Published : 23 Jul 2025 07:58 AM
Last Updated : 23 Jul 2025 07:58 AM
அந்த ரோமானியப் பேரரசர், ஜெர்மனியிலிருந்த சில நாடுகள் மீது போர் தொடுத்து, அவற்றைக் கைப்பற்றி இருந்தார். அடுத்து பிரிட்டனின் மீதும் படையெடுத்துச் சென்று கைப்பற்ற ஆசைப்பட்டார். பிரிட்டனுக்குச் செல்வதற்குக் கடலைக் கடக்க போர்க் கப்பல்கள் நிறைய வேண்டும். அது சாத்தியப்படாததால், கடற்கரையில் நின்றபடி தனது வீரர்களுக்குக் கட்டளை ஒன்றை இட்டார்.
‘கடலின் அலைகளோடு போரிட்டு அவற்றை வீழ்த்துங்கள். கடலின் கடவுள் நெப்டியூனைக் கொல்லுங்கள்!’ - பேரரசரின் கட்டளை. வேறு வழியின்றி ரோமானிய வீரர்கள் கடற்கரையில் நின்றபடி அலைகளைத் தம் வாளால் வெட்டிக் கொண்டே இருந்தனர். அந்தப் புத்திசாலி ரோமானியப் பேரரசர், கலிகுலா.
சுமார் நான்கே ஆண்டுகள் மட்டும் (பொ.ஆ. (கி.பி.) 37 முதல் 41 வரை) ரோமானியப் பேரரசின் அரியணையில் இருந்தார். அதற்குள் அவர் அடித்த கொட்டங்களையும், நிகழ்த்திய கொடூரங்களையும் வரலாற்றாளர்கள் பக்கம் பக்கமாகப் பதிவு செய்துள்ளனர். நாம், கலிகுலாவின் செல்லக் குதிரையான இன்சிடாடஸ் (Incitatus) குறித்து மட்டும் பார்ப்போம்.
இந்தக் குதிரை, எந்த வழியில் கலிகுலாவிடம் வந்து சேர்ந்தது, எப்படி அவரது மனதைக் கவர்ந்தது என்பது குறித்துத் தகவல்கள் இல்லை. ஆனால், இன்சிடாடஸைப் பார்த்தாலே, கலிகுலாவுக்குள் மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரந்தன. தன் குதிரைக்கு என்று பளிங்குக் கற்களால் செதுக்கப்பட்ட சிறு மாளிகை ஒன்றை வடிவமைத்தார் கலிகுலா.
அதற்குப் பணிவிடைகள் செய்வதற்கு என்றே சுமார் 18 பணியாளர்களை நியமித்திருந்தார். அதன் பாதுகாவலுக்கு என்றே சிறப்புப் படை வீரர்கள் முழு நேரமும் நேர்ந்து விடப்பட்டிருந்தார்கள். அதன் உடலுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் வைத்தியர்கள் பரபரத்தார்கள். அவ்வப்போது தன்னுடன் விருந்து உண்ண இன்சிடாடஸையும் அழைத்துக் கொண்டார் கலிகுலா.
பேரரசரின் குதிரையானது விருந்துக்குச் சாதாரணமாகச் செல்ல முடியுமா? அதற்காக ஒப்பனைகள் நடந்தன. அழகான வேலைப் பாடுகள் அமைந்த சால்வையைப் போர்த்திக் கொண்டு, பல்வேறு உயர்ரகக் கற்கள் பதிக்கப்பட்ட பட்டையைக் கழுத்தில் அணிந்து கொண்டு, இன்சிடாடஸ் விருந்து நடக்கும் இடத்துக்குச் சென்றது.
அதற்குத் தங்கத் தட்டிலிருந்து தங்கம் கலந்த ஓட்ஸை எடுத்து ஊட்டிவிட்டு, தங்கக் கோப்பையில் ஒயினைப் பருகக் கொடுத்து, கொஞ்சுவது கலிகுலாவின் வழக்கமாக இருந்தது. இன்சிடாடஸ் அவ்வப்போது பந்தயங்களில் கலந்துகொண்டது. அடுத்த நாள் தன் செல்லத்துக்குப் பந்தயம் இருந்தால், ‘அது ஓய்வெடுக்கும்போது எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது.
சுற்றுவட்டாரத்தில் யாரும் எந்தவிதச் சத்தமும் எழுப்பக் கூடாது. மீறினால், கடுமையாகத் தண்டனை உண்டு’ என்று எல்லாம் கலிகுலாவிடமிருந்து கட்டளைகள் பறந்தன. இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமான தகவல் ஒன்று உண்டு.
தன் செல்லக் குதிரைக்கு ‘வெளிநாட்டுத் தூதுவர்’ என்கிற பதவி கொடுத்து கௌரவித்தார் கலிகுலா. இது உண்மையா என்பதில் மாற்றுக் கருத்துகள் உண்டு. தன் நாட்டில் பதவியில் இருந்த முக்கியமான மனிதர்கள் எல்லாம் ஒழுங்காகத் தம் கடமைகளைச் செய்யவில்லை.
ஆகவே, உங்களை நம்புவதைவிட, நான் என் குதிரையை நம்புகிறேன் என்று சுட்டிக்காட்டுவதற்காகவும், தனக்கு எதிராகச் செயல்பட்ட செனட் உறுப்பினர்களைவிடத் தனது குதிரையே உயர்ந்தது என்று அவர்களை மட்டம்தட்டு வதற்காகவும் கலிகுலா அப்படிச் செய்தார் என்று வரலாற்று ஆய்வாளர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள்.
வரலாற்றின் மிக மோசமான மன்னர்களில் ஒருவரான கலிகுலா, அரசியல் சதிகளால் படுகொலை செய்யப் பட்டார். குதிரையின் முடிவு குறித்துத் தெரியவில்லை. இன்சிடாடஸ் என்கிற பெயருக்கான அர்த்தம், ‘மிகவும் வேகமானது!’ பிரான்ஸ் மாவீரர் நெப்போலியன், 1798ஆம் ஆண்டில் எகிப்துக்குப் படையெடுத்துச் சென்றபோது, எகிப்தியர்கள் பயன்படுத்திய அரேபியக் குதிரைகளின் கம்பீரத்தையும் வசீகரத்தையும் கண்டு மயங்கினார்.
அதிலும் சாம்பல் கலந்த வெள்ளை நிறத்தில் இருந்த ஒரு குதிரையைத் தேர்ந்தெடுத்தார். அது பிரான்ஸுக்குக் கொண்டு வரப்பட்டது. அதற்கான போர்ப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. 1800ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் படைகளுக்கும் ஆஸ்திரியப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது மாரெங்கோ போரில், நெப்போலியன் வெற்றி பெற்றார்.
அப்போது போர்க்களத்தில் அந்தக் குதிரை மீது ஏறிதான் அவர் எதிரிகளைப் பந்தாடினார். அந்த வெற்றியின் நினைவாக, குதிரைக்கு ‘மாரெங்கோ’ (Marengo) என்று பெயர் வைத்தார். நெப்போலியன் தன் வாழ்க்கையில் 52 குதிரைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.
ஆனால், மிக முக்கியமான போர்களில் எல்லாம் மாரெங்கோவே அவரைச் சுமந்து சென்றிருக்கிறது. போர்க்களத்தில் எட்டு முறை காயமடைந்த மாரெங்கோ, அதற்காக எப்போதும் பின்வாங்கியதில்லை. ரஷ்யாவின் உறைபனிக் குளிரிலும் உத்வேகத்துடன் நெப்போலியனைச் சுமந்து சென்ற பெருமை மாரெங்கோவுக்கு உண்டு.
1815, வாட்டர்லூ போர். நெப்போலியனின் இறுதிக் களம். பிரெஞ்சுப் படைகள் தோல்வி கண்டன. நெப்போலியன் சிறைபட்டார். அவரின் செல்லக் குதிரையான மாரெங்கோவை, வில்லியம் பீட்டர் என்கிற பிரிட்டிஷ்காரர் பிடித்துச் சென்று விற்றார். அதற்குப் பின் தன் எஜமானர் நெப்போலியனை அது பார்க்கவே இல்லை.
தனது 38வது வயதில் இறந்துபோன மாரெங்கோவின் எலும்புக்கூடு, லண்டன் தேசிய ராணுவ அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்படுகிறது. வாட்டர்லூ போரில் நெப்போலி யனைத் தோற்கடித்த களத்தில் பிரிட்டிஷ் படைத்தளபதியாகச் செயல்பட்டவர் ஆர்தர் வெல்லஸ்லி.
அவரின் கம்பீர, அடர்பழுப்பு நிறக் குதிரை கோபன்ஹேகன் (Copenhagen). பல போட்டிகளில் வெற்றி பெற்ற பந்தயக் குதிரை. களைப்பே அடையாமல் பல மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்யக்கூடிய திறனுடன் விளங்கியது. வாட்டர்லூ போர்க்களத்தில் மாரெங்கோவும் கோபன்ஹேகனும் எதிர் எதிரே
நின்று போரிட்டன.
தோல்விக்குப் பின் மாரெங்கோவின் வாழ்க்கை மாறிப் போக, கோபன்ஹேகனோ வெல்லஸ்லியைக் கம்பீரமாகச் சுமந்துகொண்டு, அந்தப் போரின் வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்குபெற்றது. அவரின் பிரியத்துக்குரிய குதிரையாக 1836 வரை சிறப்புடன் வாழ்ந்தது. ராணுவ மரியாதையுடன் வெல்லஸ்லி தன் செல்லக் குதிரைக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தார்.
‘நெப்போலியன் குதிரையான மாரெங்கோவின் எலும்புக்கூட்டுடன், கோபன்ஹேகனின் எலும்புக் கூட்டையும் அருங்காட்சியகத்தில் வைக்கலாம்’ என்று வெல்லஸ்லியைக் கேட்டார்கள். எதிரி குதிரையும் தன் குதிரையும் ஒன்றாக இருப்பதா என்று நினைத்திருக்கலாம். வெல்லஸ்லி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
(சந்திப்போம்)
- writermugil@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT