Published : 09 Jul 2025 07:42 AM
Last Updated : 09 Jul 2025 07:42 AM
‘இங்கே பலரும் காயம் அடைந்துள்ளோம். வெளியேற முடியாதபடி சிக்கிக் கொண்டிருக்கிறோம்.’ - இப்படி ஒரு செய்தியை எழுதி, புறா ஒன்றின் காலில் கட்டினர். நேரம் பார்த்து அதைப் பறக்கவிட்டனர். எதிரிகளின் துப்பாக்கிகள் விழித்திருந்தன. அந்தப் புறா, தரையில் வீழ்ந்து மடிந்தது.
இரண்டாவது புறாவின் மூலமாகவும் செய்தி அனுப்ப முயற்சி செய்தனர். அதுவும் எதிரிகளின் தோட்டாக்களுக்குத் தப்பவில்லை. இன்னும் எஞ்சி இருப்பது ஒரே ஒரு புறாதான். அதுவும் வீழ்த்தப்பட்டால், அங்கே சிக்கியிருக்கும் இருநூற்றுச் சொச்ச ராணுவ வீரர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. மேஜர் சார்லஸ் வைட் விட்லெஸி, பெரும் குழப்பத்துடன் யோசித்துக் கொண்டிருந்தார்.
முதல் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி பெரிதாக இல்லை. ரேடியோவைப் பயன்படுத்துவது அப்போது கடினமான ஒன்றாக இருந்தது. ஆகவே புறாக்களைப் பெருமளவில் பயன்படுத்தினார்கள். அவை சராசரியாக மணிக்கு ஐம்பது மைல்கள் வரை பறந்து செல்பவை.
பயிற்சி கொடுப்பது எளிது. போர்க்களம் என்றாலும் எதிரிகளுக்குப் போக்குக் காட்டி தப்பித்துச் செல்லும் திறனும் கொண்டவை. அமெரிக்க ராணுவத்தில் ஏகப்பட்ட போர்க்களத் தூதுப்புறாக்கள் செய்திகளைச் சுமந்து சென்று கொண்டிருந்தன.
1918. முதல் உலகப் போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. வீழ்ச்சியின் பாதையில் ஜெர்மனி தடுமாறிக் கொண்டிருந்தது. பிரான்ஸின் வடகிழக்கு எல்லையில் அர்கோன் காடு, மியூஸே ஆறு அமைந்திருக்கின்றன.
அதற்கு அந்த அந்தப் பக்கம் ஜெர்மனி. 12 லட்சம் அமெரிக்க வீரர்களும், 8 லட்சம் பிரெஞ்சு வீரர்களும், அவர்களை எதிர்த்து சுமார் 4.5 லட்சம் ஜெர்மானிய வீரர்களும் பங்கேற்ற மிகப் பெரிய மோதல், மியூஸே-அர்கோன் முனையில் செப்டம்பர் 26 அன்று ஆரம்பமானது.
அமெரிக்காவின் 77வது டிவிஷனைச் சேர்ந்த சுமார் 550 ராணுவ வீரர்கள், அங்கே போரிட்டுக் கொண்டிருந்தனர். பலர் கொல்லப்பட்டிருந்தனர். பலர் காயமடைந்திருந்தனர். அந்த அக்டோபர் 2 அன்று, அர்கோன் காட்டுப்பகுதியில் ஒரு மலைச்சரிவில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். அந்தப் பக்கம் ஜெர்மானிய எல்லை. குவிந்திருக்கும் ஜெர்மானிய ராணுவம். தப்பித்து வெளியேற எந்தப் பக்கமும் வழியில்லை. அந்த அமெரிக்க வீரர்களுக்கான உணவுப் பொருள் விநியோகமும் தடைபட்டுப் போனது.
அக்டோபர் 4 அன்று அந்தப் பகுதியில் அமெரிக்கக் கனரக பீரங்கிகள், ஜெர்மனியின் எல்லையை நோக்கிக் குண்டுகளை வீசின. அவர்களுக்கு அமெரிக்க வீரர்கள் அந்த எல்லையில் சிக்கியிருப்பது தெரியாது. அந்தத் தாக்குதலில் சுமார் 30 அமெரிக்க வீரர்கள் சொந்த நாட்டின் குண்டுகளாலேயே கொல்லப்பட்டனர்.
அந்த டிவிஷனுக்குப் பொறுப்பாக இருந்த அமெரிக்க ராணுவ மேஜர் சார்லஸ் வைட் விட்லெஸி கையில் அப்போதைக்கு மூன்றே மூன்று புறாக்கள் மட்டும் இருந்தன. அமெரிக்க முகாமுக்கு எப்படியாவது தகவல் அனுப்பி உதவி கேட்க வேண்டும். வானில் புறா ஒன்று பறந்தாலே ஜெர்மானிய வீரர்கள் வசமிருந்த MG08 இயந்திரத் துப்பாக்கிகள் விடாமல் சுட்டன. எதிரிகளின் எந்தச் செய்தியும் தங்களை மீறிக் கடந்து போய்விடக் கூடாது. அது என்ன செய்தி என்பதை அறிவதும் முக்கியம்.
அப்படித்தான் மேஜர் சார்லஸ் தூது அனுப்பிய இரண்டு புறாக்கள் கொல்லப்பட்டிருந்தன. மூன்றாவதாக அவர் கையில் மிச்சமிருந்தது, NURP 18 EAD 615 என்கிற அடையாள எண் கொண்ட கடைசிப் புறா. இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவின் ராணுவ சேவைக்காக அனுப்பப்பட்ட இந்தப் புறாவின் செல்லப் பெயர், செர் அமி (Cher Ami).
‘நாங்கள் இவ்விடம் இருக்கிறோம். தயவுசெய்து தாக்குதலை நிறுத்துங்கள்’ என்று எழுதி, இறுதி நம்பிக்கையான அந்தப் புறாவை, இறுதிச் செய்தியுடன் பறக்கவிட்டனர். ஜெர்மானியர்களின் துப்பாக்கிகள் படபடத்தன. தோட்டாக்களின் பாய்ச்சலுக்கு இடையே தைரியமாகப் பறந்து முன்னேறியது செர் அமி. அதன் மார்புப் பகுதியைத் தோட்டா ஒன்று தாக்கியது. செர் அமி தரையில் வீழ்ந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க வீரர்களின் மூச்சு நின்று போனது. எல்லாம் போனது… இனி அவ்வளவுதான். மரணமே, நாங்கள் காத்திருக்கிறோம்.
அந்த ராணுவ வீரர்கள் நம்பிக்கையை முற்றிலும் இழந்த கணத்தில், செர் அமி உடலில் அசைவு. ரத்தக் காயத்துடன் எழுந்து நின்றது. உடலை ஒருமுறை சிலுப்பியது. தரையெங்கும் ரத்தச் சிதறல்கள். செர் அமி சிறகுகளை விரித்தது. மீண்டும் பறந்தது, உயரமாக, இன்னும் உயரமாக, முழு நம்பிக்கையுடன், தளராத வேகத்துடன். ஜெர்மானியர்களின் துப்பாக்கிகள் இந்த முறை தோற்றுப் போயின.
அரைமணி நேரத்தில் சுமார் 25 மைல்கள் பயணம் செய்து, அமெரிக்க ராணுவ முகாமுக்கு ரத்தம் ஒழுக வந்து சேர்ந்தது செர் அமி. அதன் ஒரு கால் உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. முகாமிலிருந்த மருத்துவர்கள், அதற்கு முதலுதவி செய்து, காயங்களுக்கு மருந்து போட்டு, உயிரைக் காப்பாற்றினர்.
அந்த சாகசப் பயணத்தில், செர் அமி தனது வலது காலையும் ஒரு கண்ணின் பார்வையையும் இழந்திருந்தது. அது கொண்டுசேர்த்த செய்தியின் மூலம், அமெரிக்க பீரங்கிகள் அந்தக் காட்டுப்பகுதியில் தாக்குதலை நிறுத்திக்கொண்டன. மறுநாளே ஜெர்மானிய எல்லைப் பகுதியில் தாக்குதலை நடத்தி, அங்கே சிக்கியிருந்த 77வது டிவிஷன் வீரர்களைக் காப்பாற்றினர். ஆம், செர் அமியால் சுமார் 200 அமெரிக்க ராணுவ வீரர்கள் காப்பாற்றப்பட்டனர்.
போரின் முடிவில் செர் அமி, அமெரிக்காவுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அதைக் கௌரவிக்கும் விதமாக பிரான்ஸ் ராணுவத்தின் Croix de Guerre பதக்கமும், அமெரிக்கப் புறா வளர்ப்போர் சங்கத்தின் தங்கப் பதக்கமும் அளிக்கப்பட்டன. காயங்களின் காரணமாக செர் அமி நீண்ட காலத்துக்கு வாழவில்லை. 1919, ஜூன் 13 அன்று இறந்து போனது. அதன் உடல் பதப்படுத்தப்பட்டு அமெரிக்காவின் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. செர் அமி என்கிற பிரெஞ்சு சொற்களுக்கான பொருள், ‘பிரியத்துக்குரிய நண்பன்’.
(சந்திப்போம்)
- writermugil@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT