Last Updated : 25 Jul, 2025 01:22 PM

 

Published : 25 Jul 2025 01:22 PM
Last Updated : 25 Jul 2025 01:22 PM

பென்குயின்கள் எவ்வாறு தொடர்புகொள்கின்றன?

உயிரினங்களின் மொழி- 29

பனிப் பிரதேசங்களில் பென்குயின்கள் கூட்டமாக வாழ்கின்றன. அவை ஒன்றோடு மற்றொன்று தொடர்பு கொள்ள ஒலிகளைப் பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு பென்குயினின் ஒலியும் தனித்துவமானது. ஆயிரம் பென்குயின்கள் இருந்தாலும் தாய் தனது குஞ்சை குரல் மூலம் அடையாளம் கண்டுகொள்ளும்.

2019ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்கா நெல்சன் மண்டேலா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஆன்ட்ரியா தீபால்ட், பென்குயின்களின் வேட்டை நடத்தையைக் கவனிக்கும்போது, நீருக்கடியில் ஒலி எழுப்புவதை முதல் முறை பதிவுசெய்தார். சிறிய படக்கருவிகளைப் பொருத்தி ஆராய்ச்சி செய்தபோது, 203 குரல்கள் பதிவு செய்யப்பட்டன. சராசரியாக 0.06 விநாடிகள் மட்டுமே அவை நீடித்தன. இவை நிலத்தில் எழுப்பும் குரல்களைவிட மிகக் குறுகிய நேரம் கொண்டவையாக இருந்தன.

ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட குரல்கள், வேகமாக நீந்துவதற்குச் சற்று முன்னதாகவோ அல்லது மீன்களைப் பிடிப்பதற்குச் சற்று முன்னதாகவோ எழுப்பப்பட்டவைதான் என்பதைக் கண்டறிந்தனர்.

பென்குயின்களுக்குப் பிற பறவைகள் அல்லது மனிதர்களின் குரல் நாணைப் போன்ற அமைப்பு இல்லை. ‘சிரின்க்ஸ்’ என்னும் உறுப்பு குரல் நாணைப் போல் செயல்படுகிறது. அதன் வழியாகச் செல்லும் காற்றில் கிட்டத்தட்ட நூறு சதவீதத்தையும் பயன்படுத்தும் திறனுடையது. நாம் வெளியேற்றும் காற்றில் இரண்டு சதவீதத்தை மட்டுமே பேசுவதற்குப் பயன்படுத்துகிறோம்.

அரச பென்குயின்களின் சிரின்க்ஸ், இரு தனிக் குரல் மூலங்களைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக அவை ஒரே நேரத்தில் இரு வெவ்வேறு அதிர்வெண்களில் ஒலியெழுப்பும். ஆப்ரிக்கப் பென்குயின்களின் ஒலி கழுதையின் கத்தலை ஒத்ததாக இருக்கும். ஏற்ற இறக்கங்களோடு கரகரப்புடன் காணப்படும்.

பென்குயின்களின் குரலை மூன்று முக்கிய வகைகளாக விஞ்ஞானிகள் பிரித்துள்ளனர்.

கூட்டத்தில் தன் இணையையோ அல்லது குஞ்சுகளையோ தொடர்புகொள்ள, அவை தொடர்ந்து எழுப்பும் ஒலி முதல் வகை. இதைத் தொடர்புக் குரல் என்று அழைக்கின்றனர். அரச பென்குயின்களின் தொடர்புக் குரலை ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை கேட்க முடியும்.

இரண்டாவதாகக் காட்சிக் குரல். அதாவது இந்தச் சத்தத்தின் மூலம் ஒரு பென்குயின் தனது எல்லை, நிலை, தனிப்பட்ட அடையாளத்தைச் சொல்லிவிடுகிறது.

மூன்றாவதாக அச்சுறுத்தல் குரல். பிராந்தியத்தைப் பாதுகாக்கவும், வேட்டையாடும் விலங்குகள் பற்றி மற்ற பென்குயின்களுக்கு எச்சரிக்கை செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

அதுமட்டுமன்றி, 2014ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் ஆப்ரிக்கப் பென்குயின்கள் நான்கு வெவ்வேறு குரல் வகைகளையும், குஞ்சுகள் மற்றும் இளம் பென்குயின்கள் இருவகை ஒலிகளையும் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது.

நான்கு அடிப்படைக் குரல்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் பென்குயின்களால் எழுப்பப்படுகின்றன. முதலாவதாகத் தொடர்பு கொள்ளும் போது எழுப்பும் குரல். இரண்டாவதாக ஆக்கிரமிப்பு சூழல்களில் பயன்படும் குரல். மூன்றாவதாக இனப்பெருக்கக் காலத்தில் தனிப்பறவைகள் பாடும் பாடல். நான்காவதாக ஜோடிகள் ஒன்றாகச் சேர்ந்து பாடும் பாடல்.

குஞ்சுகள் எழுப்பும் ஒலிகள் கெஞ்சலாகவும் கொஞ்சலாகவும் இருக்கும். பால் குடிக்கும் இளம் பென்குயின்களின் குரல் கெஞ்சலுடன் இருக்கும். குரல் தொடர்போடு உடல் அசைவுகளும் சேர்ந்து கொள்ளும்.

தொடர்புக் குரல்களை எழுப்பும்போது, பென்குயின்கள் பொதுவாக எழுந்து நின்று அலகுகளைத் திறந்த நிலையில் வைத்து, கழுத்தை முடிந்தவரை செங்குத்தாக நீட்டுகின்றன. அதுவே சண்டையிடும்போது, அவை கழுத்தை, மற்ற பென்குயினை நோக்கி நீட்டி ஆக்ரோஷக் குரல்களை எழுப்புகின்றன. தன் இணையைக் கவர, கழுத்தை மேல்நோக்கி நீட்டி, சிறகுகளை விரித்து நடனமாடும்.

மேலும் பென்குயின்களின் தொடர்பு மொழியை அறிந்து கொள்ளத் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

கட்டுரையாளர், எழுத்தாளர்.

தொடர்புக்கு : writernaseema@gmail.com



FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x