Last Updated : 18 Jul, 2025 01:04 PM

 

Published : 18 Jul 2025 01:04 PM
Last Updated : 18 Jul 2025 01:04 PM

மான் எப்படித் தகவல்களைப் பரிமாறும்?


உயிரினங்களின் மொழி – 28

மான்கள் ஒன்றோடு மற்றொன்று தகவல் தொடர்புகொள்ள ஒலி, சமிக்ஞைகள், வாசனை போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன. அதில் முதன்மையானது வாசனை.

மான்களின் உடலில் ஏழு வெவ்வேறு நறுமணச் சுரப்பிகள் உள்ளன. அவை உடலில் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன. கால்விரல்களுக்கு இடையே, கண்களுக்குக் கீழே, நெற்றியில், மூக்கின் உட்புறம், பின்னங்கால் மூட்டுகளில் என டார்சல் சுரப்பிகள் உள்ளன. இந்தச் சுரப்பிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வேலையைச் செய்கிறது.

மான்களின் டார்சல் சுரப்பி குறித்த ஆராய்ச்சியில் ஒவ்வொரு மானும் தனிப்பட்ட வாசனையைக் கொண்டுள்ளது என்பது தெரியவந்தது. மனிதர்களுக்கு இருக்கும் கைரேகையைப் போன்றது மான்களின் வாசனை. இந்த வாசனை மூலம் பாலினம், வயது, ஆரோக்கியம், இனப்பெருக்க நிலை போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். ஒரு மான் இன்னொரு மானைச் சந்திக்கும் போது, அவை முதலில் வாசனை அடிப்படையில் அறிந்துகொள்கின்றன.

வாசனையைப் போலவே உடல் அசைவுகள், வாலின் நிலை, காதின் திசை போன்றவற்றால் தொடர்புகொள்கின்றன. மான்கள் தங்களைச் சுற்றிச் சிறிய அசைவை உணர்ந்தாலும், தலையை மேலும் கீழும் பக்கவாட்டிலும் ஆட்டுகின்றன. மான்களுக்குச் சிறப்பான பார்வை உண்டு.

மனிதர்களுக்குக் காதுகள் செய்திகளைக் கேட்க இருப்பது போல், மான்களுக்கு அவை செய்தி சொல்ல உதவுகிறது. மானின் காதுகள் நீங்கள் இருக்கும் திசையில் சுட்டிக்காட்டினால், அது எச்சரிக்கையாக உள்ளது என்றோ அல்லது வாசனையை முகர்கிறது என்றோ அர்த்தம். எச்சரிக்கை உணர்வுடன் இருக்கும்போது, காதுகள் பின்னோக்கி இழுக்கப்பட்டிருக்கும். மான் அமைதியாக அல்லது தூக்க நிலையில் இருந்தாலும் காதுகளைச் சுழற்றிக் கொண்டிருக்கும். உறக்கம் வந்தாலும் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனம் கொள்ள இந்த உத்தியைப் பயன்படுத்துகின்றன. மான்கள் கூட்டத்தின் தலைவனுக்குக் காதுகள் உயர்ந்து நிற்கும். கீழ்ப்பணியும் மான்களுக்குக் காதுகள் தாழ்ந்து காணப்படும்.

அசைவுகள் மூலம் மட்டுமல்ல, ஒலிகள் மூலமும் மான்கள் தொடர்பு கொள்கின்றன. பார்ப்பதற்கு அமைதியாக இருக்கும் மான்கள், தேவைப்படும்போது ஒலியை எழுப்புகின்றன. ஆண் மான்கள் பெண்களை அழைக்கும் போது சத்தமிடும். பதிலுக்குப் பெண் மான்களும் ஒலி எழுப்புகின்றன. யார், எங்கே, வரலாமா என்று ஒன்றோடு மற்றொன்று பேசிக் கொள்கின்றன என்று அர்த்தம். குறிப்பாக இனப்பெருக்கக் காலத்தில் ஒலிகளை அதிகமாக உபயோகிக்கின்றன.

கால்களில் இருக்கும் நறுமணச் சுரப்பிகள் ஆபத்தான சூழலில் உதவுகின்றன. ஆபத்து வருகிறதென்றால், பார்வை மூலமும் காதுகள் வழியும், தகவல்களை மற்ற மான்களுக்குத் தெரிவிக்கின்றன. அதுவும் தோற்றுப் போகும் நேரத்தில் அவை கால்களைத் தரையில் தட்டும். அப்போது, சுரப்பிகளிலிருந்து எச்சரிக்கை பெரோமொன்கள் வெளிவரும். அந்த வாசனை மற்ற மான்களுக்கு ஆபத்தின் தீவிரத்தை உணர்த்தும். அது போலவே தப்பித்து ஓடும்போது மான்களின் வால்கள் விறைப்பாக நீட்டிக்கொண்டு நிற்கும். இது குழுவில் உள்ள மற்ற மான்களுக்கு எச்சரிகை சமிக்ஞை. குட்டிகளின் பாதுகாப்புக்காகவும் சூழலை உணர்த்தவும் பொதுவாகப் பெண் மான்கள் இதை அதிகமாகச் செய்கின்றன.

ஆண் மான்கள் இனப்பெருக்கக் காலத்தில் தயாராக இருக்கும்போது, தங்கள் எல்லையில் உள்ள செடி கொடிகள் மற்றும் மரங்களின் மேல் வாசனையைத் தேய்க்கின்றன. இதன் மூலம் பெண் மான்களுக்குத் தங்கள் நிலையைத் தெரிவிக்கின்றன. பெண் மான்களும் தங்கள் வாலை விறைத்து கடினமாக வைப்பதன் மூலம் தயாராக இருப்பதாகச் செய்தி அனுப்புகின்றன.

பருவக் காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப அவற்றின் தொடர்பு நடத்தைகளில் சின்ன சின்ன மாறுபாடுகள் நடக்கின்றன என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் நவீனக் கருவிகளைக் கொண்டு மான்களைக் கண்காணித்து வருகின்றனர். வரும் காலங்களில் மான்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு : writernaseema@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x