Published : 23 Jul 2025 07:48 AM
Last Updated : 23 Jul 2025 07:48 AM
இரைப்பையில் நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகும்போது, இரைப்பை ஏன் செரிமானம் ஆவதில்லை, டிங்கு? - எம். பிரபுவிந்தா, 6-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி. பள்ளி, சின்ன பள்ளத்தூர், தருமபுரி.
நம் இரைப்பைச் சுவர் எளிதில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, ஒரு பாதுகாப்பு அடுக்கால் மூடப்பட்டுள்ளது. இந்த அடுக்கு அமிலத்திலிருந்தும் நொதிகளிலிருந்தும் இரைப்பைச் சுவரைப் பாதுகாக்கிறது. இரைப்பைச் சுவர் தாங்கக்கூடிய விதத்தில் சீரான அளவில்தான் அமிலங்களும் நொதிகளும் சுரக்கின்றன.
அதனால் இரைப்பைச் சுவர் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிவிடுகிறது. அதோடு இரைப்பையின் உட்புறச் சுவர் குறிப்பிட்ட இடைவெளியில் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மேலும் இரைப்பையில் பெரும்பாலான நேரம் உணவு இருப்பதால், அவற்றைச் செரிமானம் செய்வதில் அமிலங்களும் நொதிகளும் ஈடுபட்டிருப்பதாலும் இரைப்பைச் சுவர் பாதிக்கப்படுவதில்லை, பிரபுவிந்தா.
மின்னலில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று படித்தேன். நம் நாட்டில் அவ்வாறு மின்னல் மின்சாரம் எங்கு தயாரிக்கப்படுகிறது, டிங்கு? - ஜெப் ஈவான், 9-ம் வகுப்பு, புனித பாட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.
மின்னலில் இருந்து மின்சாரம் தயாரிப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியம்தான். ஆனால், மின்னல் எப்போது வரும் எனக் கணிக்க இயலாது. திடீரென்று தோன்றும் மின்னலில் அதிக அளவு மின்சாரம் மிகக் குறைந்த நேரத்தில் வெளிப்படும்போது, அதைச் சேகரிப்பதிலும் சேமிப்பதிலும் சிக்கல் இருக்கிறது. அதனால் இந்தியாவிலோ பிற நாடுகளிலோ மின்னலில் இருந்து மின்சாரம் தயாரிப்பது தற்போது இயலாததாக இருக்கிறது. எதிர்காலத்தில் சாத்தியமாகலாம், ஜெப் ஈவான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT