலம் அது என்ன மனநிலையில் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். நீண்ட நேரம், கண்களை அசைக்காமல் வெறித்துப் பார்த்தால், சவாலான செயலுக்குத் தயாராகிறது என்று அர்த்தம். அதே மெதுவாகக் கண்களை மூடித் திறந்தால் அமைதியாக, நிம்மதியாக இருக்கிறது என்று பொருள்.
அதுமட்டுமன்றி, பாந்தேரா பார்டஸ் ஆராய்ச்சி மையத்தின் கண்டறிதலின்படி, சிறுத்தைகள் தங்கள் கண்களின் பளபளப்பை மாற்றுவதன் மூலம் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. மனிதர்களுக்குக் கேட்காத குறைந்த அதிர்வெண் ஒலிகளைச் சிறுத்தைகள் உருவாக்கும். இந்த ’இன்ஃப்ராசவுண்ட்’ ஒலிகள் நீண்ட தூரம் பயணித்து மற்ற சிறுத்தைகளுக்குச் செய்திகளை அனுப்புகின்றன.
மரப்பட்டைகளில் நகம் கீறுவது வெறும் நகம் கூர்மைப்படுத்துதல் மட்டுமல்ல. இது ஒரு வகையான ’செய்திப் பலகை’ போல் செயல்படுகிறது. அதில் அவற்றின் அளவு, பலம், இருப்பிடம் போன்ற தகவல்கள் அடங்கியுள்ளன.
தாய் சிறுத்தைகள் தங்கள் குட்டிகளுடன் எட்டு வெவ்வேறு வகையான ஒலிகள் மூலம் தொடர்பு கொள்கின்றன. அன்பாகவும் ஆறுதலாகவும் இருக்கும் போது மென்மையான ஒலியை எழுப்புகின்றன. அதுவே சத்தமாகவும் தீர்க்கமாகவும் கர்ஜித்தால் ஆபத்து வருகிறது என்பதற்கான எச்சரிக்கை. மெதுவாகவும் அதே நேரத்தில் வலுவாகவும் சத்தம் வந்தால், என் பின்னாடி வா என்று அர்த்தம்.
சிறுத்தைகள் தங்கள் பிரதேசத்தை விரிவான தொடர்பு வழிமுறைகள் மூலம் பராமரிக்கின்றன. ஆண் சிறுத்தைகளின் பிரதேசம் சராசரியாக 30-78 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. பெண் சிறுத்தைகளின் பிரதேசம் 15-30 சதுர கிலோமீட்டர்.
இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் (2019) ஆராய்ச்சியின்படி, மழைக்காலத்தில் சிறுத்தைகளின் தொடர்பு நடவடிக்கைகள் நாற்பது சதவீதம் அதிகரிக்கின்றன. இதற்குக் காரணம் மழை ஒலி அவற்றின் பிற ஒலி சமிக்ஞைகளை மறைப்பதால், அவை அதிக முயற்சி எடுக்க வேண்டியுள்ளது. இன்றைய நவீன தொழில்நுட்பம் சிறுத்தைகளின் தொடர்பு மொழியை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு : writernaseema@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT