Published : 30 Jul 2025 07:30 AM
Last Updated : 30 Jul 2025 07:30 AM
நியூயார்க் மாகாணத்தில் அல்பெனி நகரத்தில் வசித்த ஓர் அஞ்சல் ஊழியரின் வளர்ப்பு நாய் அது. 1887ஆம் ஆண்டு பிறந்த அதற்கு வைக்கப்பட்ட பெயர் ஓனி (Owney). தன் எஜமானர் அவ்வப்போது வீட்டுக்கு எடுத்துவரும் அஞ்சல் மூட்டைகளின் வாசம் ஓனிக்குப் பிடித்திருந்தது. அந்த அஞ்சல் மூட்டைகளின் மீது சொகுசாகப் படுத்து உறங்குவது அதன் வழக்கமாகிப் போனது.
ஒருநாள் அஞ்சல் மூட்டைகளை எடுத்துக் கொண்டு அலுவலகத்துக்குப் புறப்பட்டார் எஜமானர். ஓனியும் அவர் பின்னாலேயே ஓடியது. அங்கே ஏகப்பட்ட அஞ்சல் மூட்டைகள் இருப்பதைக் கண்டு குஷியானது. அதனால், எஜமானரோடு அடிக்கடி ஓனியும் அஞ்சல் அலுவலகத்துக்குச் செல்லத் தொடங்கியது. அங்குள்ளவர்களுடன் பழகி அவர்களின் செல்லமானது.
ஒரு கட்டத்தில் அந்த எஜமானர் அதை விட்டுவிட்டு வேறு ஊருக்கு மாறிப் போய்விட்டார். ஓனி, அதற்காக வருத்தப்படவில்லை. இனி என் வீடு இந்த அலுவலகம்தான் என்று அங்கேயே தங்கிக்கொண்டது. அங்கிருந்த மற்ற ஊழியர்கள், ஓனியைப் பாசத்துடன் பார்த்துக் கொண்டனர்.
இனி, இரவும் பகலும் எந்நேரமும் அஞ்சல் மூட்டைகள் மீதே தூங்கலாம்! அந்த ஆபிசிலிருந்து கடிதங்களை ரயில் நிலையத்துக்கு ஏற்றிச் செல்ல ஒரு வாகனம் தினமும் வந்து போனது. ஓனி ஒருநாள் அந்த வாகனத்தில் ஏறிக்கொண்டது. பரவாயில்லை, வரட்டும் என்று அழைத்துச் சென்றார்கள். அப்படி வாகனத்தில் பயணம் செய்வது ஓனிக்கு மிகவும் பிடித்துப் போனது. ரயில் நிலையத்தி லிருந்த அஞ்சல் அலுவலகத்தில் மூட்டைகள் இறக்கப்பட்டன. அங்கிருந்து சரக்கு ரயிலில் அவை ஏற்றப்பட்டன.
ஓனி தன் வாழ்வில் முதல் முறையாக ரயிலைக் கண்டது. அட! இது மிகப்பெரிய வாகனமாக இருக்கிறதே! இதற்குள்ளும் நமக்குப் பிடித்த மூட்டைகளை ஏற்றுகிறார்களே! ஓனியும் ரயில் பெட்டியில் ஏறிக் கொண்டது. அஞ்சல் மூட்டைகள் மீது உட்கார்ந்து கொண்டது. இறங்க மாட்டேன் என்று அடம்பிடித்தது. சரி, போகட்டும் என்று விட்டுவிட்டார்கள். நியூயார்க் நகரத்துக்குச் சென்ற ரயில் மீண்டும் அல்பெனி நகரத்துக்கு வந்தபோது, ஓனியும் அஞ்சல் மூட்டைகள் மீது அமர்ந்து சமர்த்தாக வந்துசேர்ந்தது.
அதிலிருந்து ரயில் பெட்டியில் அஞ்சல் மூட்டைகளுக்குக் காவலாக ஓனி பயணம் செய்ய ஆரம்பித்தது. அஞ்சல் ஊழியர்களைத் தவிர, வேறு யாராவது மூட்டைகளை எடுக்க வந்தால் ஓனி விடவே விடாது. கடிப்பதற்குப் பாய்ந்துவிடும். அந்தக் காலத்தில் ரயிலில் கொள்ளை நடைபெறுவது சகஜம் என்பதால், ஓனியின் சேவை தேவை என்று அஞ்சல் ஊழியர்களும் ரயில்வே ஊழியர்களும் அதைச் சுதந்திரமாக விட்டுவிட்டனர்.
அல்பெனியிலிருந்து பாஸ்டன், நியூயார்க், சிகாகோ என்று வெவ்வேறு திசைகளில் இருக்கும் நகரங்களுக்குத் அஞ்சல் மூட்டைகள் அனுப்பப்பட்டன. எந்த ரயிலில் ‘காவலுக்குச்’ செல்ல வேண்டும் என்பதை ஓனியே முடிவு செய்து கொண்டது. செல்லும் இடங்களில் எல்லாம் ரயில்வே ஊழியர்களின், அஞ்சல் ஊழியர்களின் செல்லமாகவும் வலம்வந்தது.ஒருமுறை ரயில் பெட்டியில் கடிதங்களை எடுக்க வந்த ஊழியர், மூட்டை ஒன்று குறைவதைக் கண்டார். வழியில் கீழே விழுந்திருக்குமோ என்று தேடிச் சென்றார். ஊருக்கு வெளியே தண்டவாளத்தில் அஞ்சல் மூட்டையோடு ஓனியும் காவலுக்குக் கடமை உணர்வுடன் நின்று கொண்டிருந்தது.
இப்படிப்பட்ட நேர்மையான ஊழியரான ஓனியை, அஞ்சல் துறையினர் கௌரவிக்க விரும்பினார்கள். Owney, Post Office, Albany, N.Y. என்று பொறிக்கப்பட்ட பெல்ட் ஒன்றை அதன் கழுத்தில் மாட்டிவிட்டார்கள். ரயிலில் அஞ்சல் மூட்டைகளின் காவலராக ஓனி தன் பணியை மிகச் சரியாகச் செய்தது. அமெரிக்கா முழுவதும் அதன் புகழ் பரவியது.
‘ஓனி வந்துச்சா?’, ‘அது ரெண்டு நாள் முன்னாடி பாஸ்டன் ரயில்ல போச்சு. அங்க இருந்து வேற எந்த ரயிலுக்கு மாறிச்சுனு தெரில. நாளைக்கு நியூயார்க்ல இருந்து வர்ற ரயில்ல இங்க வருதான்னு பார்ப்போம்’ என்று ஊழியர்கள் அதன் வருகைக்காக ஆவலுடன் காத்திருப்பதும் தொடர்ந்தது. சில நேரம் அது வாரக்கணக்கில் வராமல் போனால், ஐயோ... செல்ல ஓனி தொலைந்துவிட்டதோ, ஏதாவது விபத்தில் சிக்கி இறந்துவிட்டதோ என்று கவலைப்பட்டனர். ஓனியை மீண்டும் பார்க்கும்போது கொஞ்சி, கொண்டாடித் தீர்த்தனர்.
1895, ஆகஸ்ட் 19 அன்று உலக நல்லெண்ணச் சுற்றுப்பயணம் ஒன்றுக்காகப் புறப்பட்ட ரயிலில் ஓனி ஏற்றிவிடப்பட்டது. அதற்கெனத் தனி சூட்கேஸ். அதனுள் போர்வை, சீப்பு, பிரஷ் எல்லாமே வைக்கப்பட்டிருந்தன. ரயிலிலும் கப்பலிலும் ஓனி கண்டங்கள் தாண்டிச் சென்றது. வாஷிங்டனில் தொடங்கி, ஆசியாவில் பல நாடுகள், ஐரோப்பிய நாடுகள் எல்லாம் கடந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 23 அன்று நியூயார்க் வந்து சேர்ந்தது ஓனி.
அந்த உலகப் பயணத்துக்குப் பிறகு ஓனியின் புகழ் மேலும் பரவியது. அதைப் பற்றி எழுதாத பத்திரி கைகளே இல்லை. ஏகப்பட்ட பதக்கங்களையும் கௌரவங்களையும் பெற்று, சூப்பர் ஸ்டார் ஓனியாக உயர்ந்தது! அது தன் வாழ்நாளில் வாங்கிய பதக்கங் களைப் (ஆயிரத்துக்கும் மேல்) பெருமையுடன் குத்திக்கொள்ள அதன் உடலில் இடமே இல்லை!
ஓனியின் இறுதிக் காலம்தான் சோகமானது. 1897ஆம் ஆண்டு. ஓனிக்கு வயதான காரணத்தினால் ஒரு கண் தெரியவில்லை. அப்போது ஓஹையோ மாகாணத்தின் டொலடோவுக்கு ரயிலில் ஓனி சென்றபோது, அங்கிருந்த அஞ்சல் ஊழியர் அதனைச் சங்கிலியில் கட்டிப் போட்டார். அதுவரை அப்படி அடக்குமுறைகளைச் சந்தித்திராத ஓனி கோபம் கொண்டது. ஊழியரைக் கடித்தது. இதனால் கோபமடைந்த போஸ்ட் மாஸ்டர் ஓனியைச் சுடச் சொன்னார். அது கொல்லப்பட்டது. இந்தச் சம்பவத்துக்கான சரியான ஆதாரம் கிடையாது.
‘பாடம்’ செய்யப்பட்ட ஓனியின் உடல், வாஷிங்டனின் தேசிய அஞ்சலக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அங்கே ஓனி சம்பந்தப்பட்ட பல்வேறு பொருள்களும் பாதுகாக்கப்படுகின்றன. ஓனிக்கெனப் பிரத்யேக அஞ்சல் தலை 2011ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஓனி, தன் வாழ்நாளில் பயணம் செய்த தொலைவு எவ்வளவு தெரியுமா? சுமார் 2,30,000 கிலோ மீட்டர்!
(சந்திப்போம்)
- writermugil@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT