Published : 16 Jul 2025 07:48 AM
Last Updated : 16 Jul 2025 07:48 AM
1936, மே மாதத்தில் அந்த டாஸ்மேனியப் புலி, டாஸ் மேனியாவில் உள்ள ஹோபர்ட் உயிரியல் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. ஒரு வேட்டைக்காரர் காட்டுப்பகுதியில் வலைவிரித்து அதைப் பிடித்திருந்தார். அழிவின் விளிம்பில் இருந்த டாஸ்மேனியப் புலியை வேட்டையாடுவது சட்ட விரோதம் என்பதால், அந்த டாஸ்மேனியப் புலி குறித்த ஆவணங்கள் எதுவும் உயிரியல் பூங்காவில் பதிவு செய்யப்படவில்லை.
1936, செப்டம்பர் மாதத்தில் அது நோய்வாய்ப்பட்டு இறந்து போனது. டாஸ்மேனியாவின் காட்டுப்பகுதியில்தான் உலகின் கடைசி ஒரு சில டாஸ்மேனியப் புலிகள் எஞ்சியிருந்ததாக நம்பப்பட்டது. அதேநேரம் ஹோபர்ட் உயிரியல் பூங்காவில் இறந்து போன டாஸ்மேனியப் புலி ஓர் ஆண். அதன் பெயர் பெஞ்சமின். அதுவே உலகின் கடைசி டாஸ்மேனியப் புலி என்று செய்திகள் வெளியாயின.
1936க்குப் பின்னும் டாஸ்மேனியப் புலியைக் காட்டிலும், வேறு பகுதிகளிலும் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள். ஆனால், யாராலும் அதை நிரூபிக்க இயலவில்லை. பெஞ்சமினே உலகில் உயிர் வாழ்ந்த, மனிதனின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த இறுதி டாஸ்மேனியப் புலி என்று வரலாறு அதனைப் பதிவுசெய்து கொண்டது.
சரி, அதென்ன டாஸ்மேனியப் புலி? Thylacinus cynocephalus என்கிற உயிரியல் பெயர் கொண்ட பாலூட்டி. தம் குட்டிகளைப் பாதுகாக்க வயிற்றுப் பகுதியில் பை போன்ற அமைப்பு கொண்ட விலங்குகளில் (Marsupials) இதுவும் ஒன்று. இதன் முதுகில் புலிகளுக்கு இருப்பதுபோல வரிகள் இருந்ததால், டாஸ்மேனியப் புலி என்கிற பெயர். ஆனால், இது புலிக் குடும்பத்தைச் சேர்ந்ததல்ல.
இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை ஆஸ்திரேலியா, அதை ஒட்டி அமைந்த டாஸ்மேனியன் தீவு, நியுகினி ஆகிய பகுதிகளில் அதிகம் காணப்பட்ட விலங்கினம் இது. பின்பு காலநிலை மாற்றத்தாலும், மனிதர்கள் வேட்டையாடியதாலும் டாஸ்மேனியாவில் மட்டுமே வாழ்ந்து வந்தது. அனைத்து உண்ணியான இது, காடுகள், புல்வெளிகள், மலைப் பகுதிகளில் காணப்பட்டது.
இதன் தாடைப் பகுதி பெரியது. பார்ப்பதற்கு ஓநாய் போன்ற தோற்றத்தில் இருந்ததால் டாஸ்மேனிய ஓநாய் என்கிற பெயரிலும், தைலசீன் என்கிற பெயரிலும் அழைக்கப்பட்டது. இதன் வாலானது, கங்காருவின் வாலைப் போன்று தடிமனானது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள், ஆஸ்திரேலியாவை ஆக்கிரமித்திருந்தனர். அப்படியே அருகிலிருந்த டாஸ்மேனியத் தீவிலும் குடியிருப்புகளை உருவாக்கத் தொடங்கினர்.
மேய்ச்சல் நிலங்கள் சூழ, மத்தியில் பண்ணை வீடுகளை உருவாக்கிக் கொண்டு சொகுசாக வாழ்ந்தனர். ஆனால், அவர்கள் வளர்த்த ஆடுகள், வனவிலங்குகளால் அடிக்கடி வேட்டையாடப்பட்டன. அந்த வனப்பகுதியில் டாஸ்மேனியப் புலிகளே அதிகம் உலவியதால் அவையே ஆடுகளை வேட்டையாடுகின்றன. அவற்றை விடக்கூடாது என்று அந்த ஐரோப்பியர்கள் முடிவுக்கு வந்தனர். ‘டாஸ்மேனியப் புலியைச் சுட்டுக் கொன்றால் பரிசு’ என்று அறிவிக்கப்பட்டது.
பணத்தாசையாலும் வேட்டை ஆர்வத்தாலும் ஐரோப்பியர்களின் துப்பாக்கிகள் தோட்டாக்களைச் சூடின. தோட்டாக்கள் டாஸ்மேனியப் புலிகளின் உயிர்களைத் தேடின. 1830 முதல் 1920 வரை சுமார் 3,500 டாஸ்மேனியப் புலிகள் வேட்டையாடப்பட்டதாக ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
டாஸ்மேனியப் புலிகள் மனிதர்களோடு நெருங்கி வாழ விரும்பாதவை. கூச்ச சுபாவம் கொண்டவை. இரவு நேரத்தில் மட்டுமே இரைக்காக வேட்டையாடுபவை. காட்டு எலிகள், சிறு விலங்குகள், சிறு பறவைகள் போன்றவற்றை விரும்பி உண்பவை. டாஸ்மேனியப் புலிகள் பண்ணைகளுக்குள் புகுந்து, கால்நடைகளை வேட்டையாடுவது எல்லாம் மிக அரிதான விஷயம் என்று உயிரியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
ஆக, வேறு ஏதோ வனவிலங்கு ஆடுகளைக் கவர்ந்து செல்ல, பாவப்பட்ட டாஸ்மேனியப் புலிகளின் இனமே மனிதனால் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டது. 1968ஆம் ஆண்டில் இங்கிலாந்து உயிரியலாளரான கிரஹாம் பிஸ்ஸி, ‘ஹோவர்டு உயிரியல் பூங்காவில் நான் பணியாற்றியபோது, பெஞ்சமின் என்கிற அந்த டாஸ்மேனியப் புலிக்கு உணவாக உயிருள்ள முயல்கள் கொடுக்கப்பட்டன’ என்றார். உயிரியல் பூங்காவைச் சேர்ந்தவர்கள் அதைக் கடுமையாக மறுத்தார்கள். ‘கிரஹாம் அங்கே பணி புரியவே இல்லை.
உயிருள்ளவற்றை விலங்குகளுக்கு இரையாகக் கொடுக்கும் வழக்கம் எல்லாம் அங்கே இல்லை’ என்று அழுத்தமாக மறுத்தார்கள். இன்னோர் உண்மையும் வெளியானது. ஹோவர்டு உயிரியல் பூங்காவில் பெஞ்சமின் என்கிற பெயரில் எந்த டாஸ்மேனியப் புலியும் ஒருபோதும் இருந்ததில்லை.
எனில், கடைசியாக இறந்து போனது எது? 85 ஆண்டுகளுக்குப் பிறகு அது குறித்த மிகப்பெரிய உண்மை வெளிப்பட்டிருக்கிறது. 1936 செப்டம்பரில் இறந்துபோன கடைசி டாஸ்மேனியப் புலி உடலின் மிச்சங்களை, உயிரியல் பூங்காவைச் சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவின் தேசிய அருங்காட்சியகத்துக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். அங்கே அந்த டாஸ்மேனியப் புலியின் மயிர்ப்போர்வை, மண்டை ஓடு, எலும்புகள் எல்லாம் பதப்படுத்தப்பட்டன. பின்பு கல்வி நோக்கத்துக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டன.
அருங்காட்சியகத்தின் பணிகள் குறித்த 1936-37ஆம் ஆண்டுக்கான அறிக்கை மட்டும் ஏதோ ஒரு காரணத்தால் அப்போது வெளியிடப்படவில்லை. ஆகவே, அதுவே அந்தக் கடைசி டாஸ்மேனியப் புலியின் மிச்சம் என்பது பின்னால் வந்தவர்களுக்குத் தெரியவில்லை. வெளியிடப்படாத அந்த அறிக்கை 85 ஆண்டுகளுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டில் தேடிக் கண்டெடுக்கப்பட்டது. ஹோவர்டு உயிரியல் பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட கடைசி டாஸ்மேனியப் புலி, ஆண் அல்ல, அது ஒரு பெண் என்கிற உண்மை அதன் மூலம் வெளிப்பட்டது.
பழைய டிஎன்ஏ மீட்டெடுப்பு, செயற்கை இனப்பெருக்கம், நவீன அறிவியல் தொழில் நுட்பங்களின் வசதியோடு டாஸ்மேனியப் புலியை மறுஉருவாக்கம் செய்யும் முயற்சிகளில் ஆய்வாளர்கள் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறார்கள். மீண்டும் அந்த விலங்கு உருவாக்கப் பட்டு, உயிர்பெற்று மண்ணில் உலவுமா என்று தெரியாது. ஆனால், 1936 செப்டம்பரில் இறந்து போன, அந்தக் கடைசி பெண் டாஸ்மேனியப் புலி, தன் மனதுக்குள் சொன்ன மரண வாக்குமூலம் இதுவாகத்தான் இருந்திருக்கும், ‘மனிதர்கள் மிக மோசமானவர்கள்!’
(சந்திப்போம்)
- writermugil@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT