Published : 09 Jul 2025 07:45 AM
Last Updated : 09 Jul 2025 07:45 AM
பாழடைந்த வீட்டின் பொந்தில் ஓர் எலி வாழ்ந்துவந்தது. பழைய பொருட்களைப் போட்டு வைக்கும் அறையில் ஒரு பூனை வசித்துவந்தது. இரண்டும் அடிக்கடி நேரில் பார்த்துக்கொள்ளும். ஒரு நாள் எலியைத் தன் வீட்டுக்குப் பூனை அழைத்தது. “எலியே, நாம் இருவரும் ஏன் சேர்ந்து வசிக்கக் கூடாது? நாம் அந்த மணிக்கூண்டு கோபுரத்தில் ஒருவருக்கு இன்னொருவர் துணையாகச் சேர்ந்து வாழலாம். நம் உணவையும் பகிர்ந்து கொள்ளலாம்” என்றது.
எலி யோசித்தது. அந்தக் காலத்தில் அதன் கொள்ளுத் தாத்தாவை ஏதோ ஒரு பூனை தின்றுவிட்டதாக வீட்டில் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதனால் பயமாகத்தான் இருந்தது. ஆனால், பூனையின் முகம் அழகாக இருந்தது. அதன் புன்னகையும் அழகாக இருந்தது. சரி, நமக்கும் ஒரு துணை இருந்தால் நல்லது என்று நினைத்து ஒப்புக்கொண்டது.
இரண்டும் தங்களிடமிருந்த காசுகளை எல்லாம் சேர்த்து, ஒரு பானை நிறைய பாலாடைக்கட்டியை வாங்கிக் கொண்டன. இரை தேட முடியாத நேரத்தில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று மணிக்கூண்டுக்குப் பின்னால் ஒரு பொந்தில் பானையை ஒளித்து வைத்தன. வெளியில் செல்ல முடியாதபோது மட்டும் சாப்பிட வேண்டும் என்று ஒப்பந்தமும் இட்டுக் கொண்டன.
மணிக்கூண்டு கோபுரத்துக்குப் பூனை எளிதாகத் தாவித் தாவி ஏறிவிடும். எலிக்குதான் படியில் ஏறி இறங்கி கால் வலித்தது. ஆனாலும் இந்த ஏற்பாடு எலிக்குப் பிடித்திருந்தது. ஒளித்து வைத்திருக்கும் பாலாடைக் கட்டியைச் சாப்பிட பூனைக்கு ஆசையாக இருந்தது. ஒரு நாள் அது எலியிடம், “என் அக்கா குட்டி போட்டிருக்கிறாள். நான்தான் தாய் மாமா. பெயர் வைக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டுச் சென்றது.
எலிக்குத் தெரியாமல் நேராகப் பொந்துக்குச் சென்று, பானையின் மேல் பக்கம் இருந்த பாலாடைக்கட்டியை எடுத்துத் தின்றது. பின்னர் அங்கேயே படுத்துத் தூங்கி விட்டு, இரவு வீட்டுக்கு வந்தது. “விசேஷம் நல்லபடியாக நடந்ததா? குட்டிக்கு என்ன பெயர் வைத்தீர்கள்?“ என்று கேட்டது எலி. “மேலே காலி என்று பெயர் வைத்தோம்” என்றது பூனை.
இதென்ன விநோதமான பெயராக இருக்கிறதே! சரி, பூனைக் குடும்பங்களில் இப்படித்தான் பெயர் வைப்பார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டது எலி. சில நாட்கள் கழித்து, பூனைக்குத் திரும்பவும் பாலாடைக்கட்டி சாப்பிட ஆசை வந்தது. எலியிடம் சென்று, “எங்கள் இரண்டாவது அக்கா குட்டி போட்டிருக்கிறாள். பெயர் வைக்கும் விழாவுக்குப் போகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றது. “சரி, நல்ல பெயராக வையுங்கள்” என்றது எலி.
கடந்த முறை போலவே பூனை சத்தமில்லாமல் சென்று, பானையைத் திறந்து பாதி பாலாடைக் கட்டியைத் தின்றுவிட்டது. நன்றாகத் தூங்கிவிட்டு இரவு வீடு வந்தது. வாசலில் உட்கார்ந்திருந்த எலி, “இந்தக் குட்டிக்கு என்ன பெயர்?” என்றது. “பாதி காலி ” என்றது பூனை. “என்னது, பாதி காலியா? இப்படி ஒரு பெயரை நான் கேள்விப்பட்டதே இல்லையே“ என்றபடி எலி உள்ளே சென்றது. சில நாட்களில் பூனைக்கு மீண்டும் பாலாடைக்கட்டி சாப்பிட ஆசை வந்துவிட்டது.
“எலியே, என் அக்காவுக்கு மீண்டும் ஒரு மகள் பிறந்திருக்கிறாள். நான்தான் பெயர் வைக்க வேண்டும் ” என்றது பூனை. “உங்கள் குடும்பம் ரொம்பவும் பெரியது! வரிசையாகக் குட்டி போட்டுக்கொண்டே இருக்கிறார்களே ” என்றது எலி. அதற்குள் பூனை போய்விட்டது. இந்த முறை பானையில் இருந்த பாலாடைக்கட்டி முழுவதையும் தின்றுவிட்டது. இரவு மிகவும் தாமதமாக வந்தது. “புதுக் குட்டிக்கு என்ன பெயர் வைத்தீர்கள்? ” என்றது எலி.
“எல்லாம் காலி என்று வைத்தோம்” என்றது பூனை. எலியால் நம்பவே முடியவில்லை. “நல்லவேளை, நான் உங்கள் குடும்பத்தில் பிறக்கவில்லை. எனக்கெல்லாம் இப்படிப் பெயர் வைத்தால் பிடிக்காது” என்று சொல்லிவிட்டு, தூங்கச் சென்றது. அதற்குப் பிறகு பெயர் சூட்டு விழா எதுவும் வரவில்லை. பனி கடுமையாகப் பொழிந்தது. இரை தேட வெளியில் போக முடியவில்லை.
“பூனையே, நம் பானையை எடுக்கும் நேரம் வந்துவிட்டது” என்று எலி சொன்னவுடன், பூனைக்குப் பகீரென்றது. பூனை தயக்கத்தோடு, “சரி, வா போகலாம்” என்றது. பொந்தில் இருந்த பானையை எட்டிப் பார்த்தால் ஒன்றும் இல்லை. அப்போதுதான் பூனைக் குட்டிகளுக்கு வைத்த பெயர்கள் எல்லாம் எலியின் நினைவுக்கு வந்தன.
மேலே காலி, பாதி காலி, எல்லாம் காலி! “ஐயோ, நீ இவ்வளவு மோசமான பூனை என்று தெரியாமல் முட்டாளாக இருந்திருக்கிறேன்”என்று கத்தியது எலி. “பூனைகள் எல்லாம் அப்படித்தான் இருப்போம்” என்றபடி, எலியைப் பிடிக்கப் பூனை பாய்ந்தது. ஆனால், எலி சட்டென்று பொந்துக்குள் குதித்து மறைந்து விட்டது. அன்றிலிருந்து எந்த எலியும் பூனைகளை நம்புவதில்லை.
- க்ரிம் சகோதரர்கள்
- தமிழில் ச.சுப்பாராவ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT