Published : 16 Jul 2025 07:41 AM
Last Updated : 16 Jul 2025 07:41 AM

சூழலுக்கேற்ப வாழும் பறவைகள் | பறப்பதுவே 23

பறவைகள் கடல், பாலைவனம், மலை, காடு, பனிப்பிரதேசம், நகர்ப்புறம் எனப் பல்வேறு சூழல்களில் வாழ்கின்றன. ஒவ்வொரு சூழலும் தனித்துவமான சவால்களைப் பறவைகளுக்கு ஏற்படுத்துகிறது. பறவைகள் தங்கள் உடல் அமைப்பு, இறகு, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மூலம் இந்தச் சவால்களை எதிர்கொள்கின்றன.

உலகில் உள்ள பறவை இனங்களில் பாதிக்கு மேல் காடுகளில்தான் வாழ்கின்றன. நீர்நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை 15 சதவீதம் வரை இருக்கிறது. அவற்றைவிடச் சற்றுக் குறைவாக, நகர்ப்புறங்களில் மனிதர்களுடன் வாழும் பறவை இனங்கள் இருக்கின்றன. பாலைவனங்களில் 5 சதவீதப் பறவை இனங்களும் கடல் பகுதிகளில் அதைவிடக் குறைவான பறவை இனங்களும் வசிக்கின்றன.

காடுகளில் வாழும் பறவைகளுக்கு ஒளி குறைவான சுற்றுச்சூழலில் பறப்பது சவாலான செயல். பாம்பு, பருந்து போன்ற வேட்டையாடிகளில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பருவ காலங்களைப் பொறுத்து அவற்றுக்குக் கிடைக்கும் பழங்கள், விதைகள், பூச்சிகள் மாறுபடும்.

காடுகளில் தாராளமாக உணவு கிடைப்பதாலும், இனப்பெருக்கத்திற்குப் பாதுகாப்பான மரங்கள் இருப்பதாலும் பெரும்பாலான பறவை இனங்கள் அங்கே வாழ்கின்றன. ஆண்டு முழுவதும் உணவு கிடைப்பதால் பெரும்பாலான பறவைகள் வலசை செல்வதில்லை. காடுகளில் பல வகையான பறவை இனங்கள் வாழ்ந்தாலும் அவற்றின் வாழ்க்கை முறைக்குத் தக்கவாறு அவற்றின் உடல் அமைப்பு இருக்கும். கிளிகளின் வலுவான அலகு, கொட்டைகளை உடைக்க உதவுகிறது.

மரங்கொத்தியின் கூர்மையான அலகு, மரத்தில் துளையிட உதவுகிறது. இறகுகளின் வண்ணமும் எளிதில் எதிரியின் கண்களுக்குப் புலப்படாத வகையில் அமைந்திருக்கும். கடல் பறவைகள் மீன் போன்று கடலில் வாழும் உயிரினங்களை உணவாக உட்கொள் கின்றன. கடல் மேற்பரப்பில் இரையைக் கண்டறிவது இவற்றுக்குச் சவாலானதாக இருக்கும். கடல் புயல், உப்பு நீருக்கு இவற்றின் உடல் தாக்குப்பிடிக்க வேண்டும். உணவைத் தேடி, தினமும் சில நூறு கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.

கடல் சூழல் கடல் பறவைகளுக்கு நிலையான உணவை வழங்குகிறது. உப்பு நீரில் தாக்குப்பிடிக்கும் நீர்ப்புகா இறகுகள், உடல் வெப்பத்தைப் பராமரிக்கும் அடர்ந்த இறகு அடுக்குகளை இவை கொண்டுள்ளன. நீர்நிலைகளில் வாத்து, நாரை, கொக்கு போன்ற பறவைகள் வாழ்கின்றன. வாத்துகளுக்குச் சிறகுகளுக்கு இடையே இருக்கும் தடிமனான சவ்வு, நீந்துவதற்கு உதவுகிறது.

நீளமான அலகு, நீரில் வாழும் உயிரினங்களைப் பிடிக்க உதவுகிறது. நீர்ப்புகா இறகுகள் உடல் வெப்பத்தைப் பாதுகாக்கின்றன. காலநிலை மாற்றம் மற்றும் விவசாய நடவடிக்கைகள் காரணமாக ஏரி, குளம் போன்ற நீர்த்தேக்கங்கள் குறைவதும், நீர் மாசுபாடும் இவ்வகைப் பறவைகளுக்குச் சவாலாக இருக்கிறது.

பாலைவனத்தில் வாழும் பறவைகளுக்குப் பகல் நேரம் அதீத வெப்பமும் குறைவான நீரும் சவாலாக இருக்கும். அதோடு, பூச்சிகளும் விதைகளும் கிடைப்பதும் குறைவாக இருக்கும். அதனால், பாலைவனங்களில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பறவைகள் வசிக்கின்றன.

பாலைவனப் பறவைகள் பெரும்பாலும் வலசை செல்வதில்லை. இவை பாலைவனத்தில் கிடைக்கும் நீர், உணவு ஆகியவற்றுக்கு
ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டுள்ளன. இருப்பினும், கல் கௌதாரி போன்ற சில பறவைகள் உணவு, நீர் தேடி குறுகிய தூரம் வலசை மேற்கொள்கின்றன. வெளிர் நிற இறகுகளை உரு மறைப்புப் பறவை (camouflage) கொண்டுள்ளது. இது பாலைவன மண்ணுடன் ஒன்றிப்போய் வேட்டையாடிகளிடம் இருந்து தப்பிக்க உதவுகிறது.

உயரமான மலைகளில் வாழும் பறவைகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பது சவாலாக இருக்கும். உணவு கிடைப்பதிலும் சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றின் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனைத் திறமையாகப் பயன்படுத்துகிறது. அடர்ந்த இறகு அடுக்குகள் வெப்பக் கசிவைத் தடுத்து, குளிரை எதிர்கொள்ள உதவுகின்றன.

புறா, காகம், மைனா, சிட்டுக்குருவி ஆகியவை நகர்ப்புறங்களில் வாழும் பறவைகளாக மாறி விட்டன. மரங்கள் அழிப்பு, புல்வெளிகள் குறைவு ஆகியவற்றால் மற்ற பறவை வகைகளுக்கு மாறாக நகர்ப்புற பறவைகள் அதிகரிக்கின்றன. மனித தலையீடுகள், வாகனங்களின் ஒலி மாசு ஆகியவை இவற்றுக்குச் சவாலாக இருக்கின்றன. இயற்கையில் ஏற்படும் காலநிலை மாற்றங் களும் மனிதனால் உருவாக்கப்படும் வாழ்விடப் பிரச்சினைகளும் பறவைகளுக்குப் பெரும் சவாலாக இருக்கின்றன.

(பறப்போம்)

- writersasibooks@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x