Published : 30 Jul 2025 07:21 AM
Last Updated : 30 Jul 2025 07:21 AM
பறவைகள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளவும், உணவைத் தேடவும், பிரச்சினை களைச் சரிசெய்யவும் மிகவும் புத்திசாலித் தனமாகச் செயல் படுகின்றன. பறவைகளின் புத்திசாலித்தனத்தைப் பல வகையாகப் பிரிக்கலாம். அவற்றில் பிரச்சினையைப் பகுப்பாய்வு செய்து தீர்வு காணும் திறன் முக்கியமானது.
கருவிகளை கண்டறியும் திறனும் அதனைப் பயன்படுத்துதலும் அடுத்து வருகிறது. சில பறவைகள் குழுவாகவோ, மனிதருடன் இணைந்தோ செயல்படும் திறனைக் கொண்டுள்ளன. அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்கிற திறமையும் பறவை களுக்கு இருக்கிறது.
நகர்ப்புற பறவைகளில் காகம் புத்திசாலி பறவையாக இருக்கிறது. ஜாடியில் கீழே இருக்கும் தண்ணீரை மேலே கொண்டுவர கற்களை இடும் காகம், கதையில் மட்டும் இல்லை. நிஜத்திலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. காகங்கள் கொட்டைகளை உடைக்கச் சாலையில் வண்டிகள் ஓடும் பகுதியில் வைத்துவிடுகின்றன. சக்கரம் கொட்டைகளின் மீது ஏறி உடைந்த உடன் எடுத்துக் கொள்கின்றன.
இதற்காகக் கொட்டைகள் உடையும் வரை தூரத்தில் காத்திருக்கின்றன. நெருக்கமான சாலைகளில் அல்லாமல், சிவப்பு விளக்கு இருக்கும் இடத்தில் வண்டி நிற்கும் என்பதை அறிந்து இதைச் செய்கின்றன. கலிடோனியா தீவில் காணப்படும் காகம் ‘நியூ கலிடோனியன் காகம்’ என்று அழைக்கப்படுகிறது.
இது மற்ற காக இனங்களைவிடப் புத்திசாலித்தனத்தில் சிறந்து விளங்குகிறது. இந்தக் காகங்களுக்குப் புழுக்களைப் பிடிக்கும். ஆனால், புழுக்கள் மரப்பட்டைக்குள் ஒளிந்திருக்கும். ஒரு சின்ன குச்சியை எடுத்து வளைத்து, கொக்கி போன்று உருவாக்கும். அந்தக் கொக்கியை மரப்பட்டைக்குள் விட்டு புழுவை வெளியே எடுத்துச் சாப்பிடும்.
மேலும் இந்தக் காகங்கள் ஒரு வேலையைச் செய்வதற்குப் பல கருவிகளைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும். முதலில் ஒரு நீளமான குச்சியால் ஒரு புழுவைக் கொஞ்ச தூரத்துக்கு இழுக்கும். பின்னர் ஒரு சிறிய குச்சியால் அதை முழுதாக வெளியில இழுத்துச் சாப்பிடும்.
நியூ கலிடோனியன் காகங்கள் கருவிகளைப் பயன்படுத்துவதில் திறமை வாய்ந்தவை. மனிதர்களைத் தவிர வேறெந்த உயிரினமும் கருவிகளைப் பயன்படுத்துவதில் இவ்வளவு நுணுக்கத்தைக் கொண்டவை அல்ல. ஆப்ரிக்கத் தேன் காட்டி (Honeyguide) மனிதர்களைத் தேன் கூடுகளுக்கு அழைத்துச் செல்கிறது. மனிதர்கள் அந்தத் தேன்கூட்டை உடைத்துத் தேனை எடுக்க, தேனடையையும் சிறிய பூச்சிகளையும் தேன் காட்டி சாப்பிடுகிறது.
நான்கு விதமான ஒலிகளைக் கொண்டு மனிதர்கள் இந்தப் பறவையுடன் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கின்றனர். இது மனிதனுடன் ஒத்துழைக்கக் கற்றுக்கொண்டுள்ளது. Hank, Green Heron போன்ற பறவைகளுக்கு உணவு இட்டாலும் அவை நேரடியாக உண்ணாது. உணவைத் தண்ணீரில் போட்டு, மீன்களுக்கு உணவளிக்கும். தனக்குத் தேவையான மீன் சாப்பிட வரும்வரை காத்திருந்து, பிடிக்கும்.
இப்படி உணவை ஒரு கருவியாக இவை பயன்படுத்துகின்றன. நீல அழகி (Blue Jay) பறவை தேவைக்கு அதிகமாக உணவு கிடைக்கும் போது, அவற்றை ஓர் இடத்தில் புதைத்து வைக்கிறது. உணவை எங்கே தோம் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்கிறது. சில நேரம் மற்ற பறவைகளை ஏமாற்றுவதற்காக வேறு இடத்தில் தோண்டி விட்டு, மீண்டும் முதல் இடத்திலேயே உணவை ஒளித்து வைத்துவிடுவதும் உண்டு.
காட்டுப் புறாக்கள் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரம் பயணித்தாலும், மீண்டும் தங்கள் கூடுகளைச் சரியாகக் கண்டறிகின்றன. புறாக்களின் வழி அறியும் திறனால் பழங்காலத்தில் செய்திகளை அவற்றின் கால்களில் கட்டி அனுப்பினார்கள்.
மரங்கொத்திப் பறவைகள் தங்கள் நாக்கைப் பயன்படுத்திப் பூச்சிகளைப் பிடிக்கின்றன. மரங்கொத்தி மரத்தில் பூச்சிகள் இருப்பதை ஒலி மூலம் கண்டறிகிறது. அது மரத்தைத் தட்டும்போது, உள்ளே இருக்கும் பூச்சிகள் ஒலி எழுப்பினால், மரங்கொத்தி துல்லியமாக அந்த இடத்தில் துளையிடுகிறது.
சில மரங்கொத்திகள் மரத்தில் துளையிட்டு, உணவைச் சேமித்து வைக்கின்றன. கூழைக்கடாக்கள் கூட்டமாகச் சேர்ந்து மீன்களை ஓர் இடத்தில் திரட்டுகின்றன. பின்னர் ஒரே நேரத்தில் தண்ணீரில் மூழ்கி மீன்களைப் பிடிக்கின்றன. சில கடல் பறவைகள் கடினமான மட்டிகளுக்குள் (Clam) இருக்கும் மெல்லுடலிகளை உண்ண அவற்றை உயரத்தில் இருந்து பாறைகளின் மீது போடுகின்றன. அது உடையும் வரை பல முறை போட்டுக்கொண்டே இருக்கின்றன.
கிளிகள் சில நேரம் தங்கள் அலகை ஒரு கருவி போலப் பயன்படுத்துகின்றன. கிளி ஒரு கொட்டையைக் கல் மீது தட்டி உடைக்கிறது. பூட்டிய பெட்டியில் இருக்கும் உணவை எளிதாகத் திறந்து எடுத்துவிடுகிறது. பறவைகளின் மூளையில் அதிகமாக இருக்கும் நியூரான்கள் சிந்திக்கவும் நினைவில் வைத்திருக்கவும் உதவுகின்றன.
பல பறவைகள் மனிதர்களை இனம் கண்டுகொள்ளும் திறன் படைத்தவை. நாம் பறவைகளிடம் எப்படிப் பழகுகிறோம், அதனால் பறவைகளுக்கு ஏற்படும் அனுபவங்களைப் பொறுத்து இது அமைகிறது.
தினமும் உணவு இடும் நபரா, குரல், தோற்றம் எப்படி இருக்கிறது என்பன போன்றவற்றை நினைவில் கொள்கின்றன. முகமூடி அணிந்த நபர் ஒருமுறை பிடிக்க வந்தால், முகமூடி அணிந்த நபர்கள் பக்கம் போகாமல் இருக்கவும் அவை தெரிந்து வைத்திருக்கின்றன.
காகங்கள் குறிப்பிட்ட மனிதர்களின் முகங்களை நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்திருக்கின்றன. காகங்களைச் சில மனிதர்கள் வேட்டையாடியதை நினைவில் கொண்டு அவர்களைப் பார்த்த உடனேயே எச்சரிக்கை ஒலி எழுப்பும் காகங்கள் இருக்கின்றன. தீங்கு விளைவிக்காத மனிதர்களை அவை பயமின்றி நெருங்கி வருகின்றன. எல்லாப் பறவைகளும் எல்லா மனிதர்களையும் அடையாளம் கண்டறிவதில்லை.
கிளிகள் போன்ற பறவைகள் மனிதர்களின் பேச்சைப் பின்பற்றி, பொருள்கள் அல்லது செயல்களுடன் சொற்களை இணைதுப் பார்க்கக் கற்றுக் கொண்டாலும், முழுமையான புரிதல் இருக்காது. அவை ஒலிகளைப் பின்பற்றி, பயிற்சி, அனுபவத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சூழல்களில் அவற்றைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்கின்றன.
(பறப்போம்)
- writersasibooks@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT