Published : 23 Jul 2025 07:52 AM
Last Updated : 23 Jul 2025 07:52 AM
க்ரித்விக்கின் தம்பி சாத்விக். இரண்டு பேருக்கும் எப்போதும் ஓயாத சண்டை. விடுமுறையில் வீட்டில் இருந்தால், அவர்களைச் சமாதானப்படுத்துவதே பெற்றோரின் முக்கியமான வேலையாக இருக்கும். வீட்டில் பெரியவர்கள் இல்லாவிட்டால், அண்ணனும் தம்பியும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் இவர்களின் அம்மாவிடம் சொல்வார்கள். அம்மாவுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்.
விடுமுறைக்காகப் பாட்டி வீட்டுக்குச்சென்றார்கள் க்ரித்விக்கும் சாத்விக்கும். இரண்டு பேருக்கும் பிடித்த தின்பண்டங் களைச் செய்து வைத்திருந்தார் பாட்டி. ஏராளமான கதைப் புத்தகங்களை வாங்கி வைத்திருந்தார் தாத்தா. தின்படங்களைக் சாப்பிட்டார்கள். இளநீரில் நுங்கைச் சேர்த்துக் கொடுத்தார்தாத்தா.
மகிழ்ச்சியாகப் பருகினார்கள். ஆளுக்கு ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தனர். தாத்தாவுக்கும் பாட்டிக்கும் அவர்களின் அம்மாவுக்கும் நிம்மதியாக இருந்தது. தங்கள் வேலைகளைக் கவனிக்கச் சென்றார்கள்.
சற்று நேரத்தில் க்ரித்விக்கும் சாத்விக்கும் சண்டை போட்டு, கத்தும் சத்தம் கேட்டது. அம்மா, தாத்தா, பாட்டி ஆகிய மூன்று பேரும் ஒவ்வொரு திசையிலிருந்தும் ஓடிவந்தனர். “என்னடா சண்டை?” “நான் படிச்சிட்டிருந்த புத்தகம் நல்லா இருக்குன்னு சொன்னேன், உடனே இவன் அதைப் பறிச்சிட்டான்” என்றான் க்ரித்விக்.
“முதல்ல நான்தான் அந்தப் புத்தகத்தை எடுத்தேன். இவன் கேட்டதும் கொடுத்தேன். நான் கொடுத்ததை இப்ப எடுத்துக்கிட்டேன்” என்று சிரித்தான் சாத்விக். “உங்க சண்டைக்குக் காரணமே வேண்டாம், எப்பப் பாரு உங்களுக்குப் பஞ்சாயத்துப் பண்றதே எங்க வேலையா? சரி, நான் வெளியே போறேன், என்னோட யார் வர்றீங்க?” என்று கேட்டார் அம்மா. “நாங்க வீட்டிலேயே இருந்துக்கறோம்” என்றான் க்ரித்விக்.
“தாத்தாவும் பாட்டியும் பாவம், என்னோட ஒருத்தன் வரணும்” என்றார் அம்மா. க்ரித்விக் அம்மாவுடன் புறப்பட்டான். சற்று நேரத்தில் பாட்டியும் எங்கோ புறப்பட்டார். “சாத்விக் குட்டி, தாத்தா தூங்கிடுவார். நீ தனியா இருக்கணும். என்னோட வர்றீயா, தோட்டத்துக்குப் போயிட்டு வரலாம்” என்று கேட்டார். சாத்விக் மகிழ்ச்சியாகப் பாட்டியுடன் புறப்பட்டான்.
க்ரித்விக்கை நூலகத்திற்கு அழைத்துச் சென்றார் அம்மா. அங்கே குழந்தைகளுக்குக் கோடை விழா நடந்துகொண்டு இருந்தது. குழந்தைகளுக்கு ஓவியம் வரையவும் ஓரிகாமி பொம்மைகள் செய்யவும் சொல்லிக் கொடுத்தார்கள்.
க்ரித்விக் உற்சாகமாக அனைத்திலும் கலந்துகொண்டான். விதவிதமான ஓரிகாமி பொம்மைகளைச் செய்தான். “அம்மா, இந்த ஓரிகாமி கேமரா எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. சாத்விக்கும் நம்மகூட வந்திருக்கலாம்” என்றான் க்ரித்விக்.
“அதனால் என்ன, நீ உன் தம்பிக்குச் செய்யச் சொல்லிக் கொடு” என்றார் அம்மா. சாத்விக் பாட்டியோடு தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தான். “பாட்டி, இங்கே என்ன செய்யப் போறோம்?” என்று கேட்டான் சாத்விக். “கீரை பறிக்க வந்தேன் சாத்விக். போன வாரம் நல்ல மழை. காட்டுக்கீரை முளைச்சிருக்கு. ரொம்ப நல்லா இருக்கும். அதைப் பறிக்கத்தான் வந்தேன்” என்றார் பாட்டி.
“காட்டுக்கீரை எப்படி இருக்கும்?” என்று கேட்டான் சாத்விக். பாட்டி செடிக்கு அடையாளம் சொன்னார். கண்ணில் படும் ஒவ்வொரு செடியிலும் இலைகளைப் பறித்தான். பிறகு, பாட்டியிடம், இது கீரையா என்று கேட்டுக்கொண்டான். பொன்வண்டைப் பார்த்தான். வெல்வெட் பூச்சியைப் பார்த்தான். பாட்டி கீரை பறிப்பதை நிறுத்திவிட்டார். புதர்புதராக ஏதோ தேடிக் கொண்டிருந்தார்.
“பாட்டி, இப்ப என்ன செய்யறீங்க?” “அதலைக்காய் காய்ச்சிருக்கு சாத்விக். அதான் அதையும் பறிச்சிட்டுப் போகலாம்னு பார்க்கறேன்” என்றார் பாட்டி. “அதலைக்காயா? அப்படின்னா என்ன?” “அதலைக்காய் கரிசல் மண்ணுல மட்டும்தான் விளையும். உடலுக்கு நல்லது” என்றார் பாட்டி “அப்படியா! டேஸ்ட்டா இருக்குமா?” “ம்... ருசியா இருக்கும், பாகக்காய் மாதிரி.” “என்ன பாகக்காயா? ஐயோ எனக்கு வேண்டாம்” என்றான் சாத்விக்.
“ருசியா இருக்கும் கண்ணா. வா அதலைக்காய் பறிச்சிட்டு வீட்டுக்குப் போகலாம்” என்றார் பாட்டி. “அது எந்தச் செடில இருக்கும்? பூ எப்படி இருக்கும்?” என்று கேள்விகளை அடுக்கினான் சாத்விக். பிறகு தானும் பாட்டியோடு சேர்ந்து அதலைக்காய்களைப் பறித்தான். சற்று நேரத்தில் பாட்டியும் சாத்விக்கும் வீட்டிற்கு வந்துவிட்டனர். க்ரித்விக்கிடம் கதை சொல்ல ஆர்வமாகக் காத்திருந்தான் சாத்விக். அப்போது க்ரித்விக்கும் அம்மாவும் வீட்டுக்குள் நுழைந்தனர்.
“க்ரித்விக், உனக்கு அதலைக்காய் தெரியுமா?” என்று தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான் சாத்விக். “ஓரிகாமில உனக்கு கேமரா செய்யச் சொல்லித் தரவா?” என்று தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான் க்ரித்விக். இரண்டு பேரும் அருகருகே அமர்ந்து அவர்களின் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள். அம்மாவுக்கும் பாட்டிக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT