Published : 11 Jul 2025 12:32 PM
Last Updated : 11 Jul 2025 12:32 PM
மனிதர்கள் போலவே நண்டுகளும் ஒன்றோடு மற்றொன்று தொடர்பு கொள்கின்றன. ஒலி, சைகை, வாசனை போன்ற பல வழிகளில் தகவல் தொடர்பு கொள்கின்றன.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நண்டுகளை வைத்து ஆராய்ச்சி நடத்தினர். அட்லாண்டிக் கடற்கரையில் வாழும் பூத நண்டுகள் தங்கள் வயிற்றிலிருந்து ஒலி எழுப்புகின்றன. அதை நிரூபிக்க, ஆய்வாளர்கள் நண்டுகளுக்குச் சிறப்புச் சாயம் கொடுத்து எக்ஸ்-ரே எடுத்தார்கள். அப்போது நண்டுகளின் வயிற்றில் ’காஸ்ட்ரிக் மில்’ என்று ஓர் அமைப்பு இருப்பதைப் பார்த்தார்கள். இது நம் வாயில் இருக்கும் பல்லுக்கு இணையானது. நண்டு கோபப்படும்போது, இந்தப் பற்கள் ஒன்றோடு மற்றொன்று உரசி ஒலியை எழுப்புகின்றன என்பதைப் பதிவு செய்துள்ளார்கள்.
நண்டுகளுக்கு கையில்லை என்றாலும், ஐந்து ஜோடி கால்கள் உள்ளன. அதில் முதலில் இருக்கும் இரண்டு ஜோடி கால்கள் கத்தரிக்கோல் போல் இருக்கும். இதைக் கவ்விகள் என்று சொல்வதுண்டு. உணவு உண்பதற்கும் , சைகை செய்வதற்கும் நண்டுகள் இதை உபயோகிக்கின்றன. நண்டுகள் தங்கள் கால்களையும் கவ்விகளையும் உரசி ஒலி எழுப்புகின்றன. இந்த ஒலியை ’ஸ்ட்ரிடுலேஷன்’ என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கிறார்கள். இந்த ஒலி வெட்டுக்கிளி ஒலி எழுப்புவது போல் இருக்கும்.
நீருக்கடியில் நண்டுகளின் ஒலிகளைப் பதிவு செய்ய ’ஹைட்ரோஃபோன்’ என்கிற சிறப்பு ஒலிப்பதிவு கருவியைப் பயன்படுத்தினார்கள். நண்டுகள் மூன்று வெவ்வேறு வகையான ஒலிகளை எழுப்புகின்றன. உணவு கண்டறியும்போது ஒரு வகையான ஒலியையும், ஆபத்தைக் குறிக்க வேறுவிதமான ஒலியையும், துணையைக் கவர வேறு ஒலியையும் எழுப்புகின்றன. ஆய்வகத்தில் நண்டுகளுக்கு உணவு கொடுக்கும் நேரத்தில், அவை தங்கள் வயிற்றின் ஆழத்திலிருந்து கரகரப்பான ஒலிகளை எழுப்பின என்று கண்டறிந்தனர்.
கிராப்ளர் நண்டுகள் மிகவும் சுவாரசியமான உயிரினங்கள். ஆண் நண்டுகளுக்கு ஒரு கவ்வி பெரியதாகவும் இன்னொரு கவ்வி சிறியதாகவும் இருக்கும். இந்தப் பெரிய கவ்வியை வைத்து அவை மேலும் கீழும் அசைக்கும். இதைக் கூர்ந்து கவனித்தால், நாம் கையசைத்து ’ஹாய்’ சொல்வது போல் தெரியும். ஆனால், இது வெறும் அசைவல்ல, ஒரு வகையான தொடர்பு மொழி.
நண்டுகளின் சைகை மொழியைப் புரிந்துகொள்ள, ஆய்வாளர்கள் ரோபாட் நண்டுகளையும் உருவாக்கினார்கள். வெவ்வேறு விதமாகக் கை அசைக்கும் ரோபாட்களைப் பார்த்து உண்மையான நண்டுகள் எப்படி நடந்துகொள்கின்றன என்று ஆய்வு செய்தார்கள்.துணையை ஈர்க்க வேண்டும் என்றால் வேகமாக கவ்வியை அசைத்தன. அதே எதிரியை அச்சுறுத்த வேண்டும் என்றால், மெதுவாகவும் பலமாகவும் சைகை இருந்தன. தூரத்தில் இருக்கும் நண்டுகளுக்குச் சமிக்ஞை கொடுக்க வேண்டும் என்றால் கையை உயர்த்தி அசைவது போல் இருக்கும். அருகில் இருக்கும் நண்டுகளுடன் தொடர்பு கொள்ள தாழ்வான அசைவுகள் கொடுக்கும். இதன் மூலம் நண்டுகளால் தூரத்தை அளக்க முடிகிறது என்று கண்டறிந்துள்ளனர்.
நண்டுகள் ஃபெரோமோன் என்று சொல்லப்படும் சிறப்பு வாசனைப் பொருட்களை வெளியிடுகின்றன. இவை மனிதர்களால் உணர முடியாது. ஆனால், மற்ற நண்டுகளுக்குத் தெளிவாகப் புரியும். பெண் நண்டுகள் ’நான் குடும்பம் நடத்தத் தயார்’ என்று ஆண்களுக்குத் தெரிவிக்கின்றன. இந்த வாசனை 8 நாட்களுக்கு வலுவாக இருக்கும். பின்னர் 14 நாள்களில் மெதுவாகக் குறையும்.
ஆண் நண்டுகள் பெண்ணின் வாசனையை உணர்ந்தவுடன் அதைப் பாதுகாக்க ஆரம்பிக்கின்றன. அந்தச் சமயத்தில் மற்ற ஆண் நண்டுகளுடன் தேவைப்பட்டால் சண்டையிடவும் தயாராகின்றன. சில நண்டுகள் தங்கள் கவ்விகளைக் கொண்டு மணலில் தட்டுகின்றன. இந்த அதிர்வுகள் நிலத்தின் வழியாகப் பயணித்து மற்ற நண்டுகளை அடைகின்றன. ’இங்கே நல்ல உணவு இருக்கிறது’ என்று சொல்லவும், ’இது என் பகுதி, வராதே’ என்று எச்சரிக்கவும் இது உதவுகிறது.
நண்டால் ஒலி, காட்சி, வாசனை, அதிர்வு என்று நான்கு வழிகளிலும் தொடர்புகொள்ள முடிகிறது. நண்டுகள் கூட்டமாக இருக்கும்போது ஒன்றோடு மற்றொன்று ஆலோசித்து முடிவுகள் எடுக்கின்றன.
ஆண் நண்டுகள் முதன்மையாகக் காட்சி சமிக்ஞைகள் மூலம் தொடர்புகொள்கின்றன. பெண் நண்டுகள் ரசாயன ஃபெரோமோன்கள் மூலம் தொடர்புகொள்கின்றன.
நண்டுகளின் தொடர்பு மொழி பற்றிய ஆராய்ச்சிகள் மேலும் நடந்து வருகின்றன. வரும் காலங்களில் மேலும் வியப்பூட்டும் சில தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.
- கட்டுரையாளர், எழுத்தாளர் | தொடர்புக்கு : writernaseema@gmail.com
முந்தைய அத்தியாயம் > மண்புழுக்கள் எவ்வாறு தொடர்புகொள்கின்றன? | உயிரினங்களின் மொழி - 26
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT