Published : 16 Jul 2025 07:37 AM
Last Updated : 16 Jul 2025 07:37 AM

வைர மழை பொழியும் கோள்கள்! | டிங்குவிடம் கேளுங்கள்

கடைகளில் வாங்கும் பொருள்களுக்கு வழங்கப்படும் ரசீதுகளின் கீழே E & O.E என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதே, அது என்ன டிங்கு? - ஜி. இனியா, 9-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

ரசீதுகளில் சில நேரம் சிறிய அளவில் தவறு நிகழ்ந்துவிடலாம். அந்தத் தவறைச் சுட்டிக் காட்டினால், சரிசெய்துவிடலாம். உதாரணத்துக்கு ஒரு பொருளின் விலை 20 ரூபாய் என்றால், தவறுதலாக 200 ரூபாய் என்று ரசீதில் போட்டுவிடும் வாய்ப்பு இருக்கிறது.

ஏமாற்ற வேண்டும் என்று நினைக்காமல், தற்செயலாக இந்தத் தவறு நிகழும்போது, அதை மீண்டும் 20 ரூபாயாக மாற்றக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதைக் குறிக்கும் விதத்தில் E & O.E (Errors and Omissions Excepted) என்பதை வணிகத்தில் சட்டபூர்வமாகப் பயன்படுத்துகிறார்கள். இந்தத் தற்செயல் தவறுகளும் விடுபடல்களும் சிறிய அளவுக்குத்தான் பொருந்தும். பெரிய தவறுகளை இதன் மூலம் சரிய செய்ய முடியாது, இனியா.

ஏதோ கோளில் பொருள்கள் வைரமாக மாறுகின்றன என்கிறார்களே, உண்மையா டிங்கு? - எஸ். சபரீஷ், 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.

இதுவரை நேரடியாக உறுதிப்படுத்தப் படாவிட்டாலும் நெப்டியூன் கோளில் வைர மழை பொழிகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஆண்டுக்கு ஆயிரம் டன் வைரம் உருவாகி, மழையாகப் பொழிவதாகச் சொல்கிறார்கள். நெப்டியூன் ஒரு வாயுக் கோள். நெப்டியூன் கோளுக்கு உள்ளே, சுமார் 7 ஆயிரம் கி.மீ. ஆழத்தில் நுண்ணிய தூய கார்பன், மிகுந்த அழுத்தத்தில் வைரமாக மாறுகிறது.

சனி, வியாழன் கோள்களிலும்கூட வைர மழை பொழிவதாகச் சொல்கிறார்கள். நம் சூரியக் குடும்பத்துக்கு அப்பால், இருக்கும் 55 Cancri e எனும் புறக்கோளில் அதிக அளவு கார்பன் இருப்பதால், அங்கும் வைரம் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள், சபரீஷ்.

பூமியும் நிலாவும் வானத்திலிருந்து ஏன் கீழே விழுவதில்லை, டிங்கு? - ஆர். இந்திரா, 5-ம் வகுப்பு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, நாமக்கல்.

நாம் பூமியில் வசிப்பதால் நமக்கு மேலே இருக்கும் பகுதியை வானம் என்றும் கீழே இருக்கும் பகுதியை நிலம் என்றும் குறிப்பிடுகிறோம். சூரியன், நிலா மட்டுமல்லாமல் பூமி போன்ற கோள்களும் அண்டவெளியில் அந்தரத்தில்தான் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

அண்ட வெளியில் மேல் பகுதியும் இல்லை, கீழ்ப்பகுதியும் இல்லை. ஒவ்வொரு கோளுக்கும் விசை இருக்கிறது. அந்த விசையால் தன்னையும் சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றிவருகின்றன. இப்படிச் சீரான வேகத்தில் சுற்றுவதால் அவை வேறெங்கும் விழ வாய்ப்பில்லை, இந்திரா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x